கேள்வி: வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்க செய்திட வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. அது சாத்தியமா? ஏன் எந்த அரசாங்கமும் அதை செய்ய முன்வரவில்லை?
பதில்: அந்த, இந்த, எந்த அரசாங்கத்தாலும் அதை செய்ய முடியாது. அடுத்த 20 வருடங்களில் அதற்கான உட்கட்டமைப்பில் பாதி ஏற்படுத்தினாலே மாபெரும் சாதனையே.
விவசாயம் இன்னும் முறைப்படுத்தப்படாத, போதுமான எந்த தரவுகளும் இல்லாத, வரி இல்லாத வருமானமுடைய கடைநிலைத் தொழிலாகவே இருக்கிறது. அதில் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல், சூழ்ச்சிகள் என எல்லாம் உண்டு. ஜாதி இல்லாமல் இந்தியாவில் விவசாயம் என்ற தொழில் இல்லை. அதனுடன் இணைந்த வர்ணாசிரம பேதங்களும் அதனடிப்படையில் இருக்கும் சுரண்டல்களும் கொஞ்சம் கொஞ்சம் விவசாயம் என்ற பெயரில் தாக்குப்பிடிக்க வைத்தன.
இன்று கல்வி அனைவருக்குமானது என்றாகிவிட்டபடியால் பல்வேறு தொழில் வாய்ப்புகள் – கோவில் அர்ச்சகர் தவிர்த்து – அனைத்து சாதியினருக்கும் கிடைப்பதால் விவசாயத் தொழிலிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி ஆட்கள் குறைகிறார்கள் என்றால் இயந்திரங்களின் எண்ணிக்கை பெருகுகிறது; பல சிறு, குறு
விவசாயிகளும் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்றால் விவசாயிகளின் எண்ணிக்கை குறையத்தானே வேண்டும். குறைவான விவசாயிகள் நிறைய மக்களுக்கான சந்தைக்கு உற்பத்தி செய்து தருகிறார்கள் என்றால் இலாபம் அதிகரிக்கத்தானே வேண்டும்? அப்படியும் நடக்கவில்லையே ஏன்?
காரணம், நம்மிடம் வேளாண்மை குறித்த data என்ற ஒன்று உருப்படியாக இல்லை. பொய்த் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தராது. அவை வெறும் ஊகங்களாகவே இருக்கும். ஊகங்கள் எதிர்மறை விளைவுகளையும் தரும். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் உடுமலைப்பேட்டை, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் அரசு வேளாண்மைத்துறை சமர்ப்பித்த பரப்பளவு கணக்கின்படி தோராயமாக 200 டன் மக்காச்சோள விதைகளே விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நண்பர் ஒருவர் மேலாளராக பணிபுரிந்த நிறுவனம் மட்டும் 600 டன் விதைகளை விற்றது. மற்ற முன்னணி நிறுவனங்கள், லெட்டர்பேட் நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து 800 டன் விதைகள் விற்றிருக்கும். ஆனால் அரசாங்க கணக்கீட்டின்படி இத்தனை ஆயிரம் டன் மகசூல் வரும் என்று ஊகித்து இன்ன விலைக்கு மக்காச்சோளம் விற்கும் என்று எதையாவது சொல்வதும், actual மகசூல் பலமடங்கு அதிகமாக வந்து விலை அதளபாதாளத்திற்கு போவதும் இப்படித்தான்.
சிலநேரங்களில் அரசாங்கப் புள்ளிவிவரம் ஒன்றைச் சொல்லும். ஆனால் அந்த பயிருக்கான பரப்பளவு அதில் பாதிகூட இருக்காது. சில வருடங்களுக்கு முன்னர் பருப்பு விலை எகிறியதை நினைவில் கொள்க. சின்னச்சின்ன வியாபாரிகள் முதல் பெரிய சேட்ஜீக்கள் வரை தங்களால் இயன்ற அளவு சரக்கை இருப்பு வைத்திருப்பார்கள். அஃது எந்த டேட்டாவிலும் வராது. உண்மையில் விலை ஏறினால் இந்த சரக்குகள் அந்த இழுவையில் வெளியேறி சந்தையில் கலக்கும். அதனால் நுகர்வோருக்கு ஓரளவுக்கு இலாபமே. இதைப் பதுக்கல் என்று கூற முடியாது. ஒரு பொருள் அடிமாட்டு விலைக்கு விற்கும்போது நிறைய வாங்கி இருப்பு வைத்து விலை ஏறும்போது விற்பதைப் பதுக்கல் என்று அழைப்பதே தவறு. உற்பத்தி அளவுக்கதிகமாக இருக்கும் பொருட்களில் எல்லாவற்றையும் வாங்கி இருப்பு வைத்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க முடியாது. அடிமாட்டு விலையில் அவர்கள் வாங்கவில்லை என்றால் அவற்றை உற்பத்தி செய்தவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குப்பையில்தான் கொட்ட வேண்டும். அதே பொருள் விலை ஏறுகையில் இந்த so called பதுக்கல் சரக்கு என்ற ஒன்றும் இல்லாவிட்டால் நுகர்வோருக்கு பெரும் செலவு ஏற்படும். கையிலிருக்கும் உபரி குறைவதால் ஒட்டுமொத்த வாங்கும் திறன் குறையும்; மேற்கொண்டு என்ன ஆகும் என்பதை பல பொருளாதார நிபுணர்கள் அவ்வப்போது விளக்கி வருகிறார்கள். ஆனால் நமக்கு வறட்டு கம்யூனிசம் அல்லது முரட்டு முதலாளித்துவம்தான் பிடிக்கிறது!
காய்கறிகள் விலை ஏறும்போதெல்லாம் குளிர்பதன கிட்டங்கிகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. நமக்கு உற்பத்தியின்மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் குளிர்பதன கிட்டங்கி கான்செப்ட் எப்படி எடுபடும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிலோ பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பதற்காக மிளகாயைக் குளிர்பதனக் கிடங்கில் போட்டு மூன்று மாதம் வைத்திருந்து எடுக்க நினைக்கையில் வெளிச்சந்தையில் பத்து ரூபாய்க்கே விற்பதாக வைத்துக்கொள்வோம். மேலும் இரண்டு மூன்று மாதங்கள் பொறுமையாக கிடங்கிலேயே வைத்திருக்கலாம். வெளிச்சந்தையில் பத்து, பன்னிரெண்டு ரூபாய்க்கே விற்றால் ஐந்தாறு மாதங்கள் கிடங்கில் வைத்திருந்த வாடகைக்கு என்ன செய்வது? இதில் எல்லாமே ஊகத்தின் அடிப்படையிலான ரிஸ்க்-தான். டேட்டா என்ற ஒன்று இருந்தால்தானே! இரண்டு மாதம் கழித்து விலை ஏறும் என்றால் விவசாயிகளும் உற்பத்தி செய்து குவித்துவிடுவார்களே.
விவசாயிகளும் எதிலும் முறையாக பதிவு செய்துகொள்வதெல்லாம் கிடையாது. அப்படியே ஏதாவது சங்கம், சொசைட்டி என்று ஏதாவது வந்தாலும் சில வருடங்களிலேயே அந்த பகுதியில் உள்ள பெருவாரியான சாதியினரால் அவை hijack செய்யப்படுவதால் பலர் உதிரிகளாகவே நின்றுவிடுகிறார்கள். உழவு ஓட்டி, பார் அமைத்து லேட்டரல் குழாய்களை இழுத்துவிட்ட பின்னர்தான் பல விவசாயிகள் என்ன வெள்ளாமை வைப்பது என்றே முடிவு செய்கின்றனர். ஊரில் எல்லோரும் வாழை என்றால் நாமும் வாழை, எல்லோரும் வெங்காயம் என்றால் நாமும் வெங்காயம், எல்லாரும் தக்காளி என்றால் நாமும் தக்காளி. இல்லாவிட்டால் சந்தையில் அப்போதைக்கு எதற்கு விலை இருக்கிறதோ அதையே நாமும் பயிர் செய்வோம் என பலரும் இறங்குவார்கள். என்ன பயிர் சாகுபடி செய்யப் போகிறோம் என்று கடைசிநேரம் வரைக்கும் ஏகப்பட்ட விவசாயிகள் முடிவே செய்வதில்லை என்பதால் எந்த commodity என்ன விலைக்கு விற்கும் என்று யாராலும் ஊகிக்க முடிவதில்லை.
பண்டிகைகளை ஒட்டி சில பண்டங்கள் நல்ல விலைக்கு விற்கும் என்பது நீண்டகாலமாக புழங்கிவரும் ஒரு கருதுகோள் (hypothesis). உதாரணமாக, ஓணம் பண்டிகைக்கு வாழை, செண்டுமல்லி என சிலவற்றுக்கு விலையேற்றம் இருக்கும். அதையும் இன்று பல விவசாயிகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள்; எந்த பண்டிகையையும் விட்டு வைப்பதில்லை.
வட இந்தியாவில் ஜூன் மாதம் கரிஃப் பருவம் தொடங்குவதால் அறுவடை சமயத்தில் இருக்கும் பயிர்கள் பெரும்பாலும் இருக்காது என்பதால் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பள்ளி, கல்லூரிகள் திறப்பதாலும், வைகாசி மாதத்தில் பல முகூர்த்தங்கள் இருப்பதாலும் நல்ல விலை கிடைத்துவந்தது. அதை சரியாக புரிந்துகொண்ட கிழக்கிந்திய விவசாயிகள் முரட்டுத்தனமாக சாகுபடி செய்து இங்கே ஏற்றுமதி செய்து, ஜூன் மாதம் வருடந்தோறும் தமிழகத்தில் இயல்பாகவே விலையேற்றம் இருக்கும் என்ற கருதுகோளை இந்த ஆண்டு உடைத்து விட்டனர்.
சாலை வசதிகள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் இன்று பலமடங்கு உயர்ந்துவிட்டது என்பதை வெகுசன பத்திரிகைகளின் கட்டுரையாளர்களும், அதிகாரிகளும் புரிந்துகொள்வதில்லை. வாகனங்களின் திறன்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டது. பத்து டன் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஓர் இரவில் 700 கிலோமீட்டரை ஒரு லாரி கடக்கிறது. 100 கிமீ வேகத்திலேயே இடைவிடாது இயக்குகிறார்கள். கார்களில்கூட இந்த காய்கறி லாரிகளுடன் போட்டியிட இயலாது. Fastag வில்லை ஒட்டப்பட்ட சரக்குந்துகள் வாட்சப்பில் கிடைக்கப்பெற்ற லொக்கேஷனை கூகுள் மேப்ஸில் அந்தந்த மாநில ஓட்டுநர்களின் மொழியிலேயே துரத்திவந்து விடியும்போது டெலிவரிக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஒரிசா, சட்டீஸ்கரிலிருந்து கோயம்பேடு வருவதெல்லாம் இன்று சப்பை மேட்டர். இன்று நாசிக்கில் பறிக்கப்பட்ட தக்காளி நாளை மறுநாள் சென்னையிலுள்ள அபார்ட்மென்ட் ஏதாவது ஒன்றில் சாம்பாரில் கொதித்துக்கொண்டிருக்கும்.
முன்பெல்லாம் பட்டம் என்ற ஒன்று மிகவும் முக்கியமானது. இன்று வீரிய இரகங்களின் வருகையால் பட்டம் என்ற ஒரு வாரத்தையை உழவர்களே மறந்துவிட்டனர்! பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய இரகங்களை சந்தையின் தேவைக்கேற்ப உருவாக்குகிறார்கள். ஆனால் அவை மரபணு மாற்றப்பட்டவையோ, உடலுக்கு தீங்கு தருபவையோ என்று அச்சப்படத் தேவையில்லை. அந்தக் காலம் மாதிரி இல்லாமல் திறமையான ஆட்களைத் தக்க வைத்துக்கொள்ள தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை வாரி வழங்குகின்றன. மென்பொருள் துறையினரை ஒப்பிட்டால் அதே வயதினர் வேளாண் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் விற்பனைத் துறைகளில் முரட்டு சம்பளம் பெறுகின்றனர். எண்ணிக்கையில் இவர்கள் குறைவு என்றாலும் கூர்மதியும், அயராத தன்னூக்கமும் உடையவர்கள் என்பதால் சந்தையின் போக்கைக் கவனித்து அதை எப்படியாவது நிரப்பிவிடுகின்றனர்.
விதைகள் விற்கும் அளவினை வைத்து மகசூலைக் கணக்கிட முடியுமா என்றால் அதுவும் இல்லை. மகசூல் கூடவோ, குறையவோ செய்வதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும் என்பதோடு அவை எவ்வாறு dispose செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாது என்பதால் இங்கும் ஊகமே மிஞ்சுகிறது. உதாரணமாக, கோயமுத்தூர், சேலம், திண்டுக்கல் பகுதிகளில் ஏக்கருக்கு இரண்டரை கிலோ வெண்டை விதை பயன்படுத்துவார்கள். விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் ஏக்கருக்கு ஐந்து அல்லது ஆறு கிலோ பயன்படுத்துவார்கள். ஆனால் கோயமுத்தூரில் எடுக்கும் மகசூலைக் காட்டிலும் விழுப்புரத்தில் குறைவாகவே எடுக்கிறார்கள்.
தனியார் நிறுவனங்கள் புழங்காத பயிர்களில் அரசாங்கம் முரட்டுத்தனமான மானியம், இறக்குமதி, அந்த தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன், ஊக்கத்தொகை என வழங்கி சரிக்கட்டிவிடுகிறது. கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை என்பதால் அரசங்கமே அதை செய்துகொள்வதுடன் ஆலைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிசெய்வது ஓர் உதாரணமாகும்.
உலக வர்த்தக மையத்தில் இந்தியாவும் உறுப்புநாடு என்பதால் பல நேரங்களில் உள்நாட்டுச் சந்தையைத் திறந்துவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறக்குமதியைக் கட்டுப்படுத்தினால் ஏற்றுமதி அடிவாங்கும், அந்நியச் செலாவணி வரத்து படுக்கும், டாலர் எகிறும் என்பதால் அரசாங்கம் கொஞ்சம் மென்மையாகவே நடந்துகொள்கிறது. வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நமக்கு மானியம் கொடுக்க இன்னும் நிறைய provision உள்ளது என்றாலும் பயனாளிகளை அடையாளங் காணுவதிலும், அதைக் கொண்டுபோய் சேர்ப்பதிலும், மானியத்தை வாங்குபவர்கள் நாணயமாக நடந்துகொள்வதிலும் மிகப்பெரிய சந்து இருப்பதால் உலக வர்த்தக மையத்தை இந்தியா கண்ணில் விரல்விட்டு ஆட்டும் சம்பவங்கள் நடக்க வேண்டுமெனில் மோடி கறுப்புப் பணத்தை மீட்டு 15 இலட்சம் நமது அக்கவுண்ட்டில் போடும் காலம் வரை காத்திருக்க வேண்டும். இரண்டும் நடப்பதற்குள் நாமெல்லாம் இயற்கை எய்திவிடுவோம்!
வங்கியாளர்கள் சொத்துப் பத்திரம் மாதிரி ஏதாவது எளிமையான கொல்லேட்டரலோ அல்லது அரசாங்க கியாரண்டியோ இருந்து குறைவான வட்டியில் கடன் வழங்கினால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறார்கள். வங்கிகளுக்கு கொழுந்தியாள் முறையான காப்பீட்டுக் கம்பெனிகள் போதுமான இன்சூரன்ஸ் இல்லாததுதான் பிரச்சினை எனவே எங்களுக்கு பிரீமியத்தை வாரி வழங்கினால் பிரச்சினை ஓவர் என்கிறார்கள்.
Celebrity எழுத்தாளர்கள் என்ற அடைமொழியில் தேவையில்லாத அல்லது தொடர்பில்லாத விசயங்கள் ஊடகங்களின் பிரச்சார காரணங்களுக்காகப் பெரிதுபடுத்தப்படுகின்றன. அதனால் முக்கிய விவகாரங்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். சாய்நாத் எழுதியதில் பாதி அவ்வகையில் வரும். நம்மாழ்வார் சொன்னதும் எந்த பிரச்சினையையும் தீர்க்காது; வர்ணாசிரம அமைப்பு முறைக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதை நீட்டி முழக்கி பாரம்பரியம், இயற்கை என்று சொல்லிக் கொண்டிருந்தார். தேவேந்தர் ஷர்மா என்பவரை உணவுக் கொள்கைகள் ஆராய்ச்சியாளர் என்று சொல்லி தூக்கி நிறுத்துகிறார்கள்; எட்டாம் வகுப்பு மாணவனின் வயதுக்கான IQ இருந்தாலே அவர் சொல்லும் எல்லாம் கதைகள் என்று புரியும்.
இந்தியா மாதிரி அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாத மக்கள்தொகை கொண்ட நாட்டில் அரசாங்கம் ஒரே நேரத்தில் pro-producer, pro-consumer ஆக நடந்துகொள்ள முடியாது. எல்லாவற்றிலும் நீக்கமற பின்னிப் பிணைந்திருக்கும் ஜாதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஜாதிகளின் வாழ்விடமான கிராமங்களின் தொழிலான விவசாயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஜாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதிலும், இணக்கமான சூழ்நிலையையும் வைத்திருக்க முயற்சி செய்யும் மாநிலங்கள் மட்டுமே ஓரளவுக்கு விவசாயத்துறையை சீரமைக்க இயலும். மாடுகள் விவசாயத் தொழிலின் ஓர் அங்கம். அதை வளர்ப்பதும், விற்பதும் இயல்பானது. வளர்ப்பவன் புனிதமானவனாகவும், அவனுக்கு தேவையில்லாதவற்றை dispose செய்யும்போதும் புனிதமானவனாகவும் இருக்கிறான். ஆனால் அவற்றை வாங்கிச்செல்பவன் கொடூரனாகச் சித்தரிக்கப்படும் இடத்தில் சமநிலை எப்படி வரும்? மாடுகளை Dispose செய்யவே கூடாது என்றால் வேளாண்மையின் பொருளாதாரச் சங்கிலி என்ற ஒன்று அறுந்துவிடும் என்ற அடிப்படையே தெரியாத நம்மாழ்வார் போன்றவர்கள் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி என்று பிரச்சாரம் செய்யப்படும் ஊரில் ஜப்பான் போன்ற நாடுகளின் விவசாயத்தை உதாரணம் மட்டுமே காட்ட முடியும்.
ஆகவே, வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்து நட்டம் ஏற்படாமல் விவசாயிகளைக் காப்பாற்றும் என்பதெல்லாம் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு சாத்தியமில்லாத ஒன்று.