1970-களில் தொழிலாளியாக இருந்ததற்காக இன்னும் உழைப்பாளி பாட்டாளி என்று அவர்கள் அனத்திக் கொண்டிருக்கும் கோட்பாடுகளை நம்பாதே.
தொழிலாளி வர்க்கம், ஏழைப் பாட்டாளி, உழைக்கும் எளிய மாந்தர் என்று சமூக ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வரும் பிம்பங்களை முற்றிலுமாகப் புறக்கணி. அதில் வரும் கதை மாந்தர் போல் யதார்த்த உலகில் ஒரு தொழிலாளியும் கிடையாது.
அட்வான்ஸ் பணம் ஒருபோதும் கொடுக்காதே. வேலை ஆரம்பிக்கும் முன்னரே கூலியைப் பேசிவிடு; ஆனால் வேலை முடிந்த பிறகே கூலியைக் கொடு. வேலை தொடர்ந்து இருக்குமானால் கொஞ்சமாவது கூலிப்பணத்தை நிறுத்தி வை. மொத்தமாக முடித்த பின்னரே கணக்கை முடி.
வேலையை விட்டு நிற்கலாம் என்று இருக்கிறேன் என்று யாராவது சொன்னால் உடனே ஏற்றுக்கொண்டு அவர்களை வேலையை விட்டு அனுப்பிவிடு. ‘உனக்கு இங்க என்னப்பா குறைச்சல்’ என்று கேட்டு யாரையும் தொங்காதே. அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.
சாராயத்துக்கு தினசரி எவ்வளவு என்று வேலை ஆரம்பிக்கும் முன்னரே கேட்டுக்கொள். வேலை ஒழுங்காக நடக்க வேண்டுமானால் ஒருபோதும் தொழிலாளியுடன் அமர்ந்து உணவு உண்ணாதே, மது அருந்தாதே. இதை நவீன தீண்டாமை என்று 1970-களில் தொழிலாளியாக இருந்தவர்கள் சொல்வார்கள். அதைக் கண்டுகொள்ளாதே. சொல்பவனுக்கு என்ன, பணம் போட்டவன் நீயல்லவா?
நானும் ஒருகாலத்தில் தொழிலாளியாக இருந்து ஆரம்பித்தவன்தான் என்று புரட்சி பேசிக்கொண்டு தொழிலாளர்களுடன் தோளில் கைபோட்டு பழகாதே. ஈவு, இரக்கம், தயவு, தாட்சண்யம், கரிசனம் எல்லாம் வாயளவு வார்த்தைகளாக மட்டுமே இருக்கட்டும். அவர்களிடம் அளந்து பேசாத வார்த்தையும், எண்ணிக் கொடுக்காத பணமும் உன்னை தெருவுக்குக் கொண்டுவந்துவிடும்.
சூப்பர்வைசர், மேலாளர் என ஊழியர் அடுக்குமுறை இருந்தால் வேலை வழங்குவதில் அதை அப்படியே பின்பற்று. நேரடியாகத் தொழிலாளர்களுடன் உரையாடாதே.
தொழிலாளர்கள் கேட்டதும் பணம் கொடுக்காதே. இரண்டு மூன்று முறையாவது நடக்க விடு. அவர்களது கூலியைவிட ஐந்து மடங்குக்கு அதிகமான தொகையாக இருந்தால் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக தொழிலாளர்களை நேரில் வைத்துக் கொடு. பணத்தை எண்ணிப்பார்த்து வாங்கிடச் சொல்; அப்படியே வாங்கி பையில் வைத்துச் செல்ல ஒருபோதும் அனுமதியாதே.
Say again: அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.
வேலையை விட்டுச்சென்ற பழைய தொழிலாளி திரும்ப வந்தால் பழைய கூலியே கொடு. சீனியாரிட்டி, புண்ணாக்கு, புடலங்காய் என்று அன்றைய தினம் பணியில் இருப்பவர்களை உதாசீனப்படுத்தாதே.
மேற்கண்டவற்றைப் பின்பற்றும் உன்னைக் கல்நெஞ்சக்காரன், உழைப்புறுஞ்சி, கார்ப்பரேட் கால்நக்கி என்று சில சீமான்களும், சீமாட்டிகளும் சொல்லக்கூடும். அதை அப்படியே புறந்தள்ளு. தொழிலாளியாக இருந்து முதலாளியாக ஆன உனக்கு இந்த படிப்பினைகளைக் கற்றுத் தந்ததே அந்த தொழிலாளர்கள்தானே.
அடுத்தவன் தாடியில் தீப்பிடித்தால் உன்னுடைய தாடியை முதலில் தண்ணீரில் நனைத்துக்கொள் என்று ஒரு கிரேக்க சொலவடை உண்டு. அக்கம்பக்கத்தில் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் முதலாளியைக் காலி பண்ணினார்கள் என்று காற்றில் வரும் கதைகளைக் கவனமாகக் கேட்டு அசைபோட்டுக்கொண்டே இரு.
Say again: 1970-களில் தொழிலாளியாக இருந்ததற்காக இன்னும் உழைப்பாளி பாட்டாளி என்று அவர்கள் அனத்திக் கொண்டிருக்கும் கோட்பாடுகளை நம்பாதே.
‘அடேய் உழைப்புறுஞ்சியே’ என்று யாராவது எகிறிக்கொண்டு வந்தால் பதில் சொல்லாமல் அடக்கி வாசி. ‘அப்படியே மூடிக்கிட்டு போயிடு, நானெல்லாம் ஒருகாலத்துல பேசாத பொதுவுடைமை டயலாக்கா?’ என்று எதையும் புரிய வைக்க முயற்சிக்காதே. சீறுபவன் எல்லாம் ஒரு பெட்டிக்கடை கூட வைத்து நடத்தியிருக்க மாட்டான்.
‘குறைஞ்ச கூலிக்கு இந்திக்கார லேபர் வந்தப்புறம் இங்க இருக்கற லேபர யாருமே மதிக்கறதில்ல, வேலை குடுக்கறதில்ல’ என்று சொல்பவனிடம் ஒருபோதும் உரையாடாதே. தமிழகத்தில் இருக்கற லேபர் என்ன இலட்சணத்தில் வேலை செய்கிறார்கள், ஏன் இந்திக்கார்ர்கள் இங்கு வருகிறார்கள் என்று அவர்களுக்குக் கடைசிவரைக்கும் புரியாது.
தமிழ்நாட்டில் 1970-களில் இருந்த தொழிலாளர் வர்க்கமும், 2020-இல் இருக்கும் தொழிலாளர் வர்க்கமும் முற்றிலும் வேறு என்பதை உணர். ஏழைப் பாட்டாளி என்று கதைகள், நாவல்கள் எழுதுபவர்கள் எல்லாம் 50 வயதைத் தாண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்.
Say again: அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.