கேள்வி: தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் ஒப்பந்த சாகுபடி குறித்த சட்டம் வேளாண்மையில் பெரிய புரட்சியை உண்டு பண்ணுமா?
பதில்: ஒரு புண்ணாக்கும் பண்ணாது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வேளாண் விளைபொருட்களைக் குறிபிட்ட வியாபாரிகள் மூலமாகத்தான் விற்க வேண்டும் என்பது மாதிரியான APMC Act முதலில் இருந்தே இல்லை. கிட்டத்தட்ட ஒரு free market முதலில் இருந்தே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வியாபாரி ஆகலாம், விவசாயிகளும் யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். மண்டிக்கு அனுப்பி சீட்டு வாங்கித்தான் விற்க வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவுமில்லை.
தற்போது அமுலுக்கு வந்துள்ள ஒப்பந்தச் சாகுபடி சட்டம் draft ஆக கடந்த ஆண்டு சுற்றிக்கொண்டு இருந்தபோது கிண்டிலில் போட்டு வரி வரியாக படித்துப் பார்த்ததில் கொஞ்சம் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு இருபது முப்பது அதிகாரிகள் சும்மா மிக்சர் தின்னுகொண்டு உட்கார்ந்திருக்கப் போவது உறுதி என்பது உறுதியாகப் பட்டது.
மற்றபடி ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனம் எக்காரணத்துக்காவும் விவசாயிகளின் நிலத்தில் உரிமை கோர முடியாது. கார்ப்பரேட் கம்பெனிக்காரன் நிலத்தையெல்லாம் வாங்கிவிடுவான் என்ற வாட்சப் வதந்திக்காரன்களை நம்ப வேண்டாம். பிரச்சினைகள் ஏதாவது வந்தால் உரிமையியல் வழக்காக வருடக்கணக்கில் நீதிமன்றத்துக்கு நடந்து பாரத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனம் ஒப்பந்த மதிப்பில் 0.3%-உம் அதற்கு 18% ஜிஎஸ்டி-யும் கட்ட வேண்டும். இப்படி ஒப்பந்தம் எல்லாம் போட்டால் அப்புறம் அதிகாரிகளுக்கு தீபாவளி மாமூல் அழுது தொலைக்க வேண்டும் என்று கம்பெனிகளுக்கு தெரியாததல்ல.
இந்த சட்டத்தின் draft-இல் ______ state/UT என்று இருந்தது. அந்த கோடிட்ட இடங்களில் எல்லாம் தமிழ்நாடு என்று எழுதி வைத்து ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது.
சொல்லப்போனால் பழுது பார்க்க வேண்டியது அரசு வேளாணமைத்துறையைத்தான். அதை விடுத்து என்னென்னமோ பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பணியிட மாறுதலுக்கு குறைந்தது ஒன்றரை இலட்ச ரூபாய், பதவி உயர்வுக்கு இரண்டு இலட்சம் என ரேட் கார்டு போட்டு வசூல் செய்கின்றனர்.
இந்த தொகையை ஈடுகட்ட விதை, பூச்சிக்கொல்லி, உர விற்பனை உரிமம் பெற்ற கடைக்காரர்களிடம் ஆயிரம் கொடு, இரண்டாயிரம் கொடு என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் மூலம் மானியம் வழங்க வழிவகை செய்து அவர்கள் கெளரவத்துடன் வாழ ஏதாவது அரசாங்கம் செய்ய வேண்டும். அதிகாரிகளின் ஜீப் கிளம்பிய பின்னர் ”கை, கால் நல்லாத்தானே இருக்குது, இவனுங்களுக்கு என்ன கேடு?” என்று கடைக்காரர்கள் ஏக வசனத்தில் பேசுவது நாரசாரமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.