ஒருசாரார் சமச்சீர் கல்விமுறையானது சிபிஎஸ்ஈ-க்கு குறைவான பாடத்திட்டத்தையே கொண்டிருக்கிறது என்ற பழைய பல்லவியை விடாது பாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். பலதரப்பட்ட சமூக, பொருளாதார சூழலில் இருந்து கல்வி பயில வருபவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவது அரசின் கடமை; அதை செவ்வனே செய்கிறது அரசு இயந்திரம்.
ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், சாதீய வெறி குறித்த நோக்கங்களை மறந்தும் தொடமாட்டார்கள்; சமச்சீர் கல்வித்திட்ட புத்தகங்கள் அச்சடிப்பதை, திருவள்ளுவர் படத்துக்குமேல் போஸ்டர் ஒட்டுவதை, நடுவணரசு நிதியிலிருந்து பள்ளிகளின் உள்கட்டமைப்பை உயர்த்த தரப்பட்ட பெருந்தொகையில் எட்டணா செலவு செய்யாமல் திருப்பியனுப்பி தனியார் பள்ளிகளின் வியாபாரத்துக்கு துணைபோவதை சிபிஎஸ்ஈ-தான் உசத்தி எனப் பாடும் அறிவுசீவிகள் மறந்தும் தொடமாட்டார்கள்.
பள்ளி முடித்து, கல்லூரியில் சேர்ந்து எப்படியாவது ஒரு பி. ஏ, ஒரு பிஎஸ்சி வாங்கிக்கொண்டு பெரும்பாலோனோர் நகர்ந்துவிடுகிறார்கள். பல தலைமுறைகள் கல்வி வாசனையே இல்லாமல் இருந்தவர்களுக்கு அஃது ஒரு சாதனை. அவனவன், அவனவன் குலத்தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ணாசிரம சிந்தனையை தகர்த்த முதல் அடி அனைவருக்குமான கல்வியில்தான் ஆரம்பமாயிருக்கிறது. அதை தாங்கமுடியாத ஒரு கூட்டம் குலக்கல்வியை ஒருவிதமான modernized protocol மூலம் நிறுவ முயற்சிப்பதன் நாகரிக வெளிப்பாடுதான் சிபிஎஸ்ஈ உசத்தி, நாட்டுமாடு, இயற்கை விவசாயம், எட்சட்ரா.
ஒரு பி.ஏ., பி.எஸ்.சி வரை நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கப்புறம் நடக்கும் கூத்துகளை அந்த சிபிஎஸ்ஈ உசத்தி எனப் பாடும் ஆர்வலர்கள் தொடக்கூட மாட்டார்கள்.
தமிழகத்தின் ஆறேழு பல்கலைக்கழகங்களுக்கு முழுநேர துணைவேந்தர்கள் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் கையொப்பம் இல்லாத பட்டங்களை வழங்கக்கூடாது என இரமதாசு அறிக்கை விட்டு கேட்டும் பதில் சொல்லும் நிலையில் உயர்கல்வித்துறை இல்லை.
பத்தாண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர்களைத்தான் துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்ற விதியைக் காற்றில்விட்டு இணைப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது ஒரு பல்கலை என்றால் உதவிப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது இன்னொரு பல்கலைக்கழகம்.
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆளே கிடைக்காத பற்றாக்குறை நிலவுவதாகச் சொன்னால் பீகார், சட்டீஸ்கார் வரை சிரிப்பார்கள். ஓய்வுபெற்றவர்களை துணைவேந்தர்களாக்குவது, பதவிநீட்டிப்பு செய்வது எதனால் என்பது அவர்களது சாதிய பின்புலத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
தமிழக பல்கலைகளுக்கு முழுநேர வேந்தரும் கிடையாது என்பது கொடுமைக்கு வந்த கொடுமை.
முழுநேர ஆய்வுப்பணிகளில் இருந்து விலகி பதிவாளர், முதல்வர், துணைவேந்தர், திட்டக்குழு போன்ற மாநில அரசுக்கான சிறப்பு திட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பேராசிரியர்கள் PG, PhD மாணக்கர்களுக்கு எதற்காக கைடு ஆகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். பாதிநாட்கள் கேம்ப், மீட்டிங் என்றபெயரில் அலுவலகத்தில் இருக்கமாட்டார்கள்; இருந்தாலும் மற்ற மீட்டிங்குகளில் பிசியாக இருப்பார்கள். ஏதேனும் ஒப்புதல் பெற, ஆய்வுமுடிவுகள் குறித்து கலந்துரையாட ஆள் இல்லாதபட்சத்தில் மாணாக்கர்கள் சும்மா நாட்களைக் கடத்துவது தவிர்க்க இயலாத்தாகிவிடுகிறது. கூடுதல் பதவிகளைக் கொண்டிருக்கும் பேராசிரியர்களை கைடு ஆகக் கொண்டிருக்கும் மாணாக்கர்கள் எத்தனைபேரால் சரியான நேரத்துக்கு கோர்ஸ் முடிக்க முடிந்த்து என்பதை பார்த்தாலே தெரியும்.
ஜெனரிக் மருந்துகள் குறித்த செய்திகளைப் படித்துவருகிறோம். இந்த ஜெனரிக் கெமிக்கல் மாதிரியான சிந்தனைதான் ஆய்வுகளுக்கு இருக்கும் பெரிய முட்டுக்கட்டை. சில நுண்ணிய ஆய்வுகளுக்கு உயர்தரமான high precision இரசாயனம், சாதனங்கள் இல்லாமல் செய்யமுடியாது. ஆனால் நடப்பது என்ன? Price contract அல்லது Rate Comparison List என்றபெயரில் மூன்று கொட்டேஷன் வாங்கி குறைவான விலையைக் குறிப்பிடும் முகவர்களிடமிருந்து ஆண்டுமுழுவதும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்படும்.
உயரதிகாரிகளை அனுசரித்து மனம்கோணாமல் நடக்கும் சிலர் அத்தகைய கமிட்டியில் இருந்து இந்த கெமிக்கலை/சாதனத்தை இந்த கம்பெனியிலிருந்து இன்ன விலைக்குத்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்வார்கள். அதில் பெரும்பாலும் ஜெனரிக் வகைகளே இருக்கும். பொட்டாசியம் பெர்மாங்கனேட் லேப் கிரேடு என்றால் இருபது கம்பெனிகள் சப்ளை செய்யும். அதில் குறைவான விலையில் வருவதைத்தான் வாங்குவார்கள். அத்தகைய பொருட்களால் சில ஆய்வுகளின்போது எதிர்பார்த்த precision-ஐத் தர இயலாது. உனக்கு தேவை பொட்டாசியம் பெர்மாங்கனேட்தானே, இந்தா புடி, அந்த கம்பெனி இந்த கம்பெனின்னு கேக்கற வேலையெல்லாம் இருக்கப்படாது என்று சொல்லப்பட்டுவிடுகிறது. குறிப்பிட்ட கம்பெனி தயாரிப்பு இன்வாய்சில் இருந்தாலும் சப்ளை செய்யப்படுவது பெரும்பாலும் ஏதாவது குப்பையாகவே இருக்கும்.
இந்த சூழலில் Current Science சஞ்சிகையைத் தாண்டி Cell, Science, Nature-இல் ஆய்வுக்கட்டுரைகள் வரும் என்பதெல்லாம் சர்க்கரை என்று எழுதி தொட்டு நக்கிப் பார்ப்பது மாதிரிதான். பத்து இருபது இலட்சம் கொடுத்து வேலைக்கு சேர்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?