பிப்ரவரி 2017-இல் எழுதியது:
ஈஷா யோகா கம்பெனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அந்த கம்பெனி அதிகாரிகள் (சீடர்கள் என்பது அவர்களாகவே சொல்லிக்கொள்வது) அவ்வப்போது பதிலளித்து வருகிறார்கள். அவர்களது பதில்களானது எப்போதும் How responsible we are என்ற தொணியில் இருக்கிறது. உங்கள் நிறுவனம் மீதோ, அந்த நிறுவனத்தில் இருப்பதால் தனிப்பட்ட முறையிலோ வைக்கப்படும் விமர்சனங்களை நேரடியாக தாக்காமல் பாசிட்டிவ் ஆன விசயங்களை முன்னிறுத்தி உணர்ச்சிவசப்படாமல் பொறுப்பாக பதில் சொல்லவேண்டும் என்பது மாதிரியான பயிற்சிகள் பொதுமக்கள்/வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது கார்ப்பரேட் கம்பெனிகளில் இயல்பாக நடக்கும் ஒன்று. இத்தகைய பொறுப்பான பதில்கள் தருமளவுக்கு அந்த கம்பெனி சீடர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதை கார்ப்பரேட் கம்பெனிகளின் மனித வளத்துறை ஆட்கள் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
ஏனெனில் தொழில்முறை யோகா நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் போல் அல்லாமல் தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப அமைப்பிலோ, சமூக, அலுவலக சூழலிலோ ஒரு சராசரி மனிதனாக இணைந்திருக்க முடியாத தற்குறிகளைக் கண்டறிந்து, அவர்களை பயிற்றுவித்து attrition இல்லாமல் கம்பெனி நடத்துவது ஒரு அரிய திறமை.
கோயமுத்தூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மாநகராட்சியால் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சிவராத்திரி விழாவுக்கு மோடி வருவதால் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்த்தப்பட்டிருப்பதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு பணிக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். விழா நடக்குமிடத்தில் குறைந்தது ஒருமாத காலமாவது 24 மணிநேரமும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்தாலொழிய இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்ய இயலாது. அவர்களுக்கும் இந்த விழாவுக்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள், காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் எத்தனை மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்? அவர்கள் அவர்களது ஊரிலேயே இருந்தால் மட்டும் தண்ணீர் தேவைப்படாதா என்று சாமர்த்தியமாக சிலர் கேள்வி கேட்கக்கூடும். ஈஷாவின் நில ஆக்கிரமிப்பு குறித்து பேசினால் ஏன் காருண்யா செய்யவில்லையா என்று கேட்பதுமாதிரி. இலட்சக்கணக்காணோர் பல மாவட்டங்களில் பரவலாக பயன்படுத்தும் தண்ணீரை, செயற்கையாக ஒரு விழா எடுத்து கூட்டம் கூட்டி வறட்சிகாலத்தில், ஒரு மாநகரத்தின் ஒருவார தண்ணீர் தேவையை ஒரேநாளில் காலி செய்துவிட்டு நீர் மேலாண்மை குறித்து சொற்பொழிவாற்றுவது அறம் என்றாகிவிட்டது. குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை முன்னுதாரணமாக வைத்து வணங்கும் சமூகத்தில் எதுவும் அறமே.
வனத்தை அழிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் ஈஷா யோகா கம்பெனி தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களை அமைத்து மரக்கன்றுகளை வழங்கி பசுமையை பாதுகாக்கிறது என்ற பதில் பிசிறில்லாமல் வருகிறது.
வனங்களிலும், நகர்ப்புறத்திலும் நடப்படும் மரக்கன்றுகளில் 51% மட்டுமே survive ஆகும் என்பது வனத்துறை நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதற்கும், நடப்படும் மரக்கன்றுகள் குறைந்தது இரண்டரை அடி உயரமாவது இருக்கவேண்டும். அதற்கு குறைவான உயரமிருப்பின் பல்வேறு காரணங்களால் தாக்குப்பிடித்து வளர்வது கடினம் என்பது தொழில்முறையில் நாற்றங்கால்களில் புழங்கி வருபவர்கள் அறிவர். வனத்துறையினரது நாற்றங்கால்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் அங்குள்ள கன்றுகளின் தரத்தை அவ்வளவு சீக்கிரம் குறைசொல்ல இயலாது.
ஈஷாவின் பல நர்சரிகளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் பெரும்பாலும் ஒன்றரை அடி உயரத்துக்கும் குறைவானவை. அவை தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு குறைந்த விலையில் விற்கப்படுவது, மரம் நடவேண்டும் என்ற ஆர்வமிருக்கும் மக்களுக்கு எளிதாக கிடைக்கச்செய்தது என பல சிறப்புகள் இருந்தாலும் அதன் impact என்பது மிகவும் குறைவு. ஈஷாவின் நாற்றங்கால்கள் வீட்டுமுன் இரண்டு மலைவேம்பு மரங்களை வாங்கிவந்து நடுவதற்கு ஏற்றவை; ஐந்து ஏக்கருக்கு அங்கே மலைவேம்பு வாங்கி நட விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஏன் அங்கே வாங்கக்கூடாது, நான் நட்டு வளர்த்துக்காட்டவா என்று தம் கட்டவேண்டாம்.
ஹியூகோ வுட் (Hugo Wood) என்ற ஆங்கிலேய காட்டிலாகா அதிகாரி ஆனைமலையில் வாழ்ந்தபோது நட்டு வளர்த்த வனத்தின் பரப்பளவு 650 சதுர கிலோமீட்டர். அவரது கல்லறைகூட அங்கேயே எழுப்பப்பட்டது. கடைசிவரை தனியாக வசித்துவந்த அவர் நடந்துசெல்கையில் விதைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கைத்தடியில் குத்திக் குத்தி நட்டுக்கொண்டே செல்வாராம். அவருக்கு முந்தைய அதிகாரிகள் ஏகத்துக்கும் மரங்களை வெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்து அரசிடம் நற்பெயர் எடுத்த காலகட்டத்தில் காடுகளின் மறுசீரமைப்பை முன்வைத்து பணியாற்றியவர். அத்தகைய பல அதிகாரிகளின் துணிச்சலான, சுதந்திரமான முடிவெடுக்கும் திறன்களையும் அதன் சாதக பாதகங்களையும் பயிற்சியின்போது பாடமாக படிக்கும் அதிகாரிகள்தான் இன்று செயற்கையான வன மகோத்சவ கொண்டாட்டங்களுக்கு அனுமதி தருகின்றனர்.
அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் பாவம். உண்மையைச் சொன்னதற்காக உயரதிகாரிகளைப் பணிநீக்கம் செய்த தலைவர் வருகிறார். உண்மையை எழுதியதற்கு ஆசிட் வீசிபவர்கள், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களின் படங்களுக்குக் கீழ் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆக, அவர்களும் அறம் சார்ந்த சமூக கவலைகளால் உந்தப்பட்டு அத்தனைக்கும் ஆசைப்படுவது இயல்புதானே.