நடுத்தர வர்க்கத்தின் நாசகார சிந்தனைகளின் தொகுப்பு

ரேஷன் கார்டு பயனாளியின் தேவையைப் பொருத்து வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டாலும் அதில் ஒரு சமத்துவம் இருக்கிறது. தனக்கு தேவைப்பட்டதை மட்டும் வாங்கிக்கொண்டாலும் எல்லோருக்கும் ஒரே வரிசை, ஒரே கட்டணம்தான். பணக்காரனுக்கு தனி வரிசை, தனி மொழி, பஞ்சத்துக்கு வந்தவனுக்கு தனி வரிசை, தனி ஆபிசர் என்று பாரபட்சம் காட்டுவதில்லை.

எல்லோரும் வங்கிச்சேவைக்குள் வரவேண்டும் அதுவே கறுப்புப்பணத்தை ஒழிக்கும் எளிய வழி என்று ‘படித்த வர்க்கத்தினர்’ கருத்துத் தெரிவிக்கின்றனர். வங்கியில் கணக்கு வைக்கும்போதே சாதா கஸ்டமர், பிளாட்டினம் கஸ்டமர் என்ற ஏற்றத்தாழ்வு ஆரம்பித்துவிடுகிறது. சாதா கஸ்டமர் என்றால் வரிசையில் நின்று சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும், பிளாட்டினம் கஸ்டமரை மேனேஜரே வாயெல்லாம் பல்லாக வாசற்படிவரை வந்து அழைத்துச்சென்று தனது கேபினில் உட்காரவைத்து காபி கொடுத்து, சேவையும் வழங்கி அனுப்புவார். சில இடங்களில் லுங்கி அணிந்து உள்ளே வரக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையும் உண்டு.

பாங்கி அதிகாரி நண்பர்கள் பலர் We are not here for charity, everything is business; this is hard reality of life bro என்று மூஞ்சியில் பஞ்ச் விடக்கூடும். இதே தர்க்கம் அரிசிக்கடைகளுக்கும் உண்டு. நிறைய வாங்கும் பிளாட்டினம் டைப் வாடிக்கையாளர்களுக்கு, சமையல்காரர்களுக்கு பிரத்தியேக கவனிப்பு, தனி ரேட், கடன் சலுகை என பல உண்டு. வாரம் இரண்டு கிலோ, நான்கு கிலோ வாங்கும் லுங்கி அணிந்த கஸ்டமருக்கு இத்தகைய பிரிவிலேஜ் கிடைக்காது.

அதனாலேயே அந்த லுங்கிக்கார கஸ்டமர் வேலை செய்யுமிடத்தில் கூலியாக வரும் பணத்தில் கொஞ்சம் நெல்லை வாங்கி வந்து ரைஸ் மில்லில் கொடுத்து தானே அரைத்துவந்து வைத்துக்கொள்கிறார். நெல் வாங்கி அரைத்து தவிட்டையும் மாட்டுக்காக எடுத்துவரும் ஒருவரை அரிசி தனியாக, தவிடு தனியாக கடைகளில்தான் வாங்கவேண்டும் என்பதுதான் இந்த Banking for all சிஸ்டம்.

oOOOOo

ரொக்கம் கொடுத்து வாங்கிவந்த மீனைத் தட்டில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியை போட்டதும் கறுப்புப்பண விவாதம் குறித்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது.

கணவனும் மனைவியுமாக சேர்ந்து தினமும் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு சிறிய உணவகம் வைத்திருக்கும் ஒருவரை டை கட்டிய ஆசாமி ஒருவர் கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். தினம் ஆறாயிரம் ரூபாய் என்றால் கிட்டத்தட்ட வருடத்துக்கு இருபது இலட்சத்துக்கு வியாபாரம், நீங்கள் ஏன் வங்கிச்சேவையை பயன்படுத்துவதில்லை என்று புத்தசாலித்தனமாக மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்வி கேட்டவண்ணம் இருந்தார்.

வணிகர்கள் மீதான ஒரு பொதுப்புத்தியில் ஒன்று அவர்களது கல்லாவில் விழும் பணம் அனைத்தையும் அவர்களே வைத்துக்கொள்வார்கள் அல்லது குறைந்தது 40% இலாபம் இருக்கும் என்பதுமாதிரியான சிந்தனை.

வங்கியின் இலாபம் என்பது ஊழியர்களின் சம்பளம், காப்பீடு மற்றும் இதர பணிசார் அனுகூலங்கள், செலவினங்கள், புதிய பொருட்கள் வாங்கும் செலவுகள், ஏற்கனவே இருக்கும் சொத்துக்களின் மீதான தேய்மானம், கடன் மற்றும் அதற்கான வட்டி கழித்துதான் கணக்கிடப்படுகிறது. ஒருவர் தானே இயக்குனராக இருந்து நடத்தும் கம்பெனியாக இருந்தாலும் தனது சம்பளம் போகத்தான் கம்பெனி இலாபத்தைக் கணக்கிடுவார்.

காலை ஆறுமணியிலிருந்து இரவு பத்து மணிவரை ஓய்வில்லாமல் வருடம் முழுவதும் வேலை செய்யும் ஒரு நபருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும், போனஸ் தரவேண்டும்? ஏதாவது ஒரு காரணத்தால் பணிபுரிய முடியாமல் போனால் இழப்பீடு உண்டா, மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் உண்டா, வேறு ஏதாவது படிகள் உண்டா, விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியூர் சென்றால் வேறு யாராவது அவரது வேலையை பதிலீடு செய்வார்களா, ஓய்வூதியம் உண்டா? அது எப்படி சொந்தத் தொழில் செய்பவர்களின் வருமானத்தை பிரித்துப் பார்க்காமல் ஒரு மொன்னையான ஊகம் செய்ய முடிகிறது?

அவர்களின் வாழ்க்கையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் தனது உழைப்பின் மீதான நம்பிக்கையில் ரிஸ்க் எடுப்பவரை லிமிடெட் கம்பெனிகளில் சம்பளம் வாங்கும் ஒருவரோடு ஒப்பிட, தடித்த தோல் வேண்டும். கம்பெனியின் புரமோட்டருக்குக்கூட கடைசியில் sweat equity என்ற ஒன்று உண்டு; சிறிய, அமைப்புசாரா தொழிலில் இருப்பவர்களுக்கு அது வெறும் வியர்வை மட்டுமே. அந்த வியர்வையைத்தான் ஏசி அறையில் உட்கார்ந்திருக்கும் டை கட்டிய ஆசாமிகள் கிடுக்குப்பிடி கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு பரிகசிக்கிறார்கள்.

மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி – பசுமைப் பத்திரிகைகளின் எழுச்சி

கேள்வி: மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி என்ற ரீதியில் கட்டுரை வெளியிடும் பிரபல பசுமைப் பத்திரிகை, வேளாண்மைத்துறையில் உள்ள அதிகாரிகளில் பலர் பாரம்பரிய விவசாய முறைகளில் ஆர்வம் கொண்டு இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க அயராது உழைத்து வருவதாகவும் அதனால் தமிழகத்தில் பெரிய அலை அடிப்பதாகவும் கூறிவருகிறது. அவ்வாறு அலை ஏதாவது அடித்து கிளர்ச்சி ஏற்பட்டு, புரட்சி உண்டாகி, மலர்ச்சி வந்துகொண்டிருக்கிறதா?

பதில்: ‘இயற்கை விவசாய முறை’ என்று செயற்கையாக இன்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கருதுகோளை விவசாயிகளுக்கு எடுத்துச்செல்வதை வேளாண்மைத்துறை அதிகாரிகள் செய்வது – ஒருசில திட்டங்கள் தவிர்த்து – அவர்களது அன்றாட கடமைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். அவ்வாறு சமூக ஊடகங்களில் செய்துவரும் சிலர் நேரத்தைக் கொல்வதற்காக வேண்டுமானால் செய்துவரலாம். ஏனெனில் ஆலோசனை கொடுப்பதோடு அவர்கள் நின்றுவிடுவதும், அதைப் பின்பற்றி செயல்படுத்துபவரின் நேரமும், பணமும் இவர்களது ரிஸ்க் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று.

அதேநேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி விற்பனை உரிமங்களை வழங்குவது, விற்பனையை ஒழுங்குபடுத்துவது, மாதிரிகள் எடுத்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் செய்வது , தேவைப்படின் சட்ட நடவடிக்கை எடுப்பதெல்லாம் துறை அதிகாரிகளின் அடிப்படைக் கடமைகள். இந்த அடிப்படை வேலைகளிலேயே சுணக்கம் இருக்கவே செய்கிறது.

வேளாண்துறையில் பணியாற்றும் நண்பர்கள் பலரும் அப்படியெல்லாம் இல்லை என்று இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும். ஆனால் நடைமுறையில் புதிதாக ஒரு கடை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முனைவோர் இந்த உரிமங்களுக்காக குறைந்தது இரண்டு மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஓரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து முன்பணம் செலுத்தி, வாடகை மாதந்தோறும் கட்டி, உரிமங்கள் வரும்வரை காத்திருந்து (சராசரியாக மூன்று மாதம் ஆகும்) பின்னர்தான் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும்.

முறையாக விண்ணப்பித்து, அதிகாரி நேரில் வந்து பார்த்துவிட்டுச்சென்று, உரிமம் வழங்கிட இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிடும் என்றாலும் பின் தேதியிட்டே உரிமம் வழங்கப்படுவதால் எல்லாம் முறையாக நடப்பதாகவே தோன்றும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்த்தகர்கள் என்றாலே பதுக்கல்காரர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், கொள்ளை இலாபத்துக்கு விற்பவர்கள் என்ற பொதுப்புத்தி சமூகத்தில் பரவலாக உண்டு. நியாயமாக வணிகம் செய்யவேண்டும் என்ற நோக்கில் வர்த்தகர்கள் முன்வந்தாலும் Principal certificate-களை என்டார்ஸ் செய்ய, பழைய உரிமத்தைப் புதுப்பிக்க என எதற்குமே இத்தனைநாள் காலக்கெடு என்ற ஒன்று இல்லாததால் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மன உளைச்சல்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு சட்டம்தான் என்றாலும் விதைப் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதிக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே சரக்குகளை விற்பதை நிறுத்தி திருப்பியனுப்ப வேண்டும் என்பது, உர மூட்டைகளை பிரித்து விற்கக்கூடாது என்பது விதிமுறை என்றாலும் விவசாயிகளுக்கு சேவை செய்ய பிரித்து சில்லரையில் விற்கவேண்டும் என வலியுறுத்துவது என பல அதிகாரிகள் சட்டாம்பிள்ளையாகி விடுவதோடு, ‘இவரு உண்மையிலேயே அக்ரி படிச்சிருப்பாரா?’ என்ற நகைப்புக்கும் வழிகோலுகின்றனர்.

கள யதார்த்தம் இப்படியிருக்க, மரபுவழிக்கு திரும்புங்கள் என்று சட்டைபோடாமல் பேஸ்புக்கில் படம் போட்டு ‘அழைப்பு’ விடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியிருக்கிறது.

ஆகவே அலை அடிக்கிறது, எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரேனும் சொன்னால் தீர விசாரித்து பின்னர் முதலீடு செய்யவும். கஷ்டப்பட்டு நீங்கள் சம்பாதித்த பணம், செலவிடும் நேரம் எல்லாம் போனால் வராது.