டாலர் நகரம்.
ஆசிரியர்: ஜோதிஜி.
4தமிழ் மீடியா வெளியீடு.
காரைக்குடி அருகே புதுவயலைச் சேர்ந்த ஜோதிஜி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு உத்வேகத்தில், மன்மோகன்சிங் இந்திய சந்தையைத் திறந்துவிட்டு லைசன்ஸ் ராஜ்யத்துக்கு முடிவுரை எழுதிய 1991-வாக்கில் திருப்பூருக்கு வந்து வேலைதேடியதில் ஆரம்பித்து இன்றுவரைக்கும் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைப் பற்றி சுருக்கமாகவும், திருப்பூர் எப்படியெல்லாம் உருமாறியது என்பதை விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.
திருப்பூர் என்றாலே பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் கார்கள் வைத்திருக்கும் கொழுத்த பணக்காரர்கள் நிறைந்த ஊர், தொழிலாளர்களைச் சுரண்டும் ஊர், வரி ஏமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற ஊர், திருப்பூர் முழுக்க வெள்ளாளக்கவுண்டர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ஊர் என்ற பிம்பம் புத்தகம் முழுவதும் உடைபட்டுக்கொண்டே இருக்கிறது.
திருப்பூரில் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர் பேட்டியைப் படிக்கும்போது அதன்பின்னால் பெயர்தெரியாத 20 தோல்வியடைந்த நபர்களை நினைத்துக்கொள்ளலாம். திருப்பூர் உங்களிடம் எதிர்பார்ப்பது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. ஒருநாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்தே ஆக வேண்டும். மீதமிருக்கும் நேரமும் தொழில் குறித்த எண்ணங்களே மண்டையில் ஏறி ஆட்டிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் மட்டுமே அந்த ஊரில் தாக்குப்பிடிக்க முடியும்.
ஏற்றுமதி வியாபாரம் ஒரு உலகம் என்றால் உள்நாட்டு வியாபாரம் முற்றிலும் வேறு உலகம். திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, வாய்மை அது இது என தன்முன்னேற்றப் புத்தகங்களில் படித்த அத்தனை பண்புகளையும் சேர்த்து 51% என்றால் அதிர்ஷ்டம் என்பதும் ஏற்றுமதியில் 49% முக்கியம். ஏற்றுமதிக்குப் போன அனைவரும் பணத்தை அள்ளிக் குவித்துவிட்டார்கள் என்று சொல்லவே முடியாது. இதை ஆசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அந்த அதிர்ஷ்டம் ஏன் வருகிறது எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது, பூசை புனஸ்காரங்களாலும் வரவழைக்க இயலாது.
அயராத உழைப்பும், நீதி, நேர்மை, யோக்கியவான் பண்புகள் மட்டுமே ஒருவரை வெற்றியாளராக்கிவிடாது. சிலநேரங்களில் இத்தோடு போதும் என்று அகலக் கால் வைக்காமல் நிறுத்திக்கொள்வது கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். பத்து கோடிக்கு ஏற்றுமதி செய்த நபர் அடுத்த ஆண்டு வாரச்சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற கதைகள் திருப்பூரில் ஏகப்பட்டது உண்டு. ஜோதிஜியும் அத்தகைய தோல்வியுற்ற தொழில் முனைவோர்களை, தொழிலதிபர்களைக் கடந்து வந்ததை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தியர்களின் வாழ்க்கையில் புரஃபஷனல், பர்சனல் ஸ்பேஸ் என்றெல்லாம் கிடையாது. நமது சமூகக் கட்டமைப்பு அப்படி. ஒரு கம்பெனி/தொழிலின் ஆரம்பத்தில் குடும்பத்தினர் அனைவரும் உழைத்து அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டுவருவது இந்தியாவுக்கே உண்டான சிறப்பு என்றால், ஓரளவுக்கு வளர்ந்ததும் அதை விட்டு விலக மாட்டேன் என்று கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பது அம்பானி குடும்பம் வரைக்கும் இயல்பான ஒன்று.
மூடுவிழாக் காண இருந்த கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஜோதிஜி அதை படிப்படியாக மேலே கொண்டுவர நிர்வாகத்தில் ஓனரின் மனைவி, மைத்துனருக்குச் சொந்தம் என்ற பெயரில் அட்டைப்பூச்சிகளாக இருந்தவர்களை நீக்கி, இலாபத்தில் கொண்டுவந்து நிறுத்தியபோது ஓனரின் மனைவி திரும்பவும் உள்ளே நுழைந்து கணக்குவழக்குப் பார்க்கிறேன் என்ற பெயரில் நெருக்கடி கொடுத்த கதையை விளக்கமாக சொல்லியிருக்கிறார். கடைசியில் அந்த ஓனரும் மனைவி சொல்லை மீற முடியாத காரணத்தால் நெருக்கடி முற்றி பேப்பர் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். திருப்பூர் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் குடும்பத்தினர் தலையீடு என்பது தொழிலை விரிவாக்கவோ, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதைத் தடுப்பதாகவே இருக்கிறது என்பது நிதர்சனம்.
நாம் ஏன் அமேசான், அலிபாபா, ஆரக்கிள் மாதிரி கம்பெனிகளை உருவாக்க முடிவதில்லை என்பது தனியாக அலசப்பட வேண்டியது.
இரண்டாவது தலைமுறைக்காவது தேவலாம், மூன்றாவது தலைமுறைக்கு ஒரு தொழிலைக் கடத்துவது என்பது சாதாரண விசயமல்ல. சர்வதேச வணிகம் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரக்கூடிய அத்தனை சட்டதிட்டங்களையும், தரம் குறித்த விவகாரங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தரம் என்பது உலகம் முழுவதும் ஒரே அளவில் இருக்கவேண்டும் என்பதற்காகவே ISO, HACCP என ஒவ்வொரு தொழலுக்கும் ஏகப்பட்ட third party சான்றளிப்புகளை வாங்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
ஜோதிஜி பல சர்வதேச பிராண்டு நிறுவனங்களுடன் ஒரு கம்பெனியின் பொது மேலாளர் என்ற அளவில் தொடர்பில் இருந்தாலும் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்திலும் நேரடியாகப் பணிபுரியவில்லை. அதனாலேயே அவர்கள் எதிர்பார்க்கும் தரக்கட்டுப்பாடு விவகாரங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மதித்து நடக்கும் நிர்வாக முறை, ஊழியர்களுக்கான ஊதியம், தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், அவர்களது குழந்தைகளின் கல்வி போன்றவற்றை Buyer எனப்படும் இறக்குமதியாளர் நோண்டும்போது நமது பிரைவசி விவகாரத்தில் தலையிடுவது மாதிரியும், இத்தகைய விவகாரங்கள் ஒரு வகையான சதித்திட்ட மாயவலை என்பது போன்ற அச்சத்தோடே பார்க்கிறார்.
அதேநேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்கள் தொழிலாளர்களின் உடல்நலனை கணிசமான அளவுக்கு பாதுகாக்கும் வகையில் இயங்குகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறார். இதைத்தான் மன்மோகன்சிங் முதல் அபிஜித் பானர்ஜி வரைக்கும் Access to technology will improve the health and livelihood of downtrodden people என்று குறிப்பிடுகின்றனர். குவார்ட்டர் பாட்டிலில் திரி போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி படித்த காலம் நமக்கு உண்டு. இன்று சீனத்து எல்ஈடி விளக்குகள் மண்ணெண்ணெய் விளக்கை அழித்தேவிட்டன. இன்று எந்தக் குழந்தையும் மண்ணெண்ணெய் புகையில் கூரை வீட்டில் சுவாசிக்க சிரமப்படுவதில்லை, ஆடைகளில் தீப்பிடித்த கதைகளும் இல்லை. இந்த எல்ஈடி டார்ச் லைட்டுகளாலேயே இரவு தண்ணீர் பாய்ச்சச் சென்று பாம்பு கடி வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது.
இங்குதான் நமது பழையதனத்து ஆட்கள் புதியவை எதையும் அனுமதிக்ககூடாது, அவையெல்லாம் சதி வேலை, நமது பாரம்பரிய வாழ்வே சிறந்தது என்று பரப்புரை செய்கின்றனர். அடிமை வேலை முறையில் தொழிலாளர்களை வைத்திருந்தால் ஆர்டர் தர மாட்டோம், முறைப்படி எல்லோரும் ஊழியர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று துணி வாங்க வரும் வெளிநாட்டு கம்பெனி சொன்னால் ‘ஐயோ பார்த்தாயா, நமது தற்சார்பை WTO மூலமாக எப்படியெல்லாம் சிதைக்கிறார்க்ள’ என்று அனத்த வேண்டியது.
குஜராத்தில் பருத்திச் செடி ஆறு முதல் எட்டு அடி உயரம் சாதாரணமாக வளரும். ஒரு பூச்சிக்கொல்லி ஸ்பிரேயர் 14 கிலோ, அதில் ஊற்றப்படும் தண்ணீர் 16 கிலோ. ஓர் ஏக்கருக்கு 20 டேங்க் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டுமெனில் 30 கிலோ எடையைச் சுமந்துகொண்டு ஒரு விவசாயி குறைந்தது மூன்று கிலோமீட்டர் நடந்திருக்க வேண்டும். கூடவே தண்ணீர் ஊற்ற ஒரு ஆளும் குடத்தைச் சுமந்துகொண்டு நடக்க வேண்டும். வாரம் ஒருமுறை பருத்திக்கு பூச்சிக்கொல்லி கட்டாயம். குறைந்தது 25 முறை தெளித்தால் மட்டுமே பஞ்சு கண்ணால் பார்க்கும்படியாக இருக்கும்.
இந்த இடத்தில் ஒரு தொழில்நுட்பத்தை மான்சான்டோ இறக்கி காய்ப்புழுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லித் தெளிப்பை முற்றிலும் நிறுத்திக் காட்டியது (சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மூன்று நான்கு முறை தெளிப்பது வேறு). நமது பஞ்சின் தரம் உயர்ந்ததோடு இறக்குமதி செய்த நாம், பஞ்சு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர முடிந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஜோதிஜி ஓரிடத்தில் மான்சான்டோவைத் திட்டிவிட்டு செல்கிறார். நமது தமிழக பாரம்பரியப்படி ஒருவர் சமூக அக்கறையுள்ளவராகக் காட்டிக்கொள்ள வேண்டுமெனில் மான்சான்டோவைத் திட்டு, கார்ப்பரேட் சதி அது இதுன்னு ரெண்டு வார்த்தை சேர்த்துக்கோ என்ற புரோட்டோக்காலைப் பின்பற்றுகிறார். பஞ்சு ஜின்னிங் ஆலைக்குள் வந்தபிறகு என்னவெல்லாம் ஆகிறது என்பதில் அவருக்கு மிகப்பெரிய பாண்டித்யம் இருக்கலாம், ஆனால் பருத்தி சாகுபடியில் நமக்கு எதுவும் தெரியாது என்றால் குறைந்தபட்சம் அந்த ஏரியாவைத் தவிர்த்திருக்கலாம்.
இது நல்லது, இது கெட்டது என்று இன்றைய வியாபாரச் சூழலில் எதையுமே சொல்லிவிட முடியாது. திருப்பூரில் Buying House என்ற பெயரில் இருக்கும் புரோக்கர் ஆபிஸ்களும் இப்படித்தான். ஒரு தொழில் வளரும்போது அதனுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் வளரும் தொழில்கள்தான் இந்தியாவின் வரமும், சாபமும். ஏனெனில் இலாபம் வரும்போது அதைப் பகிர்ந்துகொள்வது போலவே நடடத்தையும் ஓரளவுக்கு பகிர்ந்துகொள்வதுதான். (பகிர்ந்துகொள்ளுதல் என்றால் இலாபத்தில் கமிஷன் கேட்பது, நட்டம் வந்தால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு ஃபோன் எடுக்காமல் இருப்பது என்று படிக்கவும்).
திடீரென சட்டதிட்டங்கள் மாறினாலோ, இறக்குமதியாளர்கள் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டாலோ ஏற்படும் நட்டத்தை கண்ணுக்குத் தெரியாத, கணக்கில் வராத பல layerகளில் உள்ளவர்கள் பகிர்ந்துகொள்வதாலேயே திடீரென ஒரு பிராந்தியமே சரிந்துவிடாமல் செயல்படுகிறது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாத்திலும் ஜோதிஜி அரசியல்வாதிகளைத் திட்டுகிறார். அவர்களே நமது எல்லாப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்று நம்புகிறார். ஆரம்பம் முதலே சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தாலும் தொடர்ந்து ஒரு ஊழியராகவே இருப்பதால் தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை நேரடியாக அனுபவித்துப் பார்க்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.
நீங்கள் சுமார் 20 பேர் வேலை செய்யும் ஒரு சிறுதொழிலை நடத்திக்கொண்டு Frontline customer facing person ஆக நிற்பவராக இருந்தால் அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் என்ற ஒரு பிரிவினர் மீதான உச்சக்கட்ட அதிருப்தியும், வெறுப்பும், அறிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் சரளமாகப் பயன்படுத்தித் திட்டிக்கொண்டே இருக்கும் நபராகவே இருக்க முடியும். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கான நயத்தக உரைத்தல், நல்லவை கூறல், நட்பொழுகல், நண்பர்கள் நலம் பேணல், முக்காலமும் அறிந்து முகமன் கூறல் போன்றவற்றால் அடக்கி வாசித்துக்கொண்டு இருப்பவராக மட்டுமே இருக்க இயலும்.
எழுபதுகளில் கல்வி, மின்சாரம், மருத்துவம், பாசனம், நவீன வேளாண்மை போன்றவற்றை கிராமங்களுக்கு முதன்முறையாக கொண்டுசென்ற அரசு ஊழியர் வர்க்கம் வேறு. அப்போது இருந்த பயனாளிகள் எனப்படும் பொதுமக்களும் வேறு. உள்நாட்டு வியாபாரம் மட்டுமே இருந்த சமூகப் பொருளாதார சுழலும் வேறு. அப்போது இருந்த ஊழியர்களும் ஓய்வுபெற்றுவிட்டனர், பயனாளிகளும் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட்டனர், கணிசமானோர் இறந்தும் விட்டனர்.
2000-க்குப் பிறகு வந்த தொழில் வேகம், சர்வதேச சந்தை வரவுக்குத் தகுந்தவாறு அரசு ஊழியர் வர்க்கம் மாறவே இல்லை. தொழிற்சங்க பார்வைகளும் மாறவே இல்லை. அரசாங்கத்தின் அத்தனை சட்டதிட்டங்களையும் ஏற்றுக்கொண்டு, வரி கட்டி, வட்டி கட்டி வாழும் முதலாளிகளை ஏமாற்றுக்காரன் என்றும், அறக்கட்டளை வைத்து பள்ளி கல்லூரி நடத்தி வரியே இல்லாமல் வெளிப்படையாகவே சம்பாரிப்பவர்களைக் கல்வித்தந்தை என்றும், கடமையைச் செய்யமால் உரிமையை எப்படி கேட்க முடியும் என்ற சுரணையே இல்லாத அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்த இயந்திரங்களின் வேகமும், துல்லியமும் மிக அதிகம். அதேநேரத்தில் அவை இயங்குவதற்கு மின்சாரத் தேவையும் மிக அதிகம். திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லாத் தொழில்களிலும் புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டதோடு ஆட்டோமொபைல், கணிணிசார் தொழில்கள் வேகமாக வளர்ந்த வேகத்துக்கு அரசாங்கத்தின் மின் உற்பத்திக்கானத் திட்டங்கள் செயல்வடிவம் பெறவில்லை. அதன் விளைவுதான் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை. தமிழகத்தில் இருப்பது ஒரே மின்சார வாரியம். அவர்களுக்குத் தெரியாது என்பதல்லாம் வடிகட்டிய பொய். அந்த அதிகார வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தால் அத்தோடு தமிழக அரசியலில் இருந்து திமுக அரசியல்வாதிகள் அப்புறப்படுத்தப்பட்டது வரலாறு.
பிரமிடின் உச்சியில் இருக்கும் சிறு எண்ணிக்கைதான் அரசியல்வாதிகள். ஆசிரியர் ஜோதிஜி குறிப்பிடுவது போல எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் மேலேயே எழுதிவிட்டுத் தப்பிக்க இயலாது. கிராம நிர்வாக அதிகாரிகளே, கிராமத்திலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் தரும் அந்தந்த கிராமத்தின் சாகுபடிப் பரப்பு, கால்நடைகள் எண்ணிக்கை, அங்கு இருக்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள் என எல்லாத் தரவுகளுமே தவறானவையாகத்தான் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் கொள்கை முடிவு எடுத்தால் எப்படி இருக்கும்?
இன்றைய தேதிக்கு மிகவும் over rated valuation என்பது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வரும் அதிகாரிகள்தான். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் மட்டும் திறமையின் உச்சகட்ட வடிவமாக காட்டப்படுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்களது எல்லாத் திறமைகளும் 51% என்றால் அவர்களது அதிர்ஷ்டம் 49% என்பது போலவே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளின் அதிர்ஷ்டமும் 49% உண்டு. மீதமிருக்கும் சர்வீஸ்களின் அதிகாரிகள் ஐந்து பத்து மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்ட காரணத்தினால் திறமை குறைந்தவர்களாகிவிட மாட்டார்கள். ஆறுமுறை நேர்முகத்தேர்வு சென்று தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்வில் ஐஏஎஸ் வாங்கியவர்களும் உண்டு. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்தும், அதன் அருமை பெருமைகள் குறித்தும் அவர்களே புத்தகம் எழுதிக்கொள்வதால் சமகாலத்தில் திறமை குறித்து உருவாக்கப்பட்ட பெரிய பிம்பங்களுள் சிவில் சர்வீஸ்ஸ் தேர்வும் ஒன்று. குரூப் 1 அதிகாரிகளைப் பார்த்தால் அவர்களுக்குக் கொஞ்சம் இளக்காரம்!
இந்த அதிகாரிகளே கீழ்மட்டத்திலிருந்து வரும் தகவல்களை சரிபார்த்து மேலே அனுப்பி திட்ட வடிவமாக்கி வைக்கின்றனர். இவர்கள் சொல்லுவதை அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வதைத் தாண்டி எதுவும் இருப்பதில்லை. வைகை அணையில் தெர்மாகோல் விட்ட மாதிரி, கோயமுத்தூரில் விண்வெளிப் பயண பாலம் அமைத்தது மாதிரி பல உதாரணங்கள் உண்டு.
ஜோதிஜி குறிப்பிடும் நிர்வாகத் திறமைக்கும், ஒரு தேர்வில் வெற்றிபெற்று வருவதும் தொடர்பே இல்லாதவை (நீட் தேர்வு உட்பட). சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பின்னர் அவர்கள் பயில்வது புரோட்டோக்கால் பின்பற்றும் வழிமுறைகளே. ஓட்டுநர் உட்பட ஐந்து முதல் பத்து உதவியாளர்களை 24×7 வைத்துக்கொண்டு, எந்த கட்டத்திலும் வேலையை விட்டு நின்றுவிடாத, கிட்டத்தட்ட zero attrition rate கொண்ட workforce-ஐ வைத்துக்கொண்டு இருக்கும் அதிகாரிகளைத் திறமையின் மறுவடிவம், எளிமையின் சிகரம், தன்னுடைய கார் கதவைத் தானே திறந்து இறங்கும் குணக் குன்று என்று அனைவரும் புகழ்ந்து வைப்பது நமக்கு எதுக்கு வம்பு என்றுதானே? மற்றபடி சாதாரண feedback-ஐக் கூட தாங்கிக்கொள்ள முடியாத அகங்காரத்தில் உளல்பவர்களாகவே 90% இருக்கின்றனர்.
அண்மையில் மத்திய அரசில் இணைச் செயலாளர் மட்டத்தில் ஐஏஎஸ் அல்லாத, அனுபவம் மிகுந்த தனியார் நிறுவன உயரதிகாரிகளும் வரலாம் என்று கொண்டுவந்த சட்டத்திருத்தம் நியாயமானதுதான் என்று ஜோதிஜிக்குத் தோன்றியிருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. நீதி, நேர்மை, அறமே தரம் என்று வாழ்ந்த அதிகாரிகள் இருந்திருந்தால் திருப்பூர் இப்படி இருக்குமா? கெளசிகா நதி வந்து சேரும் ஏரிக்குள்தானே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது? தமிழக அரசில் ஒரு ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி அவரது சொந்த மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி எப்படி கட்ட முடிகிறது என்பதெல்லாம் தெரியாததா?
புத்தகம் முழுவதும் அரசியல்வாதிகளைத் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வருவார்கள் போவார்கள். நத்தம் விஸ்வநாதன் என்று ஒருவர் இருந்தார். மு. க. அழகிரி என்றும் ஒருவர் இருந்தார். இன்று அவர்கள் எங்கே? ஆனால் அவர்களிடம் கோப்புகளை வைத்து வாங்கிய அதிகாரிகள் அப்படியேதானே இருக்கிறார்கள்?
சாயப் பட்டறை பிரச்சினைகள் அனைத்தையும் விலாவரியாக அலசியிருக்கிறார். அது கடந்து வந்த பாதை, இன்னும் இருக்கும் பிரச்சினைகள் என சகலமும். அதுதான் உள்ளே இருந்து எழுதுபவர்களின் சிறப்பம்சமே. எடுத்த உடனே மூடி, சீல் வை என்பது 24 மணிநேர செய்திச் சேனல்களின் தீர்ப்பாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதேபோல பி.டி. பருத்தி விவகாரத்தை பேசினால் கார்ப்பரேட் கைக்கூலி என்கிறார்கள்.
ஏற்றுமதிக்கு உதவும் DGFT, EIC, இன்னபிற ஏகப்பட்ட அமைப்புகள் எதற்காக இருக்கின்றன என்றே தெரியவில்லை என்று ஜோதிஜி குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. அவர்களது உலகம் வேறு, ஏற்றுமதியாளர்களது உலகம் வேறு. அவர்களது திட்டங்கள் தொழிலில் இருப்பர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் திவாலாகித் தூக்கில் தொங்க விட்டுவிட்டு, புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு உதவி செய்வதாகக் காட்டிக்கொள்வதையும் விரிவாக அலசியிருக்கிறார்.
மாவட்டத் தொழில் மையம் (DIC – District Industrial Centre) என்ற ஒன்று உண்டு. அங்கே சென்று ஒரு புராஜக்ட் கொடுத்து வாங்கி இலஞ்சம் ஏதும் கொடுக்காமல் நீங்கள் தொழில் ஆரம்பித்துவிட்டால் நிச்சயமாக உங்களுக்கு சிலை வைத்துக் கொண்டாடலாம். DIC என்பதை உண்மையில் dick என்றுதான் சொல்லவேண்டும். அப்பேர்ப்பட்ட நவீன பிச்சைக்காரர்கள் அங்கே அதிகாரிகள் என்ற பெயரில் பணியில் இருப்பார்கள் என்பதை புத்தக ஆசிரியரும் அறிந்தே இருக்கிறார்.
புதிய தலைமுறை ஆலைகள் வந்தபிறகு தொழிற்சங்கங்களின் அடித்தளம் கிட்டத்தட்ட ஆட்டம் கண்டுவிட்டது. சுமங்கலி திட்டம் என்றபெயரில் இளம்பெண்களை நவீன கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் தனியாக ஒரு கட்டுரையில் அலசப்பட வேண்டிய ஒன்று. தென்னக இரயில்வேயில் சாதாரணப் போர்ட்டராக கேரியரை ஆரம்பித்த அந்த தொழிற்சங்கப் பாட்டாளி ஐயா இன்று இரண்டு கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மகிழுந்தில் வருகிறார், சுமார் 1200 கோடிக்குமேல் சொத்து வைத்திருக்கிறார் என்றால் அதன் அருமை பெருமைகளைப் புரிந்துகொள்ளுங்கள். இரயில்வே மட்டுமல்ல, பெரும்பாலான அரசுத் துறைகளும் விற்றுத் தலைமுழுக வேண்டியவை என்று அரசியல்வாதிகள் நினைக்குமளவுக்குக் கொண்டுவந்தது உள்ளே இருப்பவர்கள்தானே?
இன்னும் ஏகப்பட்ட விசயங்களை எழுதலாம். ஆனால் எப்போதுமே வண்டி வண்டியாக எழுதித் தள்ளுவதால் படிக்க முடியவில்லை என்று நண்பர்கள் புகார் சொல்லுவதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
நம் ஊரில் தொழிற்சங்க நண்பர்கள் ஒரு நிறுவனம் நன்றாக வளர்ந்தால் அஃது அதிலுள்ள அனைவரின் பங்களிப்பு என்றும், தோற்றால் அது முதலாளியின் திறமையின்மை, தொலைநோக்குப் பார்வையின்மை, திட்டமிடுதலில் கோளாறு என்றெல்லாம் எழுதிவிடுவது வழக்கம்.
ஆனால் முன்னால் நின்று நடத்துபவர்களுக்கே அதன் அத்தனை பரிமாணங்களும் தெரியும். அத்தகைய frontline workforce நபர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்களுள் டாலர் நகரமும் ஒன்று.