இன்று பெரும்பாலான பூச்சிமருந்து, உரக்கடைகள் மற்றும் ஹார்ட்வேர், சிமெண்ட் கடைகள் தனியாக தொழில்முறையில் நடத்தப்படுகின்றன என்றாலும் ஒன்றிரண்டு பழைய கடைகள் அப்படியேதான் இருக்கின்றன. அங்கே விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மாட்டுத்தீவனம், புண்ணாக்கு, சிமெண்ட், எலெக்ட்ரிகல், ஹார்ட்வேர் சாமான்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டை முதல் மூக்கணாங்கயிறு வரை சகலமும் கிடைக்கும். அவர்களின் ஸ்டைல்-தான் உண்மையான Brick & Mortar format. தேவையான சரக்குகளை பணம்செலுத்தி எடுத்துக்கொள்வார்கள். எவ்வளவு விற்கமுடியுமோ அவ்வளவு மட்டுமே ஆர்டர் கொடுப்பார்கள், கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் மாத இறுதி டார்கெட்டை நிறைவுசெய்ய டம்பிங் செய்தால் தைரியமாக NO சொல்லுவார்கள். விவசாய இடுபொருட்கள், ஹார்ட்வேர் சாமான்கள், எலெக்ரிகல் சாமான்கள் என அனைத்திலும் 10-15% லாபத்துடன் அந்த சுற்றுவட்டாரத்திலேயே குறைவான விலையில் தருவார்கள். தமிழ் தேதி, மாதம், அஷ்டமி, நவமி, அமாவசை, பவுர்ணமி என கலந்துகட்டி அடிப்பார்கள். அதில் பூச்சிமருந்துகளை எப்படி பேலன்ஸ் செய்கிறார்கள் என்று பார்த்தோமானால் முப்பது வருடங்களுக்கு முன்னரே சந்தையில் வந்த மருந்துகளை விற்பதோடு, புதிய தலைமுறை மருந்துகளையும் கணிசமான அளவுக்கு விற்பார்கள். அது எப்படி?
பயிர்களைத் தாக்கும் முக்கியமான நாசகார பூச்சிகள் எல்லாம் Lepidoptera என்ற ஆர்டருக்குக்கீழே Noctuidae என்ற குடும்பத்தில்தான் இருக்கின்றன. இதன் வாழ்க்கைச்சரிதம் 30 நாட்கள்தான் (முட்டை->லார்வா(புழுப்பருவம்)->ப்யூப்பா(கூட்டுப்புழு)->அடல்ட்(பட்டாம்பூச்சி). இந்த பட்டாம்பூச்சிகள் நல்ல காரிருள் சமயத்தில்தான் mating-இல் ஈடுபடும், அதாவது அமாவாசை சமயத்தில். அடுத்த அமாவாசைக்குள் ஒரு life cycle முடிந்துவிடும். ஆய்வகத்தில் வளர்க்கும்போதுகூட rearing chamber-ஐ கறுப்புத்துணியால் மூடி வைக்காவிட்டால் sterile முட்டைகள் மட்டுமே கிடைக்கும். அதன் புழுக்களின் வளர்ச்சி மொத்தம் ஆறு instar-கள். முதல் இரண்டு இன்ஸ்டார்களின்போது எதையாவது பக்கத்தில் காட்டினாலே செத்துவிடும். கோக், பெப்சி, பிராந்தி அடித்து கன்ட்ரோல் செய்வது, வேப்பிலை, நொச்சி இலைச்சாறு அடிப்பது குறித்து “இயற்கை விஞ்ஞானிகள்” சொல்வது எல்லாமே இந்த டைமிங் சென்ஸ்-தான். மூன்றாவது இன்ஸ்டாருக்கு மேல் இந்த சித்துவேலையெல்லாம் காட்டினால் ‘மூடிட்டு போடா’ என்று சொல்லாதகுறையாக மொத்த காட்டையும் இரண்டு நாளில் தின்று தீர்த்துவிடும். வேறுசில பூஞ்சான, வைரஸ் காரணிகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்றாலும் அது இந்த இடத்தில் தேவையில்லாதது.
இங்கேதான் நமது ஆல்-இன்-ஆல் அழகுராஜா பிசினெஸ் மாடல் வருகிறது. அமாவாசைக்கு முதல் இரண்டு நாட்களிலிருந்து ஏழெட்டு நாட்களுக்கு விலை குறைந்த generic மருந்துகளை விற்பார்கள். அதனுடன் ஏதாவது 100% லாபமுடைய பயிர் வளர்ச்சி டானிக்குகளை அள்ளிபோட்டு கொடுத்துவிடுவார்கள். பவுர்ணமிக்கு ஒருவாரம் இருக்கவே புதிய தலைமுறை மருந்துகளுக்கு மாறிவிடுவார்கள். அப்போது டானிக்குகளின் அளவை குறைத்தோ அல்லது விற்காமலோ விட்டுவிடுவார்கள். மொத்தத்தில் எல்லாநாளும் ‘எல்லா பூச்சிமருந்துகளும் நியாயமான விலையில் கிடைக்கும்’ என்று ரொக்க பில்லில் எழுதியிருப்பதுபடியே நடந்துகொள்வார்கள். அந்த 10-15% இலாபம் அவர்களுக்கு நிறைவானதாக இருக்கும். மக்களும் அதற்கு இராசியான கடை என்று நற்பெயர் வைத்திருப்பார்கள். அந்த விற்பனைக்கேற்ப வரும் தங்கக்காசுகள், பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வார்களேதவிர இந்த ஆண்டு இந்தனை கிராம் காயின் வாங்க வேண்டும், பாங்காக் டூர் போகவேண்டும் என்று டார்கெட் வைத்து எதையும் விற்கமாட்டார்கள். Peach of mind – Guaranteed!
ஒரு குரூப் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாம் எதற்குமே உருப்படாதவை, எல்லாமே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டர்கள், உறுப்புமாற்று அறுவைசிகிச்சைகூட விநாயகருக்கு தலை மாற்றியபோதே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது, புஷ்பக விமானத்திலிருந்தான் இன்றைய விமானம் கண்டுபிடித்தார்கள் நீங்கள் எதுவுமே புதிதாக செய்யவில்லை என்று எதற்கெடுத்தாலும் நொட்டம் சொல்லிக்கொண்டே இருப்பது. அவர்களை திருப்திபடுத்தவே முடியாது. ஆராய்ச்சிகளின்மீது, ஆராய்ச்சியாளர்களின்மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக simply waste என்று ஒதுக்கிவிட முடியாது என்ற குறைந்தபட்ச அறிவுகூட இருக்காது. அவர்களுக்காக எப்படியெல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கிறது!
* – இந்த darkness related to the reproduction of Noctuidae insects குறித்து இரண்டு தரப்புகள் இருக்கிறது. ஒரு தரப்பு அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், எனவே இது வெறும் hypothesis என்று சொல்லி ஆய்வு முடிவுகளைக் காட்டுகிறது. மற்றொரு தரப்பு நிரூபித்து காட்டுகிறது. பூச்சிகளைக் கொல்வது மட்டும்தான் நானறிந்த கலை, எனவே உங்களுக்கு தெரிந்த ஒரு பூச்சியியல் நிபுணரிடம் கேட்டுப்பாருங்கள். அப்போது நான்கு வகையான நிகழ்தகவுகள் வரலாம். ஒன்று, அதை சரியென சொல்லலாம். இரண்டு, அதை தவறென சொல்லலாம், மூன்று, தெரியாது என சொல்லலாம். நான்கு, ஒருவேளை அவருக்கு தெரியாது என்றாலும் அவரது நிபுணத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் எனக்கு எல்லாம் தெரியும் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எனவும் சொல்லலாம்.
சரி, இதைவைத்து நீங்கள் என்ன செய்யலாம். அலுவலகத்தில் நேரம் போகவில்லையெனில் அந்த முடிவுகளை Poisson distribution – இல் உள்ளே நுழைக்கமுடியுமா என்று கோடு போட்டு பார்க்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லையெனில் மறந்துவிட்டு வேலையை பார்க்கலாம்!!