மண்வளம் குறித்த மூடநம்பிக்கைகள் – வெகுசன ஊடகங்களில்.

மண்ணியல் என்பது ஒரு தனித் துறை, அங்கே பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களது கண்டுபிடிப்புகள் விவசாயம் மட்டுமின்றி சிவில் கட்டுமானம் மற்றும் இராணுவத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி பசுமை விகடனில் வந்த ஓர் அதிசயத்தகவலை நண்பர்  Raghavan Sampathkumar சுட்டிக்காட்டினார். அதாவது ஒரு பாட்டிலில் மண்ணைப்போட்டு தண்ணீரை ஊற்றி மண்ணின் பிரச்சினைகளைக் கண்டுபிடிக்கும் அரிய Do It Yourself வகையறா தகவல்.

B.Sc agri படிக்கையில் மண்ணைப்பற்றி கதறக்கதற சொல்லிக்கொடுத்தார்கள். போதாக்குறைக்கு பலதரப்பட்ட மினரல்களை, GCT-யில் உள்ள Geology துறைக்கு அழைத்துச்சென்று காட்டி எங்களுக்கு புரியவைக்க பேராசிரியர்கள் முயன்றபோதும் “இதுவும் கவர்மெண்டு காலேஜ்தான், ஆனால் எப்படி இங்க மட்டும் இவ்ளோ பிகர்கள் உலவுகிறார்கள்?” என்ற யோசனையிலேயே என்னைப்போன்ற பலரும் இருந்ததால் சுமாராகத்தான் பாடம் புரிந்தது. மண்ணியலின் தந்தை இரஷ்யாவின் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்ற அளவில் படித்து பாஸ் செய்தோம். படித்து முடித்தபிறகு நாட்டரசன்கோட்டையில் சிலகாலம் நில அளவைத்துறையில் மண் படிமங்களை GIS mapping செய்ய வகைப்படுத்தும் களப்பணியில் இருந்துபோது கற்றுக்கொண்டது கொஞ்சம் ப்ராக்டிகல் வகை. ஆறடி ஆழத்துக்கு குழி வெட்டி உள்ளேயிறங்கி மண்ணின் profile மாதிரி எடுத்து அதன் குணாதிசயங்களை எழுதும் வேலை.

மண் துகள்களின் பலதரப்பட்ட தன்மைகளில் நீருடன் இணையும்போது அதன் பெருந்துகள்கள் சிறிய துகள்களாக உடைந்து பரவும் Slaking என்பதும், சிறிய துகள்கள் கரைந்து மண்ணின் முதன்மை படிமங்களான மணல், வண்டல் மற்றும் களிமண்ணாக (sand, silt, clay) மாறும் dispersion என்பதும் முக்கிய கூறுகள். படத்திலுள்ள Shepard’s sediment classification diagram என்பது Geology-யில் அடிப்படையான ஒன்று. அதன் மதிப்பீடுகள் 4,3,2,1,0 எனவும் 4 என்பது கரையவேயில்லை எனவும், 0 என்பது முழுவதும் கரைந்துவிட்டது என்றும் சொல்கிறது. இந்த களச் சோதனையும் இரண்டு மணிநேரத்தில் முடிந்துவிடவேண்டும். பீர்ல்காம்ப் ஸ்கேல் (Peerlkamp Scale) என்பது கொஞ்சம் வேறுமாதிரியானது என்பதால் அது இங்கு தேவையில்லை (சும்மா பார்க்க மட்டும் படம் இணைக்கப்பட்டுள்ளது). மண்ணில் தண்ணீரை கலக்கி லட்டு செய்வது, திரி செய்வது, முக்கோணம் செய்வது என சிறுபிள்ளைகளின் விளையாட்டு மூலமும் மண் படிமங்களை கண்டுபிடிக்க முடியும் என்றாலும் அது இந்த இடத்தில் out of scope என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

தமிழில் அறிவியல் கருத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அது எந்த அடிப்படையில், எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை தராமல் இது ஆபத்தானது, இது நல்லது என்று அடித்துவிடுவது தவறான முன்னுதாரணம். பாலைவன மண்கூட அதற்கென சில சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றால் அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் அவசியமில்லை.

ஆர்வக்கோளறுகள் சிலர் பரப்பும் தவறான தகவல்களை உண்மை என நம்பித்தொலைப்பது தமிழனின் தலையெழுத்து. இங்கே மட்டுமல்லாது ஹாலிவுட்வரை உண்டு. Journey to the Center of the Earth என்ற படத்தில் ஒரு குகைக்குள் நடந்து செல்லும்போது Muscovite என்ற ஒரு பாறையின்மீது நடப்பதாகவும், அது ஒரு thin type of rock formation என்று சொல்லும் ஹீரோ, அது உடைந்து கீழே செல்லும் மொக்கை சீன் இதோ.

அதில் வரும் geology குறித்த தகவல்களை ஒருவர் எப்படியெல்லாம் கழுவி ஊற்றியிருக்கிறார் என்பதைக் காண http://paleopix.com/blog/2012/12/08/bad-geology-movies-journey-to-the-center-of-the-earth-2008/

இதை நினைவில்கொண்டு அண்மையில் கோவையில் உள்ள Gass Forest Museum-திற்கு சென்றபோது மஸ்கோவைட்டை கொஞ்சநேரம் வெறித்துப்பார்க்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அத்தனை மினரல் வகைகளையும் ஒரே இடத்தில் பார்க்கவேண்டுமானால் இந்த அருங்காட்சியகத்தை பார்த்துவிடுங்கள்.

நேரமிருப்பின் படித்துப்பார்க்க மண் குறித்த Self study தகவல்கள் இந்த சுட்டியில் இருக்கிறது

http://www.fao.org/docrep/010/i0007e/i0007e00.htm

பசுமை விகடன் பலருக்கு தெய்வநூலாக இருந்தாலும் எனக்கு பார்த்தாலே வீண் மன உளைச்சல் வரும் என்பதால் அதை ஒருபோதும் படிப்பதில்லை. அப்படியிருந்தும் இந்தமாதிரி ஹார்லிக்ஸ் பாட்டில் சோதனைகள் மூலம் மண்ணைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவது என்பது கழுதை**** தூக்கிப்பார்த்து மணி சொன்ன கதைதான்!

இணைய வணிகத்தின் தேனிலவு

சமகால வணிக சூழலில் அதிகம் தவறாக பயன்படுத்தப்பட்ட பதங்கள் என்றால் Asset light model மற்றும் Digital disruption -ஆகத்தான் இருக்கமுடியும். அமேசானும், பிளிப்கார்ட்டும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதற்காக பல “பொருளாதார நிபுணர்கள்” கோட்டு சூட்டோடு வந்து எல்லோருடைய காதிலும் அசெட் லைட் மாடல்தான் இனிமேல் எதிர்காலம்; நிலக்கரி, இரும்பு, டெலிகாம், உரம் போன்ற தொழில்களெல்லாம் அவ்வளவு இலாபகரமானதாக இருக்காது, RoI குறையும் என்றெல்லாம் எல்லோருடைய காதிலும் காய்ச்சி ஊத்தி நம்ப வைத்தார்கள். அதை கொஞ்சம் விரிவாக அலசலாம்; பொறுமை இல்லையெனில் இங்கேயே நிறுத்திவிடுங்கள்.

ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் பல மாணவர்களின் கனவாக இருந்தாலும் அதில் ஒரு நவீன ஊழல் மறைந்திருக்கிறது என்பதும் நிதர்சனம். உண்மை, உழைப்பு, நம்பிக்கை, தன்னம்பிக்கை, நாணயம், சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். Start up என்பது ஒரு புதிய கோணத்திலான வணிக சிந்தனை அசுரத்தனமான வளர்ச்சிபெற்று கோடிகளைக் கொட்டும் என்பதால் venture capital funding செல்வதே சிறந்தது என்றும், Small business என்பது ஆண்டுதோறும் 15-50% வேகத்தில் வளரக்கூடிய time tested business process என்பதால் Bank Credit செல்வதே சிறந்தது என்றும் நிதி ஆலோசகர் Chellamuthu Kuppusamy தெரிவிக்கிறார்.

ஸ்டார்ட்அப்-களின் தோல்விக்கு முக்கிய காரணம் எந்த வழியாக இலாபம் வரும் என்றே தெரியாமல் இருப்பதும், எதிர்பார்த்தபடி வணிகம் வளராவிட்டால் தாக்குப்பிடிக்க Plan B என்னவென்று தெரியாமல் ஆரம்பிப்பதுதான். வணிகத்தின் சமூக dynamics குறித்த புரிதல் இல்லாமல், புத்தகத்தில் வரும் SWOT அனாலிசிஸ் போட்டுப் பார்த்துவிட்டு பெட் கட்டும் மனநிலையும் முக்கியமானது.

தற்போது Purple Squirrel என்ற ஸ்டார்ட்அப் 15 கோடியை செலவு செய்துவிட்டு, ஒன்றும் தேறாது என்று மூட இருக்கிறார்கள். இதன் கான்செப்ட் என்னவென்றால் கல்லூரி மாணவர்களுக்கு புராஜெக்ட் டூர், IV அழைத்துச்செல்ல திட்டமிடும் tool. ஹைதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லும் planner போன்ற ஒன்றை தயார் செய்தபிறகு மாணவர்களிடம் பேசினால் கோவா, குலு மணாலி, பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு IV செல்லவேண்டும், நீங்கள் சொல்லும் இடங்களுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வற்புறுத்தினாலும் மாணவர்கள் நிராகரித்துவிட, Plan B இல்லாததால் மூடப்படுகிறது. http://www.business-standard.com/…/purple-squirrel-shuts-do… இந்த கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப்-களின் ஆரம்பப்புள்ளி பிளிப்கார்ட் அல்லது ஸ்னாப்டீல் co-founder-ஆக இருந்த யாரோ ஒரு ஷர்மா. அவர் யாரென்று நினைவில்லை. பல கோடிகளுடன் மகிழ்ச்சியாக அதைவிட்டு விலகி யாரோ குருவிடம் யோகா கற்றுக்கொண்டு தியானத்தில் இருக்கும்போது அவரது உள்மனதில் வாத்தியாராக இருந்து செத்துப்போன தாத்தா வந்து கல்விமீது கவனம் செலுத்தத் சொன்னாராம். உடனே இவர் ஒரு கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க, இராசியான கைக்கு சொந்தக்காரர் என்று பலரும் பணம் போட வந்தபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதையொட்டி கசமுசவென்று கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப்-கள் உண்டாயின. அதில் ஒன்றைத்தான் மேலே பார்த்தோம்.

ஒரு ஓட்டல்கூட இல்லாமல் உலகின் பல நாடுகளில் அறைகளை ஒருங்கிணைத்து வரும் நிறுவனம் Airbnb. அதாவது வாடகைக் கார் வணிகத்தின் Uber போல. அதே மாடலில் இந்தியாவில் உருவானதுதான் Oyo Rooms. ‘எங்களை காப்பியடித்து உண்டான பல நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை’ என்று சொல்லிவிட்டு இந்தியாவில் கடைதிறக்க வேலை செய்கிறார் Airbnb CEO. இந்தியாவில் தொழில்முறையில் நடத்தப்படும் பிராண்டு ஹோட்டல்கள் தாண்டி மற்றவை பெரும்பாலும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கவும், கருப்புப்பணத்தை அப்படியே பராமரிக்கவும் உண்டாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. அதனால் we are disrupting the hospitality industry for people’s needs என்று சொல்பவை சாதாரண டிக்கெட், ரூம் புக்கிங் போர்ட்டல்-களான yatra, makemytrip, tripadvisor போன்றவற்றின் போட்டியை எப்படி தாக்குபிடிக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Uber மாடலில் உருவான Ola, பல புதுமைகளைப் புகுத்தி Fastrack, NTL, Meru போன்றவைகளுக்கு மரண அடி கொடுத்தாலும் அவர்கள் ஆரோக்கியமான லாபத்துடன் இயங்கியதால் சுதாரித்துக்கொண்டார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம் கரையும்வரை அமைதிகாக்கிறார்கள். Uber, Ola-வின் தள்ளுபடிகள், டிரைவர் மற்றும் பேசன்ஜர் ரேட்டிங் குளறுபடிகள், இன்சென்டிவ் தகராறுகள், surge pricing போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக வீதிக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. கார் வாடகைக்கு எடுப்பதுதான் சிரமம் ஆனால் ஆக்டிங் டிரைவர்கள் கிடைப்பது எளிது என்றுசொல்லி Zuver என்று ஒரு ஸ்டார்ட்அப் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் மணிக்கு 100 ருபாய் கட்டணம் என்றும் 20% கம்பெனி கமிஷன் என்று சொல்லுகிறார்கள். Ola–வும் 20% கமிஷன் என்றுதான் தற்சமயம் செயல்படுகிறது. வெளிநாட்டு முதலீடு கரைந்தபிறகு நடக்கப்போகும் போட்டிகள்தான் சுவாரசியமானவை.

Food tech start ups என்றபெயரில் வந்த food delivery கம்பனிகள் Foodpanda, Zomato, Swiggy மாடல் அலாதியானது. ஒவ்வொரு பெரிய உணவகமும் இலவச டெலிவரி கொடுக்கும் இடத்தில் தள்ளுபடியுடன், ஒரு ஆளுக்கு சம்பளமும் கொடுத்து டெலிவரியும் கொடுத்துவிட்டு வருவாய் எங்கிருந்து வரும் என்றே தெரியாமல் அல்லோலகல்லோலப்படுகிறது. உணவகத்துக்கு ரேட்டிங் கொடுக்கிறோம் அதனால் வாடிக்கையாளர்கள் சிறப்பான வரவேற்பு தருவார்கள் என்கிறார்கள். இந்த ரேட்டிங், சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேசன் லோலாயிகள் குறித்து தனியாகவே ஒரு கட்டுரை எழுத முடியும். http://www.livemint.com/…/r…/The-trouble-with-Foodpanda.html

அடுத்து இத்தனை மில்லியன், அத்தனை மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட காய்கறி, மளிகை சாமான்கள் டெலிவரி. PepperTap, Grofers, BigBasket என வரிசையான வரவுகள். பிளிப்கார்ட்டின் NearBy ஆரம்பித்தவுடனே வரவேற்பு இல்லையென மூடப்பட்டது. இப்போது PepperTap ஒவ்வொரு ஊராக குடோனை சாத்துகிறது. “இந்திய மக்களுக்கு வாரயிறுதியில் மளிகை சாமான் வாங்கிவருவது ஒரு பிக்னிக் போன்றது, இல்லத்தரசிகள் கொஞ்சம் அடுப்படியில் இருந்து ரிலாக்ஸாக இருக்க மளிகை, காய்கறி வாங்கிக்கொண்டு, பிள்ளைகளுடன் வெளியே சுற்றிவிட்டு வருகிறார்கள்” என்று தனது அதிசய கண்டுபிடிப்பை இப்போது சொல்லியிருக்கிறார் PepperTap CEO. இதைத்தான் கிஷோர் பியானி காலங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது It Happened in India நூலை 200 ரூபாய்க்கு வாங்கி படித்திருந்தால் பல கோடி மிச்சமாகியிருக்கும்.

Brick & Mortar மாடல் எனப்படும் offline, retail channel based model. அதாவது நமது அண்ணாச்சி கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் போன்றவை. சுகுணா மட்டுமல்லாது ரிலையன்ஸ் நிறுவனமும் Frozen Chicken விற்பனையில் இறங்கி, போதிய வரவேற்பில்லாமல் மூடியது நினைவிருக்கலாம். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது மளிகைக்கடையில் கறி விற்பது மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதால் மூடுவதாக அறிவித்தபோது மீசையில் மண் ஒட்டிக்கொண்டது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 70% விற்பனை அதன் துணை நிறுவனமான WS Retail என்ற நிறுவனத்திலிருந்து வருகிறது. அந்த WS Retail நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளது இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் Catamaran ventures. அமேசான் நிறுவனத்தின் 40% விற்பனையைத் தரும் Cloudtail நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும் அதே நிறுவனம்தான். அண்மையில் மத்திய அரசு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் 25%-க்கு மேல் ஒரே நிறுவனத்தில் இருந்து பொருட்களை வாங்கக்கூடாது என்று விதிமுறைகள் வகுத்திருப்பதால் பல மாற்றங்கள் வரவிருக்கின்றன.
http://www.livemint.com/…/Amazons-JV-Cloudtail-is-its-bigge…
இந்த களேபரத்துக்கு மத்தியில் Fidelity, Morgan Stanley போன்றவை பிளிப்கார்ட்டின் மதிப்பை 25-35% குறைத்துள்ளன. இந்த மதிப்பு குறைப்பு என்பது வெறும் theoretical exercise-தான், எங்கள் பரிவர்த்தனையின் மீது அல்ல என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் CEO சச்சின் பன்சால்.

வியாபார பரிவர்த்தனையில் இலாபம் எங்கே கிடைக்கும், தள்ளுபடியை நிறுத்தி பொருளோடு வரும் இலாபத்தில் நிறுவனத்தை நடத்தும்போது Brick & Mortar மாடல் கடைகளுடன் போட்டிட்டு தாக்குப்பிடிப்பது எப்படி என்ற தெளிவே இல்லாமல் இலாபம் வந்துவிடும் என்று வறட்டு நம்பிக்கையின் மீது வெறும் Number of Transactions என்ற அடிப்படையில் இணைய வணிகம் நடந்துகொண்டிருக்கிறது. மற்றபடி இங்கே வாடிக்கையாளர்களிடம் நன்றி உணர்வும் பெரிதாக கிடையாது, நிறுவனங்களிடம் professionalism என்பதும் சொல்லிக்கொள்ளும்படி கிடையாது. அப்படியே இருந்தாலும் பிராண்டுக்கான மதிப்பை அந்த நிறுவனமே உண்டாக்கிக்கொள்ளவேண்டும், நாங்கள் வெறும் டீலர் என்ற அடிபடையில்தான் நமது வணிக புரிதல் இயங்குகிறது. ஒரு சிறிய ரன்னிங் ரிப்பேருக்காக மெர்சிடஸ் பணிமனைக்கு சென்றிருந்தேன். கோவையில் TVS Sundaram Motors-தான் மெர்சிடஸ் பென்ஸ் டீலர். அசோக் லேலண்ட் LCV லாரி, பஸ்களுக்கும் TVS-தான் டீலர். கோவை மாநகராட்சியின் குப்பை லாரிகள், மெர்சிடஸ் ஷோரூமின் வளாகத்திலுள்ள பணிமனையில்தான் சர்வீஸ் செய்யப்படுகிறது. அங்கே நிறுத்திவிட்டு சிறிதுநேரம் உள்ளே சென்றுவிட்டு வருவதற்குள் ஒரு குப்பைலாரி ஓட்டுனர் “குறுக்க ஏன் சார் வண்டிய போடறீங்க எனக்கு லேட் ஆகுதுல்ல” என்று சலித்துக்கொண்டே சென்றார். Brand Equity குறித்தெல்லாம் கோட்டுசூட்டு நிபுணர்கள் டிசைன் டிசைனாக பேசினாலும் அந்த பிராண்டு குறித்த புரிதல் வாடிக்கையாளர்களுக்கு இருந்தாலும் டீலர்களின் professionalism இல்லாமல் வெற்றியடையாது.

நமது மிகப்பெரிய சாபக்கேடு அவநம்பிக்கை, நாம் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்புவது இல்லை என்கிறார் FreeCharge நிறுவன CEO குணால் ஷா. ஒரு வண்டியை சர்வீஸுக்கு விடும்போது பெட்ரோல் அளவு எவ்வளவு இருக்கிறது என்றுதான் பார்க்கிறோம்; சர்வீஸ் அட்வைசர்கள் வண்டியை சுற்றிவந்து எத்தனை இடத்தில் ஒடுங்கியிருக்கிறது, பெய்ன்ட் போயிருக்கிறது, என்னென்ன சாமான்கள் இருக்கின்றன என்று குறித்துகொண்ட பின்னர்தான் என்ன பிரச்சினை என்றே கேட்க ஆரம்பிக்கின்றனர். தொடர்ந்து அரசுகளையும், வணிக நிறுவனங்களையும் நம்பி கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்ற உணர்வுடன் திரும்புவதால் நமக்கு யார்மீதும் நம்பிக்கை கிடையாது. நமது வளரும் சூழலும் அப்படித்தான் இருக்கிறது. கல்விமுறையும் அதற்கான ஏற்பாடாகத்தான் இருக்கிறது.

ஒரேதிசையில் மந்தையாக சென்று இறங்குவது நமக்கு பழகிப்போன ஒன்று. பிளிப்கார்ட்டில் wellness products என்று ஆரம்பித்ததும் அதேபாணியில் பல தனி போர்ட்டல்கள் வந்தன. அதில் ஒன்று, Erotic section என்ற ஒன்று எங்களிடம் தனியாக இருக்கிறது என்று விளம்பரம் செய்தது. அடடா, பல பலான டில்டோ சமாச்சாரங்கள் இருக்கும், எப்படியும் ஒரு பாலியல் புரட்சி வரும் என்று நம்பி போய்ப் பார்த்தால் பலவித ஆணுறைகள் மட்டுமே இருந்தன. ஆணுறையை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு ‘காண்டம் வரட்டும்னு காத்துட்டு இருக்கோம்’ என்று சொல்லும் சுயகட்டுப்பாடுடைய தம்பதிகள் எப்படி இருப்பார்கள், எங்கே இருப்பார்கள் என்று பலவாறாக யோசித்துக்கொண்டு இருந்தகாலத்திலேயே அந்த போர்ட்டல் மூடப்பட்டது!

குத்து ரம்யா நமக்கெல்லாம் தெரியும். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் austerity drive என்றபெயரில் செலவைக் குறைக்கவேண்டும் என்றபோதும் தாஜ் ஓட்டலின் சூட் அறையில்தான் தங்குவேன் என்று அடம்பிடித்து மருமகனின் கம்பெனி அக்கவுண்ட்டில் பில் செட்டில் செய்த எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தாவின் கம்பெனிகள் குறித்து இதில் பார்க்கவும். http://articles.economictimes.indiatimes.com/…/59339821_1_t…

இந்தியர்களின் அகவுரிமை (privacy) அலாதியானது. தனது வியாபாரம், வருமானம், செலவுகள் தன்னிடமே இருக்கவேண்டும், யாரையும் நம்பக்கூடாது போன்ற பாலபாடங்கள்தான் பிற்காலத்தில் நாம் ஆரம்பிக்கும் தொழில்களின் அடிப்படை. உதாரணமாக நாம் வாடிக்கையாளரிடம் செய்யும் வணிகம், அதன் லாப நட்டம், தகராறுகள் எல்லாமே மூன்றாவது நபர் குறுக்கிடாமல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கபடுமெனில் அது தாறுமாறான வெற்றியடையும். அதன் உதாரணம் JustDial. நாம் எவ்வளவுக்கு வாங்கினோம், அதில் கடைக்காரருக்கு லாபம் எவ்வளவு, கடனா ரொக்கமா என்றெல்லாம் நம் பரிவர்த்தனையில் மூக்கை நுழைக்காத லிஸ்டிங் மாடல் வெற்றிபெற்றது. ஆண்டுக்கு 20000 ருபாய் கட்டணம் செலுத்த வியாபாரிகள் தயாராக இருக்கிறார்கள். அதேநேரம் ஆன்லைனில் 30 Days Replacement Guarantee வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம். நீங்கள் 25-ஆவது நாள் பொருளைத் திருப்பியனுப்பினால் பணம் இரண்டுநாளில் திரும்பி வருகிறது எனில் எத்தனை நாட்கள் கழித்து அந்த ஒரிஜினல் விற்பனையாளருக்கு பணம் போய்சேரும் என்பதை யோசிக்கவும். Number of Transactions-தான் இணைய வணிகத்தின் வெற்றி எனில் JustDial-இல் ஒருநாளைக்கு எத்தனை விசாரணைகள். கம்பெனி பல்லாயிரம் கோடிக்கு மதிப்பிடப்பட்டிருக்க வேண்டுமே.

நம்முடைய பணம், வியாபாரம் வேறு ஒருவரிடத்தில் போகக்கூடாது என்பது நம் அடிப்படை பாதுகாப்பு உணர்வு. ஒவ்வொரு வங்கிகளும், பல தனி நிறுவனங்களும் e-wallet என்றபெயரில் நமது பணத்தை அதில் சேமித்து வைக்கச்சொல்லி ஆலோசனை வழங்குவதும், அதன்வழியாக பரிவர்த்தனை செய்தால் தள்ளுபடிகள் வழங்குவதும் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதாக கவருவதில்லை. E-wallet தயார் செய்ய, பல நிறுவனங்களை அதில் கொண்டுவர, ஊடகங்களில் விளம்பரம் செய்ய, அதை தாங்கிப்பிடித்தவாறே ஏர்போர்ட்டுகளில் வாழும் நிறுவன உயரதிகாரிகளின் கடும் உழைப்பின் களைப்பைப் போக்க APAI பேக்கேஜில் ஆகும் ஸ்பா செலவுவரை எல்லாம் வாடிக்கையாளரே ஏற்கவேண்டும். அதற்கு என் பணம் வங்கிக் கணக்கிலேயே இருந்துவிட்டு போகட்டும் என்று வாடிக்கையாளர்கள் நினைப்பது இயல்பு.

மாப்பிள்ளை செத்தால் என்ன, பொண்ணு செத்தால் என்ன, எனக்கு வேண்டியது மாலைப் பணம் என்று என்ன நடந்தாலும் வருமானம் பார்ப்பது, ஆடிட்டர்கள், வங்கிகள், வெப் டிசைன், ஹோஸ்டிங் ஆட்கள்தான். அமெரிக்காவில் தங்க வேட்டை நடந்த காலத்தில் அதிகம் சம்பாதித்தது ட்ரான்ஸ்போர்ட் ஆட்கள்தான் என்று சொல்வார்கள். மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மறைமுகமாக மக்களை மாறவிடாமல் செய்வது பெரும்பாலும் வங்கிகள்தான். ஒரு வங்கிகூட PoS பொறிகளை fixed rate-இல் வழங்குவதில்லை. RBI-யைகாட்டி நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிகர்களை வங்கிகள் சுரண்டுவது தலையில் இருக்கும் ஈரும், பேனும் போல. நம்மை ஒரேடியாக கொல்லாது, ஆனால் அரித்துக்கொண்டே இருக்கும்.

ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் தரைதட்டிவிட்டதால் மும்பை IIT, இனிமேல் முதல் சுற்று placement-இல் asset light start up-களுக்கு எவ்வளவு சம்பளம் அறிவித்தாலும் இடமில்லை என்று போர்டு வைத்துவிட்டது. ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கும்போது IIT, IIM முன்னாள் மாணவர் யாரேனுமிருந்தால் சீக்கிரம் பணம் கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வழக்கில் உள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் Fund manager-களின் உள்ளடி வேலைகள் இந்த ஆண்டு சில வெளியே வரும் என்று பேசிக்கொள்கிறார்கள். Ola, Flipkart போன்றவற்றில் பெருமளவு முதலீடு செய்த SoftBank-இன் CEO நிகேஷ் அரோராவுக்கு ஆண்டுக்கு 900 கோடி சம்பளம் எதற்கு, அவர் முதலீடு செய்த ஒரு நிறுவனமாவது break-even அடைந்திருக்கிறதா என்று வங்கியின் முதலீட்டாளர்கள் ஓலை அனுப்பியிருக்கின்றனர்.

Social entrepreneurship என்பது நமது சமூகத்தின் இன்றைய முக்கியமான தேவை. பெண்களுக்கான சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து வழங்கும் ஜெயாஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் பத்மஸ்ரீ முருகானந்தத்தின் வரலாறை கூகுளில் பார்க்கவும். Time இதழின் அட்டையில் வந்து இன்று பில் கேட்சுடன் சமமாக உட்கார்ந்து பேசும் முருகானந்தத்தின் கண்டுபிடிப்பின் பலனை ஊரகப்பகுதியில் விசாரித்துப்பார்க்கவும்.

எது எப்படி நடந்தாலும் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும், ஆயிரம் பிசினஸ் மாடல் வந்தாலும் சம்பளம் என்பது அடிப்படை என்பதால் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்தி, அவர்களுக்கான payroll பராமரித்து வரும் staffing கம்பெனிகள் இன்று வளர்ச்சி கண்டுவருகின்றன. TeamLease பங்குச்சந்தைக்கு வந்துவிட்டது. கனடா வாழ் இந்தியரான பிரேம் வத்ஸாவின் Quess Corp விரைவில் பட்டியலிடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களை இந்த நிறுவனங்கள் third-party employee, vendor employee என்ற பல பெயர்களில் முறைப்படுத்தி வருகின்றன. PF, ESI போன்றவை உறுதி செய்யப்படுவதால் விவசாயக்கூலியாக இருப்பதைக் காட்டிலும் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்குப் போகலாம் என்று வருகிறார்கள். சாதி மற்றும் ஏனைய சமூக பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைப்பதோடு வேலையை விட்டு நிற்கும்பட்சத்தில் PF தொகை கொஞ்சம் மொத்தமாக கிடைக்கும் என்று நம்பித்தான் சேருகிறார்கள். அண்மையில் மோடி அரசு அதில் கை வைக்க நினைத்தபோதுதான் பெங்களூருவில் பேருந்துகளை எரித்து அடித்தட்டு ஊழியர்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். இத்தகைய சூழலில் நாம் வாழும்போது அவநம்பிக்கைதானே முதலில் வரும்.

அவநம்பிக்கை, போட்டி, பொறாமை என வாழும் விவசாயிகளிடம் ஸ்டார்ட்-அப் கான்செப்ட்கள் வெற்றிபெற வேண்டுமெனில் அது ஒரு மேஜிக் ஐடியாவாக இருக்கவேண்டும். அல்லது ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைக்கும் தொழில்நுட்பமாக இருக்கவேண்டும். Bt பருத்தியின் வெற்றியே மருந்தடிக்க தேவையான செலவு மற்றும் ஆட்களை ஒரேடியாக குறைத்ததுதான். மான்சாண்டோவின் மார்கெடிங் பட்ஜெட்தான் காரணம் என்று ACAC Critics-தான்(Air Conditioned room Arm Chair Critics) சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இன்றும் களைக்கொல்லிகள் கன்னாபின்னாவென்று விற்க காரணம் ஆட்களின் தேவையைக் குறைப்பதுதான். விவசாயிகளைப் புனித பசுக்கள், வாழும் தெய்வங்கள் என்றெல்லாம் பேஸ்புக்கில் ‘நைஷ் பதிவு தோழி’ வகையறா ஆட்கள்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இயற்கை விவசாயம் தாண்டி ஏதேனும் புதிய முயற்சிகள் வெற்றிபெறுவதாக தெரிந்தால் கார்ப்பரேட் சதி என்று பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

விவசாயத்தில் சார்தொழில்களில் மண்டப முதலீட்டாளராக பல இடங்களில் முதலீடு செய்து வெற்றிகரமாகவும், சிலவற்றில் சில இலட்சங்களை இழந்தும், பல இடங்களில் பல்பு வாங்கியும், இன்னமும் தினசரி பல ஊர்களில், சாதிவாரியாக, சீசன்வாரியாக, பயிர்வாரியாக பலதரப்பட்ட தகவல்களோடு அதற்குள்ளேயே சுற்றி வருவதால் ஒரளவுக்கு நமக்கு நடைமுறை சிக்கல்களில் புரிதல் உண்டு. இடுபொருள் விற்பனை சங்கங்கள் நீண்டநாள் தாக்குபிடிக்காது என்று நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னபோது பலர் நம்பவில்லை. அதேபோல் இன்று Farmer Producer Company என்று ஆரம்பிக்கப்படும் பெரும்பாலான உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்கள் அதிலிருக்கும் முக்கிய புள்ளிகளின் vested interest காரணமாகவே இன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருப்பது போல தெரிகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து பார்ப்போம்.

இன்று சந்தைக்கு வரும் 90% விவசாய ஸ்டார்ட்-அப்-கள், IT-யின் ஒரு நீட்சியாகவே தெரிகிறது. இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு சொல்பவையாக இல்லாமல் கூடுதல் சுமையாகவே பெரும்பாலானவை வருகின்றன. அரிதாக சில ஸ்டார்ட்அப்-கள் நல்ல பொருள்+ஐடியாவுடன் இறங்கி ஒரு MSME நிறுவனமாக பரிணமிக்கின்றன. பல Marketing Innovation ஸ்டார்ட்அப்-கள் வந்து, காணாமல் போகின்றன. விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஒரு புரட்சியை செய்யப்போகிறோம் என்று இதுவரை ஏழெட்டு பேராவது வந்து சொல்லி சென்றிருப்பார்கள். நம்மிடம் ஒரு வலுவான வயல்வெளி உற்பத்தி அணி இருக்கிறது. வல்லாரை போன்ற கீரைகளைக்கூட தினசரி நூறு கிலோ வேண்டுமென்றாலும் தருகிறோம், ஆனால் போக்குவரத்து, சேமிப்பு உங்களை சேர்ந்தது, ஒரே விலையில் கடைசிவரை எடுத்துக்கொண்டால் போதும், சந்தையில் என்ன விலைக்கு நீங்கள் விற்கிறீர்கள் என்றுகூட எங்களுக்கு சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டு “அப்ப, நம்ம ப்ரொடக்சன் எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்?” என்றால் ஊருக்கு போயிட்டு சொந்தபந்தங்களிடம் கலந்துகிட்டு கடுதாசி போடறோம் என்று கிளம்புபவர்கள் திரும்ப வருவதேயில்லை. குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள், காபி டே-க்களில் உட்கார்ந்து SWOT analysis, Number of transactions, MoM growth, RoI, Break-even என்றெல்லாம் சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. இயற்கை விவசாயம் இன்னும் ஜோராக இருக்கிறது. யாராவது புரட்சிகரமான ஆட்கள் வரமாட்டார்களா, மேஜிக் நடக்காதா என்று என்னைப்போல பலர் காத்திருக்கிறோம்.

#Start_UP #Farming #Ventures

போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது!

போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணங்கள் மிக அற்பமானவை. எளிதாக மக்களாட்சியில் சாதித்துக்கொள்ள முடிந்தவை. கடையேழு வள்ளல்களில் போரில் மடிந்தவர்களின் வரலாறு, அதன் தோற்றுவாய் என்னவென்பதை கொஞ்சம் பார்ப்போம்.

கடையேழு வள்ளல்களில் கொல்லிமலையை மையமாக வைத்து ஆண்டுவந்த ஓரியின் வில்வித்தைத் திறனை வன்பரணர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“வேழம் வீழ்த்த விழுத்தடை பகழி
பேழிவா யுளுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழற்றலை புகர்க்கலை யூருட்டி யுரற்றளைக்
கேழற்பன்றி வீழ வயலது
ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ?
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ!”

– புறநானூறு 152

ஒரு யானை, ஒரு புலி, ஒரு புள்ளிமான், ஒரு காட்டுப்பன்றி ஆகியவற்றைத் துளைத்து வீழ்த்திவிட்ட நிலையில் ஒரு அம்பு புற்றுக்கு அருகிலிருந்த உடும்பின் உடலில் சொருகி இருந்ததைக் காண நேர்ந்த ஒரு பாணர் கூட்டம், இப்படி ஒரே அம்பால் ஐந்து உயிரினங்களையும் கொல்லும் ஆற்றல் படைத்தவன் வல்வில் ஓரியோ? யாரோ? என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

அற்புதமான இயற்கை வளங்கள் நிரம்பிய மலையை ஆண்டுவந்த, வில்வித்தையில் சிறந்த மாவீரன் ஓரியின் கொல்லிமலையைக் கைப்பற்ற சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஆசை வருகிறது. இன்று தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சி, திருக்கோவலூரை ஆண்டுவந்த காரி-மீது (மலையமான் திருமுடிக்காரி) படையெடுத்து வெல்கிறான். அப்போது பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அடைக்கலம் சென்ற காரி, ஒருகட்டத்தில் ஓரிமீது படையெடுத்துச்சென்று பெரும்போர் புரிகிறான். வில்வித்தையில் பெரும் சூரனான ஓரி, போரின்போது மார்பில் வில் துளைத்து உயிரை விடுகிறான். கொல்லிமலையைக் கைப்பற்ற உதவிய (கிட்டத்தட்ட கூலிப்படையாக சென்ற) மலையமான் திருமுடிக்காரிக்கு முள்ளூர் மலையை வழங்கிவிட்டு கொல்லிமலையை தன்வசம் வைத்துக்கொள்கிறான் பெருஞ்சேரல் இரும்பொறை.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் மணமுடித்து தரச்சொல்லிக் கேட்ட பாண்டிய மன்னருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால் அந்த வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதனால் மூவேந்தர்களும் பாரியின் கோட்டையை முற்றுகையிட்டும் வெல்ல முடியாததால் பாணர்களைப்போல் வேடமிட்டு பாடல்களைப்பாடியும், இசை மீட்டியவாரும் கோட்டையினுள் சென்ற ஒற்றர்கள் கூர்வாளால் பாரி நெஞ்சில் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவரது மகள்களை அழைத்துசென்ற கபிலர், விச்சிக்கோன் என்னும் சிற்றரசனிடம் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டுகோள் வைக்கிறார். மூவேந்தர்களைப் பகைத்துக்கொள்ள அஞ்சிய விச்சிக்கோன் மறுத்துவிடவே, அவர்களை ஒரு அந்தனரிடத்தில் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விடுகிறார் கபிலர். பாரி மகளிர் இருப்பதையறிந்த ஒளவையார், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று திருக்கோவலூரை ஆண்டுவந்த மலையமான் திருமுடிக்காரிக்கு மணமுடித்து வைக்கிறார்.

தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய தொண்டைமான் இளந்திரையன் போருக்கு ஆயத்தமாகிறான். போரால் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படும் என்றெண்ணிய அதியமான், ஒளவையாரை தூதனுப்புகிறார். இளந்திரையனைச் சந்தித்த ஒளவை அவனது படைக்கலக் கொட்டிலைப் பார்வையிட்டுவிட்டு அவை வரிசையாக அடுக்கிவைத்து அழகாக இருப்பதாகவும் அதேநேரத்தில் அதியமானின் படைக்கருவிகள் தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் கொல்லர் பட்டறையில் கிடப்பதாகவும் கூறி இளந்திரையனுக்கு போரில் ஈடுபட்டால் தோல்விதான் ஏற்படும் என இடித்துரைத்துப் போரை தடுத்துவிடுகிறார். ஆனாலும் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை தன்மீது போர் தொடுத்துவிடுவானோ என்று அஞ்சிய அதியமான், ஆயர் தலைவனான கழுவுள் என்பவனோடு இணைந்து இரும்பொறையின்மீது போர் தொடுக்கிறான்.

அரசன் உறங்கும் முரசுக்கட்டிலில் உறங்குவோருக்கு மரணதண்டனை உண்டென்றாலும் களைப்பினால் அதில் உறங்கிவிட்ட மோசிகீரனார் புலவர் என்பதால் அவரை எழுப்பாமல் கவரி வீசிய இரும்பொறைக்கு அதியமான் மீது சினமேற்பட்டு போருக்கு ஆயத்தமானான். இரும்பொறையின் அரசவையிலிருந்த புலவர் அரிசில்கிழார், அதியமானுக்கு நிச்சயமாக தோல்வி ஏற்படும் என்பதையறிந்து அவனைச் சந்தித்து போரை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கிறார். அதை புறந்தள்ளிய அதியமான் போரில் ஈடுபட்டு மடிகிறான்.

மயில் போர்த்திக்கொள்ளாது என்று தெரிந்தும் அதற்கு போர்வை தந்த பேகன் மனைவியை மதித்து வாழாததை கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்றோர் இடித்துரைத்தும் கேளாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து மடிகிறான்.

இதையெல்லாம் சமகால அரசியல் சூழலில் பொருத்திப்பார்த்தால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

நண்பர் ஜெயநாதன் எழுதியதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்

“படை பெருத்ததால் பார் சிறுத்ததோ
பார் சிறுத்ததால் படை பெருத்ததோ”

ஜெயங்கொண்டார், கலிங்கத்துப்பரணியில் இதைச் சொன்னாலும் சொன்னார், மேடைக்கு மேடை, பார்த்தாயா தமிழனின் புஜபல பராக்ரமத்தை என்று கொக்கரிப்பு எங்கும்.
விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னன், குலோத்துங்கன். அவன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் என்ற கேள்வி பொதுவாக கேட்கப்படுவதில்லை. Iron Man, Hulk, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற கற்பனை வீரசாகச படங்களை பார்த்து வளர்ந்த சமூகம் போரிற்கான விலையை யோசிப்பதில்லை. போர் என்பது ஏதோ, தொடையை தட்டி என் மச்சினிச்சிக்கு மஞ்சள் அரைத்தாயா, என்னை எதிர்க்க உங்களிடம் திராணி இருக்கிறதா போன்ற உப்பு பெறாத கேள்விகளை கேட்பது என்று எண்ணுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம் வளரும்பொழுது, நமக்கு கூறப்பட்ட கற்பிதங்கள் அப்படி. அது தான் அவர்களை நரம்பு புடைக்க பேசும் எவரையும் நம்ப வைக்கிறது, நயமாய் பொய் சொன்னாலும், உரக்கச் சொன்னால் அதற்காக உயிரை கொடுக்க வைக்கிறது.
ஆக, குலோத்துங்கன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான், யார் மீது போர் தொடுத்தான்?
அவன் போர் தொடுத்தது, ஆனந்தவர்மன் சோட கங்கன் மீது. இன்னும் தெளிவாய் கூறவேண்டுமானால், ஆனந்தவர்மன் சோட கங்கனின் தாய் வழி மாமன் முதலாம் குலோத்துங்கன். காரணம், வரி கட்டாதது.
ஆக, இரத்த சம்பந்தம் கொண்ட இரண்டு உறவினர்கள் அடித்துக்கொண்டு, பின்னர் படை பெருத்ததால் பார் சிறுத்ததோ, பார் சிறுத்ததால் படை பெருத்ததோ என்று உயர்வு நவிற்சி அணி சொட்ட சொட்ட நயமாய் மண்டப கவிஞரை கவி பாட வைத்திருக்கின்றனர் கலிங்கத்துப்பரணி என.
எனது கவலை, அந்த அத்துவான கலிங்க காட்டில் தங்கள் உயிர் நீத்த பெருத்த படை குறித்து, இந்த வரிகளை வீரத்தின் அடையாளமாய் நம்பிக்கொண்டிருக்கும் அண்ணனின் விழுதுகள் குறித்து.
இதை எழுதிய பின், வரும் பெருத்த பயம், கீழை கங்க நாட்டின் ஆனந்தவர்மன் சோட கங்கன் சோழ வம்சத்துடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும், அவன் தான் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எடுப்பித்து கட்டினான் என்ற வரலாற்று உண்மையினாலும்.
யாருக்கு தெரியும். நாளையே தம்பிகளின் தம்பிகள், நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் – கலிங்கம் ஆண்ட வீர பரம்பரை நம் சோழ பரம்பரை என்று WhatsApp இல் களமாடினாலும் ஆச்சரியம் இல்லை. அகண்ட பாரதம் போல் அகண்ட தமிழகத்தை வென்றெடுப்போம் என்று இவர்கள் கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.
அதுவும் சரி தான். மெய்நிகர் உலகில், இணையத்தில் போர் செய்ய, புரட்சியை வித்திட எதற்கு வீரமெல்லாம்.

#அட்டகத்தி #மாமன்மருமகன்சண்டை #கலிங்கத்துப்பரணி

திருவோட்டுக்காய்

‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பிச்சைப்பாத்திரம் ‘திருவோட்டுக்காய்’ எனப்படும் Beggar’s Bowl அல்லது Calabash tree மரத்தின் விதைதான். Crescentia cujete என்ற அறிவியல் பெயருடன் Bignoniacea குடும்பத்தை சேர்ந்தது. இதன் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு என்னவென்றால் Cauliflorus flowers – அதாவது வளரும் குருத்தில் பூ உண்டாகாமல் தண்டுப்பகுதியில் உண்டாகும். வௌவால் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று காய் உண்டாகிறது (பப்பாளி, பலா மரங்களும் தண்டுப்பகுதியில் காய் வைக்கக்கூடியவை என்றாலும் அதன் மகரந்தச்சேர்க்கைக்கு வௌவால்கள் தேவையில்லை).

நம்மூர் பருவநிலைக்கு சாதாரணமாக வளரக்கூடியது. அறிவியல் பெயருடன் இருக்கும் படம் பேராசிரியர் Balasubramani Venkatasamy அவர்களால் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்டது. ஏனைய படங்கள் கோயமுத்தூரில் எடுக்கப்பட்டவை. காய்களை கிட்டத்தட்ட ஒருமாதம் காயவைத்து, அறுத்து விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். முளைக்கவைத்து பின்னர் தனியாக படத்தை ஏற்றுகிறேன். ஏதாவது வித்தியாசமான மரங்களை வளர்க்க விரும்பினால் முயற்சித்து பாருங்கள். வீட்டில் திருவோட்டுக்காய் விதை/மரங்கள் இருக்ககூடாது என்ற மூட நம்பிக்கையை யாரேனும் சொல்லக்கூடும். அதில் உண்மை ஏதுமில்லை. முருங்கை, இலவம்பஞ்சு போன்றவை வீட்டுக்கருகில் இருக்கக்கூடாது என்பதற்கு காரணம் அதன் கிளைகள் சாதாரணமாக காற்றடித்தாலே முறிந்துவிழுந்து ஆபத்தை உண்டாக்கும் என்ற காரணம்தான்.

தினத்தந்தியில் வந்த தகவல்களில் பாதி தவறானது. வேண்டுமானால் இந்த லிங்கில் பார்க்கலாம். https://www.facebook.com/dailythanthinews/photos/a.770136709669611.1073741828.630553376961279/1031777490172197/?type=3&theater
அப்புறம் உலகத்திலேயே பெரிய விதை எது என்ற சிறுவர்மலரில் அடிக்கடி வரும் பொது அறிவு கேள்விக்கான விடையும் ஒரு படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ‘லொடைசியா மால்தீவிக்கா’ விதை கோவையில் காஸ் வன அருங்காட்சியகத்தில் (Gass Forest Museum) இருக்கிறது.

மாமனார் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கடியில் உட்கார்ந்து அந்த காய்களை சுரண்டிக்கொண்டிருந்தபோது அந்தப்பக்கமாக வந்தவர் “என்ன பண்றீங்க” என்றார். “திருவோடு ரெடி பண்ணிட்டுருக்கிரனுங்” என்றதும் அமைதியாக சென்றுவிட்டார். சிலவினாடிகள் கழித்துதான் இடம், பொருள் அறியாமல் பேசக்கூடாது என்று புரிந்தது!