பெரும்பாலான நிறுவனங்களில் பெரிய தலைகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால் நிச்சயமாக Innovation, Quality, Pipeline, Deliverables, Out of box thinking போன்ற பதங்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். அதிலும் மீட்டிங் முடித்தபிறகு பாரில் பாட்டிலைத் திறந்தவுடன் சொற்பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். தான் ஆக்டிவா வண்டியில் பக்கத்திலுள்ள மளிகைக்கடைக்கு சென்று உப்பு வாங்கியபோது கற்றுக்கொண்ட மேனேஜ்மென்ட் லெஸன், புத்தாண்டன்று ஜிம்மில் சேர உறுதிபூண்டு அதை பொங்கல்வரை பின்பற்றியதால் கிடைத்த அசாத்திய வில்-பவர் என பல அரிதான விசயங்களைக் என்னைப்போன்ற பச்சாக்களுக்கு கற்றுத்தருவார்கள். அந்த அதிகாரி சைவப்பிராணி என்றால் கடைசிவரை பனீர் டிக்காவை மட்டுமே பல்லுக்குச்சியில் குத்தி விழுங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
எல்லா நிறுவனங்களும் பத்து கிராம் விதையை 15×12 சென்டிமீட்டர் கவரில் போட்டு காலங்காலமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தில் ஒரு புதிய விற்பனைத்துறை உயரதிகாரி ஆட்டோமொபைல் துறையிலிருந்து வந்தார். வருவாயைக் கூட்ட புதிதாக வரும் ஒவ்வொரு அதிகாரியும் செய்யும் முதல் வேலை காஸ்ட் கன்ட்ரோல் என்றபெயரில் செலவினங்களைக் குறைப்பது; அதில் அடிப்படையே சிலநேரங்களில் ஆட்டம் கண்டுவிடும். அவரது ஆலோசனைப்படி திடீரென விதை பாக்கெட்டின் அளவைக் குறைத்து சந்தைக்கு அனுப்பினார்கள். பேக்கிங்களில் மாற்றம் செய்தாலும் அதைப்பற்றி வர்த்தகச் சங்கிலியில் உள்ளவர்களுக்கு முறையாக போஸ்டர் ஒட்டி தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையும் பின்பற்றப்படவில்லை. வணிகர்கள் ‘என்னய்யா இது ஹான்ஸ் பாக்கெட் மாதிரி, பத்து கிராமுக்கு முன்னூறு ரூவா வாங்கறீங்க கொஞ்சம் பெரிய பாக்கெட் போட்டாத்தான் என்ன கேடு?’ என்று இரைந்தார்கள். விவசாயிகள் இது போலி விதை பாக்கெட் என்று நிராகரித்துவிட்டு பழைய பாக்கெட் விதைதான் வேண்டும் என்று கேட்க ஆரம்பிக்க விசயம் மேலிடத்துக்குச் சென்றது. If you innovate something there will be initial resistance; but you should not give up என்றெல்லாம் கதை சொல்லி பழைய பாக்கெட் திரும்ப வந்தது. பாக்கெட் அளவைக் குறைப்பதில் வாடிக்கையாளரின் எந்த ஒரு பிரச்சினை அல்லது எதிர்பார்ப்புக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதால் இதில் என்ன இன்னோவேஷன் என்று நாங்களெல்லாம் குழம்பித்தான் போனோம்.
ஃபார்ச்சூனர் போன்ற மகிழுந்துகளில் ஒரு சக்கரத்திற்கு ஆறு போல்ட் இருக்கும். ஏனைய பன்முக, விளையாட்டு பயன்பாட்டு ஊர்திகள், செடான்களில் ஐந்து போல்ட் இருக்கும். அடுத்தகட்ட ஸ்விஃப்ட், ஆல்ட்டோ போன்ற ஹேட்ச்பேக் வகையறாக்களில் நான்கு போல்ட் என்பது industry standard. அண்மையில் பிஸினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் Renault நிறுவன உயரதிகாரி ஒருவரின் பேட்டி வந்திருந்தது. அவர்களது ஆராய்ச்சிப்பிரிவு அதிகாரிகள் கடுமையாக உழைத்து புத்திசாலித்தனமாக வாகனத்தின் டிசைனை வடிவமைத்தார்களாம். ஒரு காருக்கு 16-18 கிலோ நட், போல்ட், ஸ்க்ரூக்கள் வழக்கமாக தேவைப்படுவதாகவும், ரெனோ தங்களது சாமர்த்தியமான டிசைன் காரணமாக 5-6 கிலோ அளவுக்கு குறைத்ததால்தான் Kwid மாடல் வெற்றிகரமாக குறைந்தவிலை காராக அறிமுகப்படுத்த முடிந்தது என்று பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். அடடா இது தெரியாமல் பல டன் இரும்பு பொருட்களை பல நிறுவனங்கள் வீண்டிக்கின்றனரே என்ற ஆச்சரியத்துடன் ஒரு க்விட் காரை சுற்றிவந்து பார்த்தபோது சக்கரத்தில் மூன்று போல்ட் மட்டுமே இருந்தது. ஒரு டன் எடையுடைய மகிழுந்து நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது அதன் எடை ஐந்து போல்ட்டுகள் வழியாக தரைக்கு கடத்தப்படும்போதும், மூன்று போல்ட் வழியாக கடத்தப்படும்போதும் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஒரேமாதிரியாக இருக்குமா என்பதை அந்த துறை சார்ந்த பொறியாளர்கள்தான் சொல்லவேண்டும். நம் முன்னோர்கள் கடையாணி மட்டுமே உள்ள கட்டை வண்டிகளை பயன்படுத்தியதைக் காட்டி வருங்காலத்தில் ஒரு போல்ட் மட்டுமே இருக்கும் டிசைனும் வரலாம்.
ஆனால் இதை இன்னோவேஷன் என்று எப்படி சொல்கிறார்கள், வாடிக்கையாளர்களின் தேவையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பூர்த்திசெய்ய புதிதாக எதை சேர்த்திருக்கிறார்கள் என்று பார்த்தால் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.