பக்தியை ஒரு ஓரமாக தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் மகாபாரதம் கற்றுக்கொடுக்கும் பலவும் நாகரிக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட/தவிர்க்கவேண்டிய கூறுகள்தான்.
பெரும்பாலான பக்திசார் கதைகளும் கீழ்த்தரமானவையாகவே இருக்கின்றன. பெண்கள் குளிப்பதை எட்டி பார்ப்பதையும், ஆடைகளை எடுத்து ஒளித்து வைத்து விளையாடுவதையும் நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியுமா?
ஏ ஆணாதிக்க சமூகமே என்று என்டர் கவிதைகள் எழுதினாலும் சிறுவயது முதலே பெண் என்பவள் ஆணின் சொத்து, ஒரு ஆண் எந்த பெண்ணை வேண்டுமானாலும் படுக்கைக்குக் கூப்பிடலாம் அதுவும் படிநிலையில் கீழ்சாதியாக இருந்தால் அதில் கேள்வியே கிடையாது, ஒழுக்கம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான், ஒருவனைத் திட்ட வேண்டுமென்றால்கூட அவனது தாயின் ஒழுக்கத்தைக் சந்தேகப்படவேண்டும் என்பதுபோன்ற சிந்தனைகள் பக்தியின் பெயராலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றன.
தனிமனித ஒழுக்கம் தவிர ஒரு தரமான ஆக்க சிந்தனைகளுடன் கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கத் தேவையான கருத்துக்களை கொண்டிருக்கிறதா என்றால் அதுவுமில்லை. கிட்டத்தட்ட எல்லா பக்தி புராணங்களும் தனிமனித சுரண்டலை, அடிமைத்தனத்தை, பெண்களை சொத்தாக பார்க்கும் மனநிலையை, கேள்வியே இல்லாத கீழ்படிதலை ஆதரிப்பதும், போரை fancy-ஆக, fantasyஆக romanticize செய்கின்றன.
பெரிய நிறுவனங்களின் தரக்கட்டுப்பாட்டுத் துறையில் ஒரு பிரபல கதை உண்டு. ஒருமுறை IBM நிறுவனம் முதன்முறையாக கணிணி சில்லுகளை தயாரிக்க அமெரிக்காவுக்கு வெளியே ஜப்பான் நிறுவனம் ஒன்றிற்கு ஆர்டர் கொடுத்துப் பார்க்கலாம் என்று நினைத்ததாம். பரீட்சார்த்த முறையில் தரும் முதல் ஆர்டர் என்பதால் ஒரு லட்சம் சில்லுகளுக்கு பத்து சில்லுகள் மட்டுமே defect piece ஆக இருக்கலாம் என்ற நக்கலான குறிப்புடன் ஆர்டர் கொடுத்ததாம். ஜப்பான் நிறுவனம் ஒரு இலட்சம் சில்லுகளை தயாரித்து அனுப்புகையில் ‘எங்களுக்கு அமெரிக்காவின் வர்த்தக விதிமுறைகள் புரியவில்லையா அல்லது உங்களது ஆங்கிலம் புரியவில்லையா என்று தெரியவில்லை. ஒரு மில்லியன் தயாரிப்புகளுக்கு ஒரு defect piece என்பதுதான் எங்களது அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு. எனவே நீங்கள் கேட்ட ஒரு இலட்சம் சில்லுகளோடு பத்து defect சில்லுகளைத் தனியாக தயாரித்து பேக் செய்து அனுப்பியிருக்கிறோம்; பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அனுப்பிவைக்கவும்’ என்று இருந்ததாம். அத்தகைய உயர்ந்த தரத்தை ஒரு நிறுவனம் கொண்டிருக்கவேண்டுமனால் அது பண்பாட்டுக் கூறாக மக்களிடம் இருக்கவேண்டும். இல்லையெனில் நிறுவனத்தின் மதில் சுவருக்குள் மட்டும் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுக் கொள்கைகள் ஒருபோதும் வெற்றிபெறாது. நம்மூரில் சிக்ஸ் சிக்மா, 5S, TQM என பலவற்றை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் ஏன் பெரும் பொருட்செலவு செய்கின்றன என்பதற்கு நமது பண்பாட்டுக் கூறுகளும் ஒரு காரணம்.
ஏன் என்ற கேள்வி பகுத்தறிவில் மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்விலும், விளைவுகளுக்குப் பின்னரும் கேட்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அது உண்டாக்கும் implications எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏன் சீதை இராமனுடன் வனவாசம் போனாள்? கணவனின் எந்த முடிவையும் கேள்வியில்லாமல் ஏற்றுக்கொண்டதால். ஏன் இராமன் காட்டுக்குச் செல்ல ஒப்புக்கொண்டான்? தசரதனின் எந்த ஒரு வேண்டுகோளையும் அவன் சீர்தூக்கிப் பார்த்தோ, மறுத்தோ பேசாமல் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தால். ஏன் தசரதன் இராமனை காட்டுக்கு அனுப்பினான்? கைகேயி பெற்றிருந்த இரு வரங்களில் ஒன்றை நினைவூட்டி கேட்டு, இராமனது முடிசூட்டுவிழாவை நிறுத்துவதற்குத்தான். ஏன் தசரதன் அத்தகைய வரங்களை கைகேயிக்கு வழங்கினான்? வெகு காலத்துக்கு முன்பு நடந்த போரில் காயமடைந்த தசரதனுக்கு கைகேயி உதவியதன் கைமாறாக இரண்டு வரங்களை அளித்திருந்தான். சிறந்த போர் வீரனான தசரதன் ஏன் போரில் காயமடைந்து கைகேயி உதவும் நிலைக்கு ஆளாகிறான்? போரின்போது எதிர்பாராதவிதமாக தசரதனது தேர்ச்சக்கரம் உடைந்துவிடுவதால் எதிரியின் தாக்குதலுக்கு ஆளாகிறான். அந்த தேர்ச்சக்கரம் உடையாமல் இருந்திருந்தால் இத்தனை லோலாயி நடந்திருக்காதல்லவா? ஆக, சக்கரம் தயாரித்தவர்கள் தரத்தில் கோட்டை விட்டதுதான் இத்தனை இரகளைகளுக்கும் காரணம். இதைத்தான் மேலாண்மையில் Root cause analysis என்பார்கள். தரமில்லாத ஒரு பொருளைத் தயாரித்தால் எதிர்காலத்தில் இந்த மாதிரி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்காமல் லீலை என்று தேவையில்லாத கண்ட கருமாந்திரங்களை சொல்லியல்லவா வளர்க்கிறோம்.
இதையெல்லாம் சொன்னால் திருக்குறளில் காமம் இல்லையா, அகநானூறில் காமம் இல்லையா என்று பக்தாஸ்கள் ‘புதிய பரிமாணத்தில்’ கேள்வி கேட்டு சிலிர்க்க வைக்கிறார்கள். மாட்டுக்கறி தின்பது இந்துமத உணர்வுகளுக்கு விரோதமானது என்று உண்பவர்களைக் கொல்லச்சொல்லி தூண்டி விடுபவர்கள் ஏன் மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்துகிறார்கள் என்ற Root cause analysis செய்வதெல்லாம் அவர்களால் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.
மாதொருபாகன் மேட்டரில் இவ்வளவு சத்தம் வரக் காரணம் ஒரு தெருவில் இருக்கும் கவுண்டர் சாதி பெண்களை மொத்தமாக தேவடியாள் என்று சொல்கிறது; அது தனிமனித உரிமை மீறல் என்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியதாக சொன்ன ஆசிரியர் அதற்கான ஆதாரங்களைத் தரவில்லை என்றார்கள். ஆதாரமில்லாமல் இப்படியெல்லாம் எழுத யார் அதிகாரம் கொடுத்தது என்கிறாரகள். ஆதாரமில்லையெனில் அது ஒரு புனைவு; கற்பனைக் கதை. இதே கவுண்டர் சாதி அந்த பகுதியில் பறையர், சக்கிலியர் சாதியினரை எப்படி நடத்தினார்கள், நடத்தி வருகிறார்கள் என்பதைப்பற்றி பல நூல்கள் வந்திருக்கின்றன. தங்களது பண்பாடுகள் மிக உயர்வானது என்று சொல்லும் இனமான சிங்கங்கள் பேருக்காவது நாங்கள் அப்படியெல்லாம் தரக்குறைவாக யாரையும் நடத்துவதில்லை என்று சொல்லியிருக்கிறார்களா?
ஈமு கோழி திட்டங்கள் சுத்தமான ஃப்ராடு வகை என்றாலும் சுசி ஈமு குருவின் சாதிதானே பல நீதிக்கும், நேர்மைக்கும் பேர்போன கவுண்டர்களை போட்டிக்கு பண்ணை ஆரம்பிக்க வைத்தது? ஊர்ப்பணத்தை ஏமாற்றிவிட்டு ஓட்டம் பிடித்து பின்னர் கொலை வழக்கில் சிக்கி வாட்சப்பில் ஆடியோ ரிலீஸ் செய்த 420 வகை ஆளை மாவீரன் என கொண்டாடுவது இந்த கவரிமான் சமூகம்தானே?
பெண்களை உயர்வாக மதிப்பதில் எங்களைப்போன்ற சாதி வேறு எதுவுமேயில்லை; எழுதிங்கள், இணைச்சீர் எல்லாம் எதற்கு வைக்கிறார்கள் தெரியுமா என்று வெட்டிப்பந்தா பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது. தமிழக சாதிகளிலேயே வீண் பந்தாவிலும், வெட்டி ஜம்பத்திலும், சொந்தக்காரன் ஒருவன் முன்னேறிவிட்டால் பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும் வெந்து சாவது இந்த கவுண்டர் சமூகமாகத்தான் இருக்கமுடியும். ஒரு குடும்பம் கஷ்டப்பட்டு முன்னேறினால் பொறாமையினால் பேசுவதில் ஒரு தராதரமே இல்லாமல் அந்த குடும்ப பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கி கதைப்பது வேறு சாதிகளில் இவ்வளவு இருக்க வாய்ப்பேயில்லை. இதை நான் சொல்லவில்லை. “ஒத்தையடிப் பாதை” என்ற நூலில் சக்தி மசாலா நிறுவனரின் மனைவி சொல்லியிருக்கிறார்.
மாதொருபாகன் அந்த பகுதி பெண்களை சந்தேகப்பட்டதால் வந்த பிரச்சினையல்ல; ஆண்களின் ஆண்மையை சந்தேகப்பட்டதால் வந்த எழுச்சி.