பெயரிடுதலில் உள்ள அறம், அரசியல், மொழித்திறன் குறித்து டிசம்பர் மாத தடம் இதழில் வெளியான நக்கீரன் அவர்களின் ‘தமிழ் – நம் நிலத்தின் கண்ணாடி’ கட்டுரையை மறுவாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, தொழில்நிமித்தமாக பல கிராமங்களுக்கும் சென்றுவருகையில் கண்ணில் படும் பெயர்ப்பலகைகள் ஒரு புது வகையான மாற்றங்களை, மாற்றங்கள் என்பதைவிட செயற்கையான திணிப்புகளை உணர்த்தியது.
ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள நிலத்தின் வளமை, நீர் இருப்பு, மரஞ்செடிகொடிகள், வனம், புவியியல் தகவமைப்புகள், அங்கிருந்த பூர்வகுடிகள், அவர்களது மூதாதையர்கள், அங்குள்ள நிலவுடைமைச் சாதி போன்றவற்றைப் பொறுத்து நிலங்களுக்கு/தோட்டங்களுக்கு பெயர்க்காரணம் அமைகிறது. பெரும்பாலான ஊர்களின் பெயர்களும் அவ்வாறே இருக்கின்றன. இருட்டுப்பள்ளம், எதிர்மேடு, தட்டாங்காடு என பல ஊர்களின் பெயரே அந்தந்த நிலவமைப்பை உணர்த்தும்.
வெறும் காடாக இருந்த நிலப்பரப்புகளைப் புனரமைத்து விவசாயத்துக்கு கொண்டுவந்தவர்கள் அல்லது அங்கிருக்கும் பெருவாரியான சாதியைச் சாராதவர்களால் உண்டாக்கப்பட்ட விளைநிலங்கள் நாயக்கர் தோட்டம், வண்ணாந்தோட்டம், ஒட்டந்தோட்டம், துலுக்கந்தோட்டம் என்றபெயர்களில் இயல்பாகவே வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் தனி நபராக அல்லது எளிய குழுக்களாக வந்து அழுத்தமான இடத்தைப் பெற்றதன் அடையாளம் அது.
பிற்காலத்தில் விவசாயத்திலிருந்து விலகி வேறு தொழில்களை ஏற்றுக்கொண்டவர்களை சற்று வேறுபடுத்தியும், உயர்வாகவும் காட்ட தொழில்சார் அடைமொழிப்பெயர்கள் – வாத்தியார் தோட்டம், கணக்கன் தோட்டம், பிரசிடன்டு தோட்டம், பால்காரர் தோட்டம், அமெரிக்காக்காரர் தோட்டம் – வழக்கமானது.
அண்மையில் ஒரு தோட்டத்துக்குச் செல்ல வழி கேட்கையில் ‘ஸ்வஸ்திகா கார்டன்’ என்றனர். அதுசெரிங்னா, ஊருக்குள்ள வந்து என்னன்னு கேக்கோனும் என்றதும் வறட்டுப்பள்ளம் என்றது எதிர்முனை. ஒவ்வொரு ஊரிலும் கார்டன், எஸ்டேட், ஃபார்ம்ஸ், மீடோஸ், வேலி(valley), அவென்யூ என்றெல்லாம் பெயரிடப்படுபவை அந்த ஊர்களுக்கு துளியும் தொடர்பில்லாத வந்தேறி புதுப்பணக்காரர்களால் வலிந்து திணிக்கப்படுபவை. அந்த பெயர்ப்பலகைகள் கழட்டி வீசப்பட்டால் 99% பக்கத்து தோட்டத்துக்காரர்களாலேயே ஒரு மாதத்துக்குள் மறக்கப்பட்டுவிடும். கிரயப்பத்திரங்களில் தாமாகவே எழுதிக்கொண்டாலும், அந்த நிலங்கள் விற்கப்பட்டபின் இயல்பான பெயர்களே எஞ்சியிருக்கும் என்று தோன்றுகிறது.
இன்றுவரை எங்கேயும் பெண்களின் பெயரில் நிலங்கள் அடையாளம் காட்டப்படுவதை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நான் கண்டதில்லை. ஊருக்குள் பாக்கியம் டீச்சர் வீடு என்று வழிகாட்டப்படுவது, வயலுக்குச் சென்றதும் பண்ணையக்காரர் தோட்டம் என்றாகிவிடுகிறது. கணவனை இழந்ததும் தனி ஆளாக விவசாயம் செய்யும் பெண்களின் வயல்கள் அவர்களது ஆயுளுக்குப் பின்னர் அவர்களது பெயர்களை உதிர்த்துவிடுவது அவ்வளவு இயல்பானது என்று சொன்னால் நிலவுடைமைச் சமூகங்களின் ஆணாதிக்க முகங்களை நாம் மறைத்துக்கொள்வதேயாகும்.
நான் பணிபுரியும் நிறுவனத்தின் கிட்டங்கி இருக்கும் பகுதியிலுள்ள ஒரு அடுக்ககத்திற்கு ஏதோ சமஸ்கிருதப் பெயர் இருந்தது. அதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதைவிட தயிர் இட்டேரி சாலை என்ற அந்த சாலையின் பெயர்க்காரணம் எப்படி வந்திருக்கும் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
பி. எஸ். ஜி சமுதாய வானொலியில் ஒரு சொற்பொழிவாளர் பேசியதை பாதியிலிருந்து கேட்க நேரிட்டது. பண்டைய சமூகத்தில் பெயரில் முன்னொட்டு சேர்க்கும் அங்கீகாரம் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே இருந்ததாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள வீட்டை எளிதில் அடையாளம் காணவும், கல்வியறிவற்றவர்கள் யாரும் தடுமாறக்கூடாது என்பதற்காக எழுதப்படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் வீட்டை விரைந்து அடையவும் அவர்களது பெயர்களைவிட தொழிலின்பால் அழைக்கப்பட்டனர். பின்னர் வக்கீல்களுக்கு இந்த அடையாளம் வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.
புதிய ஊர்களுக்கு செல்கையில் திசைகளை வைத்து நகர்வதும், ஊரின் சரிவு, ஓடைகள் செல்லும் திசை போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே செல்வது இயல்பான ஒன்றாகிவிட்டபடியால் அலைபேசியில் கூகுள் மேப் பார்ப்பது எனக்கு ஒரு விநோதமான பழக்கமாகவே தெரிகிறது. ‘தெக்கு வடக்கு தெரியாத பயல்’ பல வயதானவர்கள் திட்டுவதைக் கேட்டதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை இரவு பகல் எந்நேரத்திலும், எந்த இடத்துக்குச் சென்றாலும் திசை தெரியாதவர்கள் வெளியுலக பயண அனுபவம் இல்லாதவர்கள் என்ற புரிதல்.
2014-இல் சென்னையில் மராத்தான் ஓட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது பள்ளிக்கரணைப் பகுதியில் சவரம் செய்ய ஒரு கடை தேடி வெகுதூரம் நடந்துசெல்கையில் பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதிக்கு அடிமடையில் உள்ள வீடுகிளி்ல் ஒன்றில்தான் தங்கியிருப்பது புரிந்தது. வேளச்சேரி புகாரி உணவகம் சிறப்பாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதை ஏற்று பயணிக்கையில் கோவையிலுள்ள சங்கனூர் கண்முன் வந்துசென்றது. சங்கனூரை சங்கனூர்ப்பள்ளம் என்றே குறிப்பிடுகின்றனர். அந்தகாலத்தில் யானைகளே வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட இடம் எனவும், கோவை மக்களின் மணல் தேவைகளைப் பூர்த்திசெய்த இடம் எனவும், வெள்ளப்பெருக்கைக் காண மக்கள் வண்டிமாடு கட்டி வருவார்கள் எனவும், பல தீர்க்க முடியாத கணக்குகள் தலை தனியாக முண்டம் தனியாக வெட்டி வீசப்பட்ட இடமான சங்கனூர்ப்பள்ளம் இன்று வெறும் இருபது அடி அளவில் சுருங்கிவிட்டது. அதற்கு சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்த கெளசிகா நதி இன்று தேடப்படும் நதியாகிவிட்டது. என்றாவது ஒருநாள் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யப்போகும் கனமழை சென்னையில் மழையினால் உண்டான பாதிப்பைவிட அதிக சேதத்தை சங்கனூர், இரத்தினபுரி, கணபதி பகுதிகளில் உண்டாக்கக்கூடும். ஃபெர்ன்ஹில், ஆர்க்கிட் கவுன்ட்டி, மேப்பிள் மீடோஸ் எனப்படும் நவயுக நாமகரணங்கள் சங்கனூர்ப்பள்ளம் என்று தூசி தட்டப்படலாம்.
கூவத்தூர் என்பதும் இயல்பாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கும். நெய்தல் நிலங்கள், தொழில்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாலும் அங்கிருக்கும் இடங்களுக்கு நிச்சயமாக பெயர்க்காரணங்கள் ஆழ்ந்த பொருளுடன் இருக்கும். கோல்டன் பே என்பது வலிந்து திணிக்கப்பட்ட பெயர் என்பதுடன் அது உள்ளூர் மக்களுக்கு தோட்டக்காரர், சரக்குந்து ஓட்டுனர் போன்ற ஒருசில அடிமட்ட வேலைகளுடன் நின்று காவலாளி முதல், மசாஜ் பார்லர் வரை வெளியூர் ஊழியர்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் இத்தகைய நாமகரணங்கள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.
கோட்டை கட்டி அடக்கி ஆண்டவர்கள், பல புரட்சிப் பட்டங்களை முன்னொட்டாகக் கொண்டவர்கள், அரசர்கள், அதிகார மையங்கள் என பலவும் மண்மேடாகிப் போவதைப் பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் மண்தான் நம்மை வெல்கிறது. இடைப்பட்ட குறுகிய காலத்தில் அந்த மண்ணுக்கு நாம் பெயர்சூட்டுவதை மண் எப்படிப் பார்க்கும்?