விவசாயப் பல்கலையில் பல பட்டப்படிப்புகள் இருந்தாலும் புழங்குவதற்கு எளிதாக அக்ரி என்று மட்டும் இப்போதைக்கு அழைத்துக் கொள்வோம். அக்ரி ஒருவர் தொழில் முனைவோர் ஆவதற்கு சில காரணங்களே இருந்தாலும், ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
1) கல்லூரியில் சேரும்போதே அக்ரி படித்தால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம், பாங்கி அதிகாரி ஆகலாம், அக்ரி டிபார்ட்மெண்ட்டில் அதிகாரி ஆகலாம், குரூப் 1 போகலாம், பெரிய புள்ளி ஆகலாம், நல்ல முரட்டு இடத்தில் கல்யாணம் பண்ணலாம், அப்புறம் ஜாலியா இருக்கலாம் என்று பெற்றோர்களும், உற்றோர்களும் ஒரு மாணவனை மூளைச்சலவை செய்தே சேர்க்கின்றனர். நன்றாக சம்பாதிக்கத்தானே இதெல்லாம் என்று கடைசி வரைக்கும் பணத்தின் முக்கியத்துவத்தை யாரும் உடைத்துப் பேசுவதில்லை.
2) சிலபஸ் முழுவதும் பல்வேறு அரசாங்கத் துறைகளில் வேலை செய்ய பணியாளர்களை உருவாக்கும் வண்ணமே அமைந்துள்ளது. தொழில்முனைவோர் குறித்த தாள்களெல்லாம் ஒப்புக்குசப்பான் மாதிரியான ஜல்லியடிக்கும் சமாச்சாரம். மற்றபடி பல்கலைக்கழக உணவகம், நகலகம் என எங்கேயும் மாணவர் கிளப்கள் பகுதி நேரமாக எடுத்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை.
3) பேராசிரியர்களும், சீனியர்களும் ஒரு மாணவன் UG சேர்ந்ததும் எப்படி PG சேருவது, PhD சேருவது, எப்படி உதவித்தொகை பெறுவது, நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது என்பது குறித்து வண்டி வண்டியாக அறிவுரைகள் வழங்குகின்றனர். மேலும் எப்படி சொந்த சாதியில் ஃபிகர் தேற்றுவது, பிஎச்டி முடித்து அங்கேயே RA-வாகி இருவரும் அங்கேயே உதவிப் பேராசிரியராகி, ஒன்றாக ஆராய்ச்சி பண்டு வாங்கி செட்டில் ஆவது என்பதற்குக் கிடைக்கும் வாய்மொழி ஆலோசனைகளை பதிவு செய்தால் ஒவ்வொன்றும் நானூறு பக்கத்துக்கு குறையாமல் மூன்று தொகுதிகள் புத்தகம் வெளியிடலாம்.
4) உயர்கல்வி பயில்வேன், சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதுவேன், ARS, குரூப் 1, இதர பிற யூபிஎஸ்சி தேர்வுகளில் எதுவும் முடியாதபோது வங்கி அதிகாரி அல்லது அரசாங்க வேளாண்துறை அதிகாரி ஆவதற்கு முயற்சி செய்வேன், வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பேன்/அங்கேயே ஆராய்ச்சியாளராகத் தொடர்வேன், ஆனால் இங்கே உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தால் வந்துவிடுவேன். இஃது எதுவும் செட் ஆகவில்லை என்றாலும் தற்காலிக உதவியாளர் வேலைகள் ஏதாவது செய்வேன். இதில் எதுவுமே முடியாதபோது சொந்தமாகத் தொழில் தொடங்கலாமா என்று யோசிப்பேன் என்ற மனநிலையிலேயே 99% மாணாக்கர்கள் அக்ரி படிக்கின்றனர். அதாவது வேலைவாய்ப்பு கிடைத்தால் வேலை செய்வேன். கிடைக்காவிட்டால் வேலை தேடுவேன். சுய தொழில் பற்றிய எண்ணமே மனதில் எழாத அளவுக்கு பார்த்துக் கொள்வது மட்டுமே லட்சியம்.
5) வெளியில் சென்றால் வேலை எதுவும் கிடைக்காது என்று பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றே பார்க்காத ஒரு கூட்டம் மாணவர்களை உயர்கல்வி நோக்கி உந்தித் தள்ளுவது. UG முடித்து வெளியேறுபவர்கள் பாக்கியவான்கள். வாழ்க்கையில் நீண்ட அனுபவத்தையும், போதுமான காலத்தையும் கையில் வைத்துக்கொண்டு கரையேறுகிறார்கள். PG படித்துவிட்டு வெளியேறலாம் என்று நினைப்பவர்களைப் பயமுறுத்தி, ‘பிஎச்டி பண்ணலன்னா ஒரு வேலையும் கிடைக்காது, உருப்படாம போயிடுவ’ என்று பயமுறுத்த ஒரு பெரும் கூட்டம் உண்டு.
6) ஒரு ஜெராக்ஸ் கடை நடத்துவது எப்படி என்று கூட தெரியாத பேராசிரியர்கள் என்ட்ரபிரீனர்ஷிப், மார்க்கெட் இண்டெலிஜென்ஸ், டெக்னாலஜி இன்குபேட்டர், பிசினஸ் வென்ட்ச்சர்ஸ் என்று எல்லா இடத்திலும் உட்கார்ந்துகொண்டு தாலி அறுப்பது. இவர்களிடம் பயின்றுவிட்டு வரும் மாணாக்கர்கள் பாங்கி கரண்ட் அக்கவுன்ட், ஜிஎஸ்டி நம்பர், ஐ.டி. ரிட்டர்ன்ஸ் என்பதெல்லாம் எதற்கு என்றுகூட தெரியாமல் வந்து பிசினஸ் ஆரம்பிக்கனும் என்று கேட்கிறார்கள்.
7) தனியார் இடுபொருள் நிறுவனங்களில் தயக்கமின்றி நுழையும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் முரட்டு சம்பளங்களை அடைந்துவிடுகிறார்கள். தங்களுடைய மனநிலையில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.
8) காதல் – இஃது உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம். விவசாயக் கல்லூரிகளில் UG படிக்கும்போது பருவ தாகத்துக்குத் தீனி போட்டு தேக சாந்தி தேடிக்கொண்டவர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில்முனைவோர் ஆனதில்லை என்பது மரபு. காதல் மன்னன், காசனோவா ஆக இருந்து தொழிலதிபரான (ஆண்/பெண்) விதிவிலக்குகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டவும்.நமக்கு முன்னும் பின்னும் விவரம் தெரிந்த பல ஆண்டு அக்ரி மக்களையும், தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களிடமும் கிடைத்த நீண்ட உரையாடல்களில் இருந்து கணிக்கப்பட்டது. (உழவியல் துறையின் மரியாதைக்குரிய மூத்த பேராசிரியர் ஒருவர் எங்களுக்கு UG முதல்நாள், முதல் வகுப்பு எடுத்தபோது This is not a place to select your life partner என்று சொல்லி, வாழ்த்தி ஆரம்பித்தது இன்றும் நினைவில் இருக்கிறது).
படித்தவுடன் சிலர் பெற்றோர்களின் குடும்பத் தொழில்களைப் பார்க்க சென்றுவிடுகின்றனர். அவர்கள் அக்ரி படித்ததால் மட்டுமே தொழில் முனைவோர் ஆவதில்லை என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பலவிதமான தனியார் நிறுவனங்களில் – இடுபொருள் விற்பனை மட்டுமல்லாது – நுழைபவர்களே பெரும்பாலும் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற திசையில் நகர்கின்றனர். அவர்களது தைரியம், தன்னம்பிக்கை, சந்தையில் மக்களை எதிர்கொள்ளும்போது கிடைக்கும் அனுபவம், பலரும் துணிச்சலாக இறங்கி இலாபமீட்டுவதைப் பார்ப்பதால் கிடைக்கும் உத்வேகம் தாண்டி, அவர்களிடம் இருக்கும் ஒருவிதமான வேலை பாதுகாப்பின்மையும் சுயதொழில் ஆரம்பிக்கக் காரணமாகிறது.
வேளாண் இடுபொருட்கள் விற்பனையில் இருக்கும் கணிசமான அக்ரி மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியில் வந்து தொழில் ஆரம்பித்தவர்களே. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டத்தில் கம்பெனியில் மேல் மட்டத்தில் உள்ளவர்களோடு ஏற்படும் உரசல்களாலோ அல்லது கம்பெனியில் ஏற்படும் நிர்வாக மாறுதல்களின்போது தெருவில் விட்டுச் செல்லப்படும்போதோ கம்பெனிக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் உழைத்தது போதும் என்று ஒரு வைராக்கியத்தில் தொழில் ஆரம்பிக்கின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் பணத்தை இழப்பதில்லை; இவர்களிடம் வியாபாரம் செய்பவர்களும் பணத்தை இழப்பதில்லை. பணியிடங்களில் கையாடல் செய்து வெளியேற்றப்பட்டவர்கள் வேறு வழி இல்லாமல் தொழில் முனைவோர் ஆனதாகப் பெரிதாக ஏதும் காணோம்.
எந்தத் தொழிலையும் ஆரம்பிப்பதற்கு வயது ஒரு விசயமில்லை. ஆனால் வியாபாரம், பணம் குறித்த attitude மிகவும் முக்கியமானது. ரிஸ்க் எடுப்பதற்கான ஒரு நபரின் மொத்த தைரியமும், திட்டமிட்ட தெளிவும் home loan எடுக்கும்போது மொத்தமாக முடிவுக்கு வருகிறது. அடிநிலமும் இல்லாமல், கட்டடமும் இல்லாமல் நடு வானத்தில் நான்கு சுவர்களை சதுர அடி நாலாயிரம் ரூபாய் என தனது Form – 16-ஐ நம்பி வங்கியில் வட்டிக்கு வாங்கி அபார்ட்மென்ட் வாங்கும்போது ஒரு நபருடைய தொழில் முனைவோர் quotient முழுவதும் செத்து விடுகிறது. பின்னர் அவர்களாக உத்வேகம் பெற்று எந்தத் தொழில்களையும் ஆரம்பிப்பதில்லை. ஏதாவது அதீத காரணங்களால் வேலை பறிபோனால் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புண்டு.
அரசாங்க முன்னெடுப்புகளில் நபார்டு வங்கியின் Agri clinics & Agri Business Cenrltres என்ற திட்டம் கணிசமான அக்ரி மக்களைத் தொழில் ஆரம்பிக்க உதவி வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஐந்து இலட்சம் முதல் ஒரு கோடி வரைக்குமான கடனில் 35% பொதுப் பிரிவினருக்கும், 44% பெண்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் மானியம் உண்டு. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நல்லபடியாக நடத்தப்படும் தொழில்களுக்குத் தரப்படும் மானியம் ஓர் அருமையான ஊக்கத் திட்டம்.
மற்றபடி துணைவேந்தர், பதிவாளர், கமிசனர், செக்ரட்டரி, நபார்டு உயரதிகாரி போன்ற அரசாங்க உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தொழில் ஆரம்பித்து வியாபாரம் செய்தாலும் அவர்களைத் தொழில் முனைவோர்களாக யாரும் கருதுவதில்லை. அது வியாபாரமே கிடையாது. அவர்களது வாரிசுகள் அக்ரோ இண்டஸ்ட்ரி ஆரம்பித்து நடத்துவதும் ஒரு வகையான கொடுக்கல்வாங்கல் கணக்கின் அடிப்படையில்தான்.
அறுபது, எழுபதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம் பெறும் அரசாங்க வேலைகளில் இருக்கும் அக்ரி மக்கள் ஏழெட்டு வருடங்களில் ஒருவகையான மனச்சோம்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கு சிறு சிறு வேலைகள் கூட கீழ்நிலைப் பணியாளர்களால் செய்து தரப்பட்டு விடுவதால் எதையாவது தாமாக முன்வந்து செய்யும் ஆர்வத்தை இழந்து இளம் தொப்பையுடன் சோர்வாகி விடுகின்றனர். யாராவது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, கேள்விப்படும்போது ஒருவித சலிப்புடனேயே பேசுவதைக் காண முடிகிறது. வங்கியில் இருக்கும் அக்ரி மக்களுக்கும் இது பொருந்தும். அபூர்வமாக அரசாங்க வேளாண்மைத்துறையில் இருக்கும் சிலர் ஓய்வு நேரங்களில் வியாபாரம் செய்து பார்க்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.
வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று தொழிலதிபர் ஆனவர்கள் குறித்து எந்தவொரு தரவுகளும் எங்கேயும் இருப்பதாகக் காணோம். IIM-யில் பயின்று தொழிலதிபர் ஆனவர்களின் வெற்றிக்கதைகளை ராஷ்மி பன்சால் போன்றவர்கள் புத்தகமாகவே வெளியிட்டிருக்கின்றனர். அந்த புத்தகமும் நல்ல வியாபாரம் ஆகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெளிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அக்ரி மக்களின் எண்ணிக்கை குறைவு, வேலைவாய்ப்பும் அதிகமாக இருந்தது. இன்று பல தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் வெளிவருவதால் கணிசமான மக்கள் தொழிலதிபர் ஆவார்கள் என்று நம்புவோம்.
அக்ரி படித்து ஏன் ஒரு பயலும் வியாபாரம் பண்ண வர மாட்டேங்கிறான் என்று என்னதான் நமக்கு நாமே கழுவி ஊற்றிக்கொண்டாலும் நமக்கு எல்லாம் இருக்கும் ஒரே ஆறுதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம். எத்தனை வெட்னரி டாக்டருங்க சொந்தமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருய்யா என்று சொல்லி சமாதானம் செய்து கொள்வோமாக!