வாழறதுக்குத்தான் வாஸ்து என்று சொல்லிக்கொண்டே பேழறதுக்கும் வாஸ்து பார்த்து உட்கார வேண்டிய நிலைமை. அந்த காலத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கப் போகும்போது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி உட்கார்ந்தால் அந்தரங்க இடங்களில் வெயில் படும், அதனால் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாது என்பதால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து உட்கார்ந்தனர். சூரிய பகவான் பார்க்கும்படியாக உட்கார்ந்து மலம் கழிப்பது பாவம் என்றும் சொல்லப்பட்டது.
இன்றும் அதையே பிடித்துக்கொண்டு பேஸ்மெண்ட்டில் கழிவறை கட்டினாலும் சரி, அடுக்ககத்தில் பதினைந்தாவது மாடியில் கட்டினாலும் சரி தென்வடலாக பீங்கானைப் பதிப்பது, தொன்மம் என்றபெயரில் மூட நம்பிக்கைகளைப் நம் மக்கள் எவ்வளவு தூரம் பாதுகாத்து வைத்திருக்கின்றனர் என்பதற்கு சான்று.
உயர்மட்ட தண்ணீர் தொட்டி தென்மேற்கு திசையில் அமையவேண்டும் என்பதும் ஐதீகம், வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி 99.99% சதவீத வீடு, தொழிற்சாலைகளில் இன்றும் அப்படியே அமைத்து வருகின்றனர்.
படுக்கை அறை கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் அமையவேண்டும் என்பதும் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி அத்தனை வீடுகளிலும் மேற்குப் புறமாகவே படுக்கையறை அமைக்கப்பட்டு மக்கள் இரவு உறங்கச் செல்கின்றனர்.
அதே நேரத்தில் பிராமணர்களின் வீடுகளில் படுக்கையறை கிழக்கிலும், சூத்திரர்களுக்கு மேற்கிலும் இருக்கவேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் சொல்வதாக சொல்லப்படுகிறது.
கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் தண்ணீர் தொட்டி, படுக்கையறை அமையும்போது இயல்பாகவே தண்ணீரும் சூடாக இருக்கும், படுக்கையறையும் சூடாகவே இருக்கும். இதை மட்டுப்படுத்த ஏ.சி., ஃப்ரிட்ஜ் போன்றவற்றை பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டடாயத்துக்கு சூத்திரர்கள் தள்ளப்படுகின்றனர் என்பதும் உண்மை.
மேலைநாடுகளில் மிகப்பெரிய ஸ்கைஸ்கேரப்பர் வகைக் கட்டிடங்களை வடிவமைக்கும்போது கரையான் புற்று, தேன்கூடு போன்றவற்றில் உள்ள ventilation mechanism-த்தின் சூட்சுமங்களைப் பயன்படுத்தி குறைந்த ஆற்றலில் தட்பவெப்பநிலையை பராமரிக்கும் விதமாக அமைக்கின்றனர். ஆனால் நம்மைப் போன்ற வெப்ப மண்டல நாட்டில் வாஸ்து என்றபெயரில் மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர்.
தேவையில்லாமல் கதவை, ஜன்னலை உடைத்து வேறு இடத்தில் பொருத்துவது, சம்பந்தமே இல்லாமல் வாசற்படியின் எண்ணிக்கை மாற்றினால் நம்முடைய தரித்திரம் நீங்கிவிடும் என்று அதை உடைப்பது, மூலைக்குத்து இருக்கக்கூடாது என்று பொருந்தாத இடத்தில் கேட் போட்டு காரை சுவரில் உரசிக் கோடு போட்டுக்கொண்டு டிங்கரிங் பட்டறையில் உட்கார்ந்திருப்பது, மதில் சுவரில் ஒரு காடி எடுத்து பிள்ளையார் சிலையை வைத்து கண் திருஷ்டியை டைவர்ட் செய்யும் தொழில்நுட்பம் என்று இருந்த வாஸ்து இன்று அலங்கார வண்ண மீன்களின் மீதும் வந்துவிட்டிருக்கிறது.
தொழிற்சாலைகளில் இயந்திரங்களை நிறுவும்போது நமது செளகரியத்தையும், பாதுகாப்பையும் பார்க்காமல் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதால் ஏற்படும் இழப்புகள் நம் நாட்டில் ஏராளம். புதிய விமானம், கப்பல் போன்றவற்றை வெள்ளோட்டம் விடும்போது எலுமிச்சம்பழம் கட்டிவிடும் நாடு நம்முடையது என்பதை மறந்துவிடக்கூடாது.
விஞ்ஞான வாஸ்து என்று சொல்லி ஒப்பேற்றி வயிறு வளர்ப்பவர்கள் அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞான கோட்பாடுதான் என்னவென்று ஒருபோதும் சொல்வதில்லை. காஸ்மிக் அலை, மின்காந்த அலை, எண்ண ஓட்டங்களின் அலை என்று எதையாவது கலந்துகட்டி அடித்துவிடுவதில் மட்டுமே அவர்கள் நிபுணர்கள்.
ஆந்திரா வாஸ்தும், தமிழ்நாட்டு வாஸ்தும் கணிசமாக வேறானது என்பதால் கோயமுத்தூரில் உள்ள நாயக்கர்மார்களின் கம்பெனியில் வாஸ்து compliance பார்த்து முடிப்பதற்குள் இடைநிலை மேலாளர்கள் இரண்டு கிலோ இளைத்துவிடுகின்றனர் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
புதிய ஊர்களுக்கு செல்லும்போது தமிழகத்தைப் பொறுத்தவரை யாரிடமும் வழி கேட்காமல், கூகுள் மேப் போடாமல் எந்த திசையில் சொல்ல வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஆங்காங்கே வீடுகளின் மேல் உள்ள தண்ணீர் தொட்டிகளைப் பார்த்துக்கொண்டு சென்றாலே போதுமானது. அத்தனை உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளும் தென்மேற்கு திசையிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.
ஏதாவது வீட்டுக்குள் ஒரு நபரைக் கடத்தி வந்து கண்ணைக் கட்டி அடைத்து வைத்திருந்தாலும் கழிவறையின் பீங்கான் தென்வடலாகவும், படுக்கையறை வீட்டின் மேற்குப்பகுதியிலும், சமையலறை தென்கிழக்கு மூலையிலும் இருக்கும் என்ற வாஸ்து சாஸ்திர விதியின்படி பிரதான கதவு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை ஊகித்து மிகச் சாதாரணமாக வெளியேறலாம் எனும்போது தமிழ் சீரியல்களில் மட்டும் ஏன் ஒவ்வொரு அறையாக, கதவு கதவாகச் சென்று திறந்து பார்த்து வில்லன் வரும்வரை நேரத்தை வீண்டிக்கிறார்கள் என்பது மட்டும் புரியவே மாட்டேங்கிறது!