சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூன்று பேர் நம்மை தேடிவந்து தூரத்து சொந்தம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தனர்.
“தம்பி, எதோ பெரிய மருந்து கம்பெனி, ஆங் அதான் மான்ஜாண்ட. அதுல வேல செய்றதா சொன்னாங்க”
“அது மான்ஜாண்ட இல்லீங்ணா, மான்சாண்டோ”
“ஆங், அதான் கழுத, அந்த பேரு கெரகம் வாய்ல வந்து தொலைய மாட்டேங்குது” என்று ஆரம்பித்து விசயத்துக்கு வந்தார்கள்.
“தம்பி, நம்மூர்ல ஒரு சங்கம் ஆரம்பிச்சு அதுல ஒரக்கடை, பூச்சிமருந்துக்கடை போட்ரலாம்னு இருக்கோம். தம்பி, நெறயா வெளியூர்லாம் போரீங்கலாம், நாலு கம்பெனிக்காரங்கலோட பழக்கம் இருக்கும். நீங்க நம்ம சங்கத்துக்கு ஒரு கன்ஜல்டன்ட்டா (consultant!) இருந்து எந்த பொருள் வெல ஏறுது, எரங்குதுன்னு கொஞ்சம் முன்னாடியே தகவல் குடுத்துட்டீங்கன்னா நாமளும் அத நெறையா எறக்கிவச்சு நாலு காசு பாக்கலாம். என்னடா அண்ணன் இப்படி உள்ளடி வேல செய்யச்சொல்லி கேக்கறேனேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம். தம்பிக்கு பீஸ் (fees!) தனியா பண்ணிக்குடுத்தர்றோம். என்ன நாஞ்சொல்றது?” என்று தன் அடிபொடிகளை பார்த்தார்.
அவர்களும் “கரெட்டுங் மாமா” என்று கோரஸ் சொன்னார்கள்.
ஒருவழியாக அவர்களுக்கு conflict of interest, code of conduct, ethics, integrity பற்றியெல்லாம் வகுப்பெடுத்துவிட்டு, விட்டால்போதும் என்று ஓட்டம் பிடித்தேன். நான் நினைத்தாலும் அவ்வாறு செய்யமுடியாது என்பதையோ, நேரடியாக விற்பனைத்துறையில் இல்லை என்று சொன்னாலோ அடுத்தமுறை நம்மை எங்காவது பார்த்தால் எப்படியெல்லாம் உதாசீனப்படுத்துவார்கள் என்ற பயமும் ஒரு காரணம்
இப்போது அவர் ஒரு விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கத்தின் தலைவர். அண்ணன் Scorpio வாங்கிவிட்டார். நான் பேஸ்புக்கில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்!
ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ‘விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கம்’ என்ற பெயரில் தொழில் செய்வதுதான் லேட்டஸ்ட் ட்ரென்ட். அதாவது, நூறு இருநூறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆளுக்கு இருபதாயிரமோ, முப்பதாயிரமோ சந்தா கட்டச்செய்து உறுப்பினராக்கி, சங்கத்தின்மூலம் அனைத்து விவசாய இடுபொருள்களையும் சந்தை விலையில் அங்கேயே வாங்கச்செய்ய வேண்டும். வரும் லாபத்தில் dividend கொடுத்துவிடுவதுதான் இந்த மாடல் (கணக்கு பார்த்தால் ஒன்னு வட்டிக்குக்கூட டிவிடெண்ட் வராது!).
இங்குள்ள தொழில் முனைவோர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்லாது கொஞ்சம் புத்திசாலித்தனமாக தொழிலை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது, மற்றவர்களுக்கு தொழிலாகவே தெரியாத ஒன்றை எடுத்து லாபமீட்டும் தொழிலாக்கி கூட்டத்தை ஈர்ப்பார்கள். நிறையபேர் வந்து ஆரம்பிக்கும்போது அதில் ulta intensive business model உண்டாக்கி கடைசியாக வந்தவர்களுக்கு நட்டம் வரச்செய்து, தொடர்ந்து லாபகரமான crowd attracting தொழிலாக நடத்திக்கொண்டிருப்பார்கள். ஜவுளி, லாரி, போர்வெல், கோழிப்பண்ணை, அறுவடை இயந்திரங்கள் என்று ஆரம்பித்து கல்வியை மிகவும் இலாபகரமான தொழிலாக மாற்றியதும் இந்த பகுதியினரே.
கூட்டுறவே நாட்டுயர்வு. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. இந்த கார்ப்பரேட் அடிமைகள் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். இதுகுறித்த தரவுகளை ஆராய்ந்ததுண்டா என்றெல்லாம் நீங்கள் என்மீது பாய்ந்தீர்களேயனால் ‘நீங்க இன்னும் வளரனுந்தம்பி’ என்று மட்டுமே இப்போதைக்கு நம்மால் சொல்ல இயலும்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மிகக்குறைந்த சந்தா தொகையை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் விளைபொருளை நல்ல விலையில் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு கடன் மற்றும் பிற advisory உதவிகளை செய்கின்றன. ஆனால் நாம் இங்கே பார்ப்பது விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் அவர்களுக்கு சந்தை விலையில் இடுபொருளை சந்தா வாங்கிக்கொண்டு விற்கும் மாடல்.
தனியார் கடைகள் பெரும்பாலும் நிறுவனங்களின் நேரடி விற்பனை மையமாக அதாவது Preferred Dealer (PD) ஆக செயல்படுகிறார்கள். தங்களின் விற்பனையை அதிகரிக்க, சந்தையில் நிலைத்து நிற்க சரியான, தரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிடில் விவசாயிகள் மத்தியில் உள்ள பாக்கித்தொகை வந்து சேராது. அவர்களைப் பொறுத்தவரை perform or perish நிலைமைதான்.
சங்கங்கள் அப்படியில்லை. பெரும்பாலான பெரிய விவசாயிகளை உறுப்பினராக்கி விடுவதால் peer pressure காரணமாக அவர்கள் அங்கு வாங்கியே ஆக வேண்டிய நிலைமை. அவர்களை மறைமுகமாக சார்ந்திருக்கும் சிறு விவசாயிகள் யாரோ சிலரை வசிகரிக்கவேண்டி (to please) அங்கு போயாக வேண்டும். இந்த சங்கங்கள் எப்போதுமே மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குவார்கள். Preferred Dealer or Direct Dealer என்ற சிஸ்டம் இருக்கவே இருக்காது. சங்கத்தின் முன்னோடி ஆட்கள் தங்களுக்கு சேர வேண்டிய கமிசன் தொகையை மொத்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். பாங்காக் trip-ம் இதில் அடக்கம்! டிவிடெண்ட் என்பதெல்லாம் சங்கத்தில் வரவுசெலவு கணக்குப்பார்த்து எட்டணா வட்டிக்கு கொடுக்கப்படும்.
அப்படியெல்லாம் கிடையாது. நிரூபிக்க ஆதாரம் இருக்கிறதா, தேவையில்லாமல் பொத்தாம்பொதுவாக சேற்றை வாரி இறைக்காதீர்கள் என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடும். உங்கள் நம்பிக்கை உங்களுக்கானது. ஊர் உலகத்தில் இந்த modus operandi மூலம் நடப்பது என்னவென்று நன்றாக நமக்கு தெரியும். அதை சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான்.
ஆகவே மக்களே, இது ஓர் அறிய வாய்ப்பு. சரியான தருணமும்கூட. உங்கள் ஊர்ப்பக்கம் ஏதேனும் விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கங்கள் உண்டாகும் நிலைமை தெரிந்தால், நீங்கள் அங்குள்ள பெருவாரியான ஜாதியை சேர்ந்தவராக இருந்தால், யோசிக்கவே வேண்டாம். தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர், இயக்குனர், கணக்காளர் போன்ற பதவிகளில் ஒன்றை அடித்துபிடித்து வாங்கிவிடுங்கள். உறவுக்கார பையன்கள் யாரேனும் சும்மா இருந்தால் ஸ்டோர் கீப்பராகவாவது சேர்த்துவிட்டுவிடுங்கள்.
அவ்வளவுதான்! கமிசன் கொட்டும். நீங்கள்பாட்டுக்கு பேஸ்புக்கில் கவிதை, இலக்கியச்சண்டை போட்டுக்கொண்டிருக்கலாம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை 😉 banging in Bangkok -in Bangkok என்று ஸ்டேட்டஸ் போடுவதும் உறுதி.
ஒரு பாட்டுல முன்னேற All the best மக்களே!