கேள்வி: கோயமுத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி வடக்கிலுள்ள பிற மையங்களுடன் இணைத்து படிப்படியாக மூட இருப்பதாக செய்திகள் வருகின்றனவே? அதற்காக கரும்பு விவசாயிகள் கோவையில் போராட்டம் நடத்தியதாகவும் நாளேடுகளில் செய்தி வந்த சூழ்நிலையில் இஃதை எப்படி அணுகுவது?
பதில்: கோயமுத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமல்லாமல் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பல இடங்களில் கரும்பு பூத்தாலும், முளைக்கும் திறனுடைய விதைகள் கோயமுத்தூர் தட்பவெப்ப நிலைக்கு மட்டுமே உருவாகும் என்பதாலேயே ஆங்கிலேயர்கள் கோவையில் ஆராய்ச்சி நிலையத்தை 1912-லேயே அமைத்தனர். சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ள இன்றைய கரும்புகளை சி. ஏ. பார்பர் என்பவரும் T. S. வெங்கட்ராமன் என்பவரும் இணைந்து உருவாக்கினர். இதுவே Nobilization of sugarcane என்று அழைக்கப்படுகிறது. இந்த Nobilization தான் பல்லாயிரம் கோடி புழங்கும் இன்றைய சர்க்கரை ஆலைத் தொழிலுக்கு அடிப்படை.
நடுவணரசின் கீழ் வரும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை, கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், மத்திய வேளாண் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய மூன்றும் கோயமுத்தூரில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே அமைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் இயக்குனர், பல விஞ்ஞானிகள், அலுவலக சிப்பந்திகள், ஓட்டுனர்கள் என ஏகப்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆட்டுக்கு தாடி எதற்கு, ஆராய்ச்சி நிலையத்திற்கு டைரக்டர் எதற்கு என்ற கேள்வி நமக்கெல்லாம் பலமுறை தோன்றினாலும் இவையனைத்தும் நடுவணரசின் நிதியுதவியில் இயங்குபவை என்பதால் இவ்வளவு காலமாக கேட்பாரில்லாமல் இருந்துவிட்டன. இப்போதுதான் வடக்கே இருக்கும் அதிகாரிகளுக்கு ஞானோதயம் ஏற்பட்டு பல பதவிகள் தேவையில்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஒரு நாளைக்கு இருபது முப்பது கையொப்பங்களை இடுவதற்காக ஓர் இயக்குனர் பதவி, அதற்கு இரண்டு இலட்சம் சம்பளம், படிகள், விமானப் பயணங்கள், நட்சத்திர விடுதி வாசங்கள் என பல இலட்சங்களை விழுங்கி அதனால் அறிவியலுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த பலனுமில்லை என்பதை இப்போதாவது கண்டறிந்தார்களே என்று பாராட்டவேண்டும். கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தையும், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தையும், மத்திய வேளாண் பொறியியல் ஆராய்ச்சி மையத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டது ஏனென்று தெரியவில்லை.
மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்திலும், கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திலும் உள்ள உழவியல், நோயியல், பூச்சியியல், மண்ணியல், வேளாண் விரிவாக்கவியல், பொருளியல் விஞ்ஞானிகள் பதவிகளில் உள்ள duplication-களை நீக்கிவிட்டு இரண்டு நிறுவனங்களுக்கும் பொதுவாக தேவையான அளவுக்கு மட்டும் விஞ்ஞானிகளைப் பணியிலமர்த்தி மற்றவர்களை பிற இடங்களுக்கு அனுப்பி உருப்படியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளச் சொல்வதே மக்கள் வரிப்பணத்திற்கு அரசாங்கம் தரும் மதிப்பாகும். இன்டர்காமில் கூப்பிடக்கூடிய தொலைவிலுள்ள இந்த இரண்டு ஆராய்ச்சி மையங்களுக்கு இரண்டு செட் இயக்குனர்கள், இரண்டு செட் விஞ்ஞானிகள், இரண்டு செட் அலுவலக சிப்பந்திகள் என ஆரம்பித்து இரண்டு செட் ஜெனரேட்டர் வரை வந்ததோடு கோவையில் அரசாங்க செலவில் இரண்டு இடங்களில் ஹிந்தி திவஸ் கொண்டாட வேண்டியிருக்கிறது. இவற்றை அப்படியே இணைத்து ஒரு செட்டை மட்டும் தக்க வைப்பதால் ஆராய்ச்சிகளில் சுணக்கம் ஏற்பட்டு நாடு வல்லரசாக முடியாமல் போகும் என்பவர்கள் ஒரு மாதம்கூட தனியார் நிறுவனங்களிலோ, அயல்நாட்டு ஆய்வகங்களிலோ சம்பளம் வாங்கிப் பார்த்திராத inbreeding depression derivatives எனலாம்.
அத்தோடு பணி ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது, இயக்குனர் துணைவேந்தர் போன்ற பதவிகளை வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். பழுத்த அனுபவமும், செறிவான ஞானமும் உள்ள விஞ்ஞானிகள் தனியாக கன்சல்டன்டுகளாகவோ அல்லது சொந்த நிறுவனங்களை உண்டாக்கி நடத்துபவர்களாகவோ மாறுகின்றனர். சிலர் தினசரி அலுவலகப் பணிகளுக்கு விடைகொடுத்து முற்றிலும் புதிய வாழ்வியல் முறைகளில் இறங்கி எதிர்த் திசைகளில் பயணிக்கின்றனர். இந்த இரண்டுக்கும் எடுபடாத சிலர் ஏதாவது சிபாரிசு மூலமாக பதவி நீட்டிப்பு வாங்கிக்கொண்டு திரும்பவும் அதே இடத்துக்கு வந்து இளைய தலைமுறையினரின் உத்வேகத்தைக் மட்டுப்படுத்துகின்றனர். அரசாங்கம் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிப்பலன்களை முறையாக வழங்கி கவுரவமாக வெளியேற்றிவிட்டு, புறவாசல் வழியாக பணிநீட்டிப்பு வழங்கும் செயல்களைத் தவிர்ப்பதே இந்தியாவிலுள்ள மனிதவள ஆற்றலுக்கு மதிப்பளிக்கும் செயலாகும்.
நாட்டிலுள்ள பல பெருநிறுவனங்கள் இன்று merger & acquisitionஇல் ஈடுபட்டுள்ளன. பல அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளே ஒன்றுடன் ஒன்று இணைய ஆரம்பித்துள்ளன. கணினித் துறையில் செயற்கை நுண்ணறிவுத்திறன் பல ஊழியர்களை redundant ஆக்குகின்றது. அதற்காக அந்த துறைகளின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனரா என்றால் நிச்சயமாக இல்லை. மக்களின் விழிப்புணர்வு, நீதிமன்றங்களின் அழுத்தம் காரணமாக, அரசாங்கமும் resource optmization என்ற கோணத்தில் அணுகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசாங்க வேலை என்பது சோற்றுக்கு பாதுகாப்பான வழி என்பதாலேயே பல இலட்சங்களை இலஞ்சமாக வழங்கி பதவிக்கு வர பலர் ஆயத்தமாக இருக்கும் சூழலில் இத்தகைய நிர்வாக சீர்திருத்தங்கள் தவிர்க்க இயலாததும், அத்தியாவசியமான ஒன்றும் ஆகும்.
கரும்பு விவசாயிகள் ஒரு பத்துபேர் பெரும் கூட்டமாக வந்து இதற்காக கோயமுத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டது நகைப்புக்குரிய நிகழ்வாகும். கரும்பை விவசாயிகள் 90% சர்க்கரை ஆலைகளுக்கு விற்கிறார்கள். மீதம் வெல்லத்துக்குச் செல்கிறது. இதில் – கரும்பு இரகம் உட்பட – அந்தந்த பகுதிகளில் உள்ள ஆலை நிர்வாகம் பரிந்துரை செய்வதைத் தாண்டி விவசாயிகள் தாமாக எதையும் செய்வதில்லை; அதற்கு அவசியமும் இல்லை. காலையில் எழுந்தவுடன் கோயமுத்தூர் கரும்பு ஆராய்ச்சி மையத்துக்கு போன் போட்டு கரும்பு சாகுபடி சம்பந்தமாக உரையாடிவிட்டுத்தான் காலைக்கடன்களை ஆரம்பிக்கிறோம், அதனால் கரும்பு ஆராய்ச்சி தொடரவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு பேட்டி கொடுப்பதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இன்னமும் விவசாய சங்கத் தலைவர் பதவிகள் ஊருக்குள் வேலைவெட்டி இல்லாத பண்ணையார்களிடமே இருப்பதாக தெரியவருகிறது.
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும், ஆலைகள் நிலுவைத்தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும், வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் அடிக்கடி போராடுவதைப் பார்க்கலாம். உழவு செய்வதில் இருந்து அறுவடை வரைக்கும் ஆகும் செலவையும், அதற்கான வட்டியையும் கணக்குப் பார்த்தால் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் மிஞ்சாது. கரும்பு ஒன்றும் அத்தியாவசியப் பயிரல்ல. சர்க்கரை உணவில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் பஞ்சமோ, பட்டினிச் சாவுகளோ வந்துவிடாது. மிக அதிகமான தண்ணீரை பயன்படுத்துவதோடு நில்லாமல் அறுவடைக்குப் பிறகு தோகைகளுக்குத் தீ வைக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் மாசு உண்டாக்கும் முக்கிய பயிர் கரும்பாகும்.
இன்றைய தேதிக்கு சீமைக்கருவேல் விறகுக் கட்டைகள் ஒரு டன் 3000-4000 வரை விற்கிறது. கரும்பு சாகுபடி செய்வதற்கு பதிலாக அடர்நடவு முறையில் சொட்டுநீர் மூலமாக சீமைக்கருவேல மரம் பயிரிட்டால் உழவு, ஆட்கூலி, களையெடுப்பு, பார் அணைப்பு செலவு என எதுவுமே இல்லாமல் அறுவடையும் ஜேசிபி மூலமாக எளிதாகச் செய்து வருமானம் ஈட்டலாம். பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், இயற்கை விவசாயமாக, ஆலைகளிடம் கெஞ்சி நிற்காமல் ஜே. சி. குமரப்பா அவர்கள் கூறியதுபோல முற்றிலும் தற்சார்பு கிராமப் பொருளாதாரத்தை உருவாக்கலாம். பசுமை விகடனின் ஜூனியர் கோவணாண்டி, மண்புழு மன்னாரு போன்றவர்களின் கட்டுரைகளைப் படித்து பன்னாட்டு கம்பெனிகள், அரசாங்க ஆராய்ச்சி நிலையங்கள், வியாபாரிகள், வங்கிகள் என அனைவரையும் பார்த்து பொருமிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வேலைவெட்டி இல்லாத பண்ணையார்களுக்கு இஃது ஒரு வரப்பிரசாதமாகும்.
பருத்தி விதை ஆராய்ச்சியில் பஞ்சாப்பில் பிப்ரவரியில் நடவு செய்து அறுவடை செய்ததை ஜூன் மாதம் மகாராட்டிராவில் நட்டு அறுவடை செய்து, அக்டோபரில் கோயமுத்தூரில் நடவுசெய்யப்பட்டு உற்பத்தியாகும் விதைகள் அடுத்த பிப்ரவரி நடவுக்கு பஞ்சாப்புக்குச் சென்றுவிடுகின்றன. ஆண்டுக்கு மூன்று சந்ததி advancement துளியும் தவறில்லாமல் நடக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் நூறு ஏக்கர்வரை ஆயிரக்கணக்கான இரகங்களை, பெற்றோர் விதைகளை (அதாவது ஒரு கம்பெனியின் எதிர்காலத்தை) இரண்டு மூன்று ஊழியர்கள் நிர்வகிப்பதை சர்வசாதாரணமாக கோயமுத்தூர் சுற்றுவட்டாரங்களில் காண முடியும். கள நிலவரம் இவ்வாறு இருக்கையில் கரும்பு, பருத்தி, வாழை மற்றும் வேளாண் கருவிகளுக்கு ஆராய்ச்சி செய்ய manpower இல்லாமல் என்ன செய்வது, தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நடக்கும் சதி, இலுமினாட்டி சதி என்றெல்லாம் பரப்பப்படுபவை கணிசமான சோம்பேறிக் கூட்டங்களைக் காப்பதற்காகவே. ஏனெனில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் தமிழகத்துக்குத் தேவையானவற்றை ஆராய்ச்சி செய்ய போதுமான வசதிகளோடு, விஞ்ஞானிகளும் குவிந்து கிடக்கின்றனர். மேலும் இந்த மையங்கள் மூடப்படாமல் வடக்கே உள்ள ஆராய்ச்சி நிலையங்களுக்கு தெற்கத்திய யூனிட் மையங்களாக செயல்பட்டவாறே இருக்கும்.
மித்ரோன் மோடி அரசு கொண்டுவரும் அனைத்து கொள்கைகளையும், திட்டங்களையும் விமர்சித்து வருபவர்கள்கூட இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதே பகுத்தறிவுடைய செயலாகும்.