கோயமுத்தூரில் கட்டப்பட்டுள்ள அதிசய இரண்டடுக்குப் பாலம்

கோயமுத்தூரில் கட்டப்பட்டுள்ள அதிசய இரண்டடுக்குப் பாலத்தைப் பலரும் பரிகசித்து வருகின்றனர். ஆனால் அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையையும், பண்டைய உரோமானியப் பேரரசுகளுக்கும் உள்ள தொடர்பையும் குறித்த இரகசியத் தகவல்களை வெளியிடுவது இப்போது அவசியமாகிறது.

இந்தியாவில் உள்ள இரயில்வே பிராட்கேஜ் தண்டவாளங்கள் ஐந்தரை அடி (1676 மிமீ) அகலமுடையவை. கிட்டத்தட்ட எல்லா தண்டவாளங்களும் இன்று பிராட்கேஜ் ஆகிவிட்டன.

ஸ்டேண்டர்டு கேஜ் என்பது 4 அடி 8.5 அங்குலம் (1435 மிமீ) இடைவெளி கொண்டவை. டில்லி, பெங்களூர், சென்னை மெட்ரோ போன்றவை, டிராம் இரயில்கள் எல்லாம் ஸ்டேண்டர்டு கேஜ் அகலமுடைய தண்டவாளத்தில்தான் இயங்குகின்றன. இந்தியாவின் முதல் இருப்புப்பாதை ஸ்டேண்டர்டு கேஜ் அகலத்தில்தான் அமைக்கப்பட்டது.

அதை அமைத்தவர்கள் ஆங்கிலேயேப் பொறியாளர்கள். தளவாடங்கள், இரயில் பெட்டிகள் அங்கிருந்தே எல்லா இடங்களுக்கும் சென்றதால் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பிராட்கேஜ் என்பது 4 அடி 8.5 அங்குலம் அல்லது சற்றுக் கூடுதலாக மட்டுமே அமைந்துவிட்டது.
அமெரிக்காவிலும் முதல் இரயில்வழித்தடங்களை அமைத்தவர்கள் ஆங்கியேயர்களே என்பதால் அங்கும் ஸ்டாண்டர்ட் கேஜ் என்பது அதே அளவுதான்.

ஏன் ஆங்கிலேயப் பொறியாளர்கள் தண்டவாளங்களை 4 அடி 8.5 அங்குலமாக வடிவமைத்தனர்? இன்னும் பெரிதாக எட்டு அடி, பத்து அடி அகலத்தில் அமைத்திருக்கக்கூடாதா?

ஆரம்பத்தில் டிராம் தண்டவாளங்களை 4 அடி 8.5 அங்குலத்தில் வடிவமைத்த பொறியாளர்கள் அதே தளவாடங்களைப் பயன்படுத்தி நெடுந்தூர இருப்புப்பாதைகளையும் வடிவமைத்தனர்.
ஏனெனில் அதைவிட அகலமான தண்டவாளங்கள் போட்டால் அதன் பெட்டிகளை சாலைகளில் எடுத்துவர முடியாது.

சாலைகளில் இரயில் பெட்டிகளை எடுத்துவரும் சரக்கு வண்டிகளிலும் இரு சக்கரங்களுக்கு இடையேயான இடைவெளியும் 4 அடி 8.5 அங்குலமே இருந்தது.

காரணம், இங்கிலாந்து உட்பட அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுவதும் சாலைகளை அமைத்தவர்கள் உரோமானிய பேரரசர்கள். மக்கள் குதிரைமீது அமர்ந்து மட்டுமே போருக்கும், வியாபாரத்துக்கும் பயணப்பட்ட காலங்களில் அவர்கள்தான் முதன்முதலில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட இரதங்களைப் போருக்கும், சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தினர்.

அந்த உரோமானிய பேரரசர்களின் இரதங்களில் இரண்டு சக்கரத்துக்கு இடையே இருந்த அகலம் 4 அடி 8.5 அங்குலம். இரண்டு போர்க்குதிரைகளை ஒரு இரதததில் பூட்டும்போது தேவைபட்ட இடைவெளிதான் இது. அதாவது the width of two horses’ asses. என்பதே.

இன்று விண்வெளிக்கு மனிதர்களை எடுத்துச் சென்றுவரும் விண்வெளி ஓடங்கள்தான் உலகின் அதிநவீன போக்குவரத்துக் கருவி. அதில் நடுவில் உள்ள மைய எரிபொருள் தொட்டியுடன் solid rocket booster எனப்படும் துணை எரிபொருள் தொட்டிகள் ஏன் தனியாக இணைக்கப்படுகின்றன? ஏன் அதற்கென மிக விரிவான எலக்ரிகல், எலக்ட்ரானிக் தொடுப்புகள் உண்டாக்க வேண்டியிருக்கிறது?

Solid rocket booster-ஐயும், மைய எரிபொருள் தொட்டியையும் தயாரிப்புக் கூடத்திலிருந்து பெரிய சரக்கு லாரிகளில்தான் கொண்டுவர வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட பூஸ்டர்கள் விண்வெளி ஓட தயாரிப்பு மையத்திலிருந்து ஏவுதளத்திற்கு இரயில் தண்டவாளங்கள் வழியாகத்தான் எடுத்துச் சென்றாக வேண்டும். அதற்குத் தேவையான இதர கருவிகள் அனைத்தும் இரயில் பெட்டிகளில் வைத்தே எடுத்துச் செல்ல முடியும்.

உரோமானியப் பேரரசில் சக்கரங்களை இரதத்தில் பொருத்த இரண்டு குதிரைகளின் ass அகலத்தை அளந்து பார்த்துக்கொண்டிருந்த நபர்களுக்குத் தாங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்று தெரியாது.

இப்போது கோயமுத்தூர் பாலத்திற்கு வருவோம். பண்டைய உரோமானியப் பேரரசில் இருந்த இரண்டு குதிரைகளின் ass-தான் இன்று வடிவமைக்கப்படும் இரயில், கார், லாரிகளுக்கு ஆரம்ப மூலம் என்பது மாதிரி இந்த பாலத்திற்கும் இரண்டு ass-களின் அகலமே போதும் என்று படத்தில் உள்ள இரண்டு ass-கள் முடிவு செய்ததாலேயே பாலம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது.

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தைச் செய்கையில் சின்ன மிஸ்டேக் ஆகிவிட்டதால் What an ass! என்று சொல்வதற்குப் பதிலாக Bloody assholes என்று சொல்லும்படி ஆகிவிட்டதாம்.

நம்முடைய முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் காரணங்கள் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்வார்கள். இதைப் படித்த பின்னர் எந்த asshole அப்படி சொன்னது என்று கேட்கக்கூடாது.

ஹாம் ரேடியோ – அறிமுகம் (HAM Radio)

ஹாம் ரேடியோ குறித்து அறிந்துகொள்வோம்.

ஹாம் வானொலியை (HAM radio) அமெச்சூர் ரேடியோ (Amateur radio) என்றும் சொல்லுவார்கள். நாம் பாடல்கள் கேட்கும் FM வானொலி ஒருவழி ஒலிபரப்பு. அதாவது வானொலி நிலையம் ஒலிபரப்புவதை நாம் கேட்க மட்டுமே முடியும். அதனால் ஒலிபரப்பு செய்யுமிடம் நிலையம் என்றும் அதைக் கேட்கும் பயனாளர்களை நேயர்கள் என்றும் அழைப்பர்.

ஹாம் வானொலி என்பது இருவழி ஒலிபரப்பு. அதாவது நாம் பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேச முடியும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். செல்போன் போல அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன் என்றே அழைக்கப்படுவர்.

ஒவ்வொரு ஒலிபரப்பாளருக்கும் அதாவது ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அழைப்புக்குறி (Call Sign) உண்டு. ஒவ்வொரு முறை பேசும்போதும், பேசி முடிக்கும்போதும் தங்களது அழைப்புக்குறியையும், அடுத்த முனையில் இருக்கும் நிலையத்தாரது அழைப்புக்குறியையும் சொல்லியே பேசுவர்.

உதாரணமாக VU3WWD என்ற நிலையத்தார் VU3ZRF என்ற நிலையத்தை அழைக்கையில் This is Victor Uniform number three Whisky Whisky Delta calling Victor Uniform number three Zulu Romeo Foxtrot, and standing by என்று சொல்லிவிட்டு பத்து வினாடிகள் காத்திருந்து பதில் இல்லையெனில் மறுபடியும் அழைப்பர். மூன்று முறைக்கு மேல் பதில் இல்லையெனில் அழைப்பதை நிறுத்திக்கொள்வர். அந்த நிலையத்தார் Victor Uniform number three Whisky Whisky Delta, this is Victor Uniform number three Zulu Romeo Foxtrot. Go ahead என்று பதில் தருவார். உரையாடல் முடிந்தபின் இரு ஸ்டேஷன்களும் அதேபோல் அழைப்புகுறியைச் சொல்லி Signing Clear என்று முடித்துக்கொள்வர்.

அழைப்புக்குறியைப் பெற மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் Wireless Planning Coordination and Monitoring Wing நடத்தும் Amateur Station Operator Certificate (ASOC) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அழைப்புக்குறி இல்லாத நபர்கள் வயர்லெஸ் ரேடியோவில் பேசுவது சட்டப்படி தவறு என்பதோடு எந்த நிலையமும் அத்தகைய அந்நிய நபர்களுடன் உரையாட முன்வர மாட்டார்கள். Radio language தெரியவில்லையெனில் பெரும்பாலும் ஹாம் ஸ்டேஷன்கள் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குப் புரியாது.

ASOC தேர்வில் இரண்டு வகை உண்டு. Restricted grade தேர்வில் மின்னியல், காந்தவியல், மின்னணுவியல், வானொலி அலைவரிசைகள், சட்ட திட்டங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் இருக்கும். இதற்கென பிரத்தியேக குறிப்புகள், மாதிரி வினா விடைகள் கொண்ட புத்தகத்தை உங்களுக்குத் தெரிந்த ஹாம் எவரிடம் கேட்டாலும் தருவார்கள். இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு வார படிப்பே தேர்ச்சி பெறப் போதுமானது.

General grade தேர்வில் restricted grade தேர்வில் வரும் பாடத்திட்டததுடன் கொஞ்சம் கூடுதலான பகுதிகள் இருப்பதோடு மோர்ஸ் குறியீடு (Morse Code) தேர்வும் உண்டு. நிமிடத்துக்கு ஆறு வார்த்தைகள் அனுப்பவும் எட்டு வார்த்தைகளைக் கேட்டு, தாளில் எழுதவும் தெரியுமளவுக்கு புலமை வேண்டும்.

மோர்ஸ் குறியீடு என்பது ஆங்கில எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் பிப், பீப் என்ற ஒலியாக மாற்றி ஒலிபரப்புவதாகும். மிகக்குறைந்த சக்தியில் நீண்டதூரம் தகவல்களை அனுப்ப தந்தி சேவையில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீடு இன்னமும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பழைய நோக்கியா அலைபேசிகளில் குறுந்தகவல் வந்தால் பிப்பிப்பிப் பீப்பீப் பிப்பிப்பிப் என்ற சத்தம் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அது SMS என்ற வார்த்தையின் மோர்ஸ் குறியீட்டு ஒலியே.

Restricted grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU3 என்று ஆரம்பிக்கும். General grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU2 என்று ஆரம்பிக்கும். VU என்பது இந்தியாவுக்கான சர்வதேச வானொலி அடையாளக் குறி. Victoria’s Union என்று அந்தக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது இன்றும் அப்படியே உள்ளது.

கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களுக்கு தேர்வின் முதல் பகுதியில் விலக்கு உண்டு. யார் வேண்டுமானாலும் general grade தேர்வை நேரடியாக எழுதலாம். Restricted grade எழுதியே general grade எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் மோர்ஸ் கோடு சரளமாக அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பெற்றோர் ஒப்புதலுடன் ஹாம் ரேடியோ தேர்வு எழுதி அழைப்புக்குறி பெற்று வானொலியில் பேசலாம். நீச்சல், மிதிவண்டி, இருசக்கர, நான்குசக்கர வாகனம் ஓட்டுதல் போல குழந்தைகளுக்குக் அவசியம் கற்றுத்தர வேண்டிய விசயங்களுள் வயர்லெஸ் தகவல் தொடர்பும் ஒன்று. வானொலி அலைகள், ஆன்டெனா, ரிப்பீட்டர், அயன மண்டல வானிலை, சேட்டிலைட் தகவல் தொடர்பு என கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருப்பதோடு பல புதிய நபர்களை உட்கார்ந்த இடத்திலேயே அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்து தீவிரமாகப் பயணிக்க, கவனச்சிதறலைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட விசயத்தில் Mastery-க்கு முயற்சிக்க பதின்ம வயது மாணாக்கர்களுக்கு ஹாம் ரேடியோ ஓர் அற்புதமான கருவி.

உங்களது மகன்/மகளுடன் சேர்ந்து மோர்ஸ் கோடு பழகுவது அதைக் கற்றுக்கொள்ளுவதின் வேகத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அதற்கென ஏகப்பட்ட app-கள் உள்ளன. அதில் ஈடுபாடு இல்லையென்றாலோ, பொறுமை இல்லையென்றாலோ restricted grade தேர்வு எழுதலாம். Choose the best அடிப்படையில் ஒரு மணி நேரத் தேர்வு. இதில் தேர்ச்சிக்கு நாற்பது மதிப்பெண் எடுத்தால் போதுமானது.

Restricted grade-க்கும் General grade-க்கும் என்ன வித்தியாசம் என்றால் ஒலிபரப்பும் கருவியில் உள்ள Watt அளவு அனுமதியில் உள்ள உச்சவரம்பு மட்டுமே. அஃது ஒரு அதரப்பழசான சட்ட நடைமுறை என்பதால் யதார்த்தத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற நகரங்களில் WPC, தேர்வுகளை அவ்வப்போது நடத்துகிறது. தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. தேர்ச்சி பெற்ற பின் அழைப்புக்குறி பெற one time கட்டணமாக 20 ஆண்டுகளுக்கு 1000 ரூபாய், 40 ஆண்டுகள் அல்லது உங்களது 75 வயது வரைக்கும் 2000 ரூபாய் மட்டுமே. இடையில் வேறு எந்த கட்டணமும் கிடையாது.

விண்ணப்பித்த பின் தேர்வு எழுதி, முடிவு வெளியிடப்பட்டு, பின்னர் டெல்லிக்கு விண்ணப்பித்து அழைப்புக்குறி பெற குறைந்தது 9 – 12 மாதங்களாகும். அதனால் ஹாம் வானொலி உங்களது படிப்பையோ, அலுவலகப் பணிகளிலோ இடையூறு செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அழைப்புக்குறி பெற்ற பின் வயர்லெஸ் சாதனங்கள் வாங்கினால் போதுமானது. காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி போன்ற கருவியை Handy என்றும் அவர்களது வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பெட்டி போன்ற தனியாக மைக் உடன் கூடிய கருவி Base என்றும் சொல்லுவார்கள். Handy 3000 ரூபாயிலிருந்தும், ஆன்டெனாவுடன் கூடிய Base 6000 ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது. சீனத் தயாரிப்புகள் வழக்கம்போல் ஹாம் சந்தையிலும் புதிய பாய்ச்சலை உண்டாக்கியிருக்கிறது. மகிழ்வுந்திலும் ஆன்டெனா வைத்து Base கருவியை வைத்துக்கொள்ளலாம்.

ரெட்மி, சாம்சங், ஐபோன் என்று செல்போனில் பல்வேறு range இருப்பதைப்போல விலையுயர்ந்த பிராண்டு கருவிகளும் ஹாம் வானொலிப் பயன்பாட்டில் உண்டு. உங்களுடைய தேவை, பொருளாதார வசதி போன்றவற்றைப் பொறுத்து கருவிகளை வாங்கலாம். மற்றபடி, இது வரவேற்பறையில் வைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் விலையுயர்ந்த சமாச்சாரமாக இருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை.

VHF (Very High Frequency, 30 – 300 MHz) அலைவரிசைக்கு Repeaters உண்டு. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலி அலைகளைப் பெற்று amplify செய்து வேறு ஒரு அலைவரிசையில் அதிக சக்தியுடன் ஒலிபரப்பு செய்யக்கூடிய தானியங்கி கருவியை ரிப்பீட்டர் என்பார்கள். கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், இராஜபாளையம், ஏற்காடு, சென்னை என பல இடங்களில் தன்னார்வலர் குழுக்களால் ரிப்பீட்டர்-கள் நிறுவப்பட்டு தினசரி காலையும் மாலையும் வருகைப்பதிவுகள் நடத்தப்படுகின்றன.

புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் நமது செல்போன் நெட்வொர்க்குகள் டவர் சாய்ந்தோ, வெள்ளத்தில் மூழ்கியோ, கேபிள்கள் அறுந்தோ, மின் இணைப்பு இல்லாமலோ செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் ஹாம் ரேடியோவில் பேசுவது நேரடியாக ரிப்பீட்டரை அடைந்து காற்றில் பயணித்து அடுத்த ஹாம் கருவியை அடைவதால் நடுவில் எத்தகைய உபகரண உதவியும் தேவையில்லை. அதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தகவல் தொடர்பை மீட்டு, உதவி புரிவது ஹாம் நெட்வொர்க் மட்டுமே.

காவல்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் கழகம், மாநகராட்சிகள், தீயணைப்புத் துறை போன்றவற்றின் வயர்லெஸ் நெட்வொர்க் அலைவரிசை அந்தந்தத் துறை பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதோடு பேரிடர் காலங்களில் அவர்களது துறை சார்ந்த தேவைகளுக்கே அந்த அலைவரிசை போதாது என்பதால் பொதுமக்களின் அவசரகால தகவல் தொடர்புக்கு ஹாம் ரேடியோ ஆர்வலர்களின் சேவை மிகவும் முக்கியமானது.

ஹாம் ரேடியோ பயனாளர்களுடன் காடுகளில் ட்ரெக்கிங் செல்லும் குழுக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஒரு குறிப்பிட்ட Simplex mode அலைவரிசையிலும் (3 – 10 கிமீ தொலைவுக்குள்), நகரப் பகுதிகளுக்குத் தொடர்புகொள்ள ஒரு ரிப்பீட்டருடனும் இணைந்திருப்பர். அதனால் காட்டுக்குள் காணாமல் போவதோ, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்குவதையோ தவிர்க்கப்படும். மேலை நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பரவலாக புழக்கத்தில் உண்டு. சுனாமி, கஜா, ஒக்கி புயல் காலத்தில் ஹாம் வானொலியாளர்கள் மிக முக்கிய களப்பணியாளர்களாக இருந்தனர். தேனி குரங்காணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய குழுவில் வயர்லெஸ் கருவிகள் யாரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கும்போது May day, May day, May day என்று சொல்லி தங்களது பெயர், இடம், ஆபத்தின் தன்மை, என்ன மாதிரியான உதவி தேவை என்பதை சொல்லுவது ரேடியோ ஒலிபரப்பில் அனைத்து அலைவரிசைகளிலும் உள்ள நடைமுறை. வயர்லெஸ் ரேடியோவை அருகிலுள்ள ரிப்பீட்டர் அலைவரிசையில் stand by-இல் வைத்துவிட்டு தங்களது அலுவல்களைப் பார்ப்பது ஹாம் பயனாளர்களின் பழக்கம். அதனால் ரிப்பீட்டர்களில் May day அழைப்பு வந்தால் யாரோ ஒருவர் உடனடியாக பதில் சொல்லுவதோடு உடனடியாக அடுத்தகட்ட உதவி நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வர். அதாவது யாரோ ஒருவர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நமக்காக உதவக் காத்திருப்பார்.

One world, one language என்ற வாசகத்துடன் Hobby என்றே அறியப்படும் ஹாம் வானொலி மிகவும் இயல்பாக அன்றாடம் பயன்படுத்தப்பட்டாலும் அவசர காலங்களில் மிக முக்கியமானது. வரும் ஆண்டில் எதையாவது புதிதாகக் கற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் ஹாம் ரேடியோ பயன்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் அஃது உங்களைப் பெருமைப்படச் செய்யும்.

73,
பிரபு
VU3WWD

தமிழக விவசாயி என்கிற அரிய உயிரினம்

இந்தியாவிலேயே அபூர்வமான உயிரினம் ஒன்று உண்டென்றால் அது தமிழக விவசாயிகள்தான். உயர் மின் அழுத்த கம்பிகள் வயல் மீது செல்வதால் விவசாயம் பாதிக்கிறது, கேஸ் குழாய்கள் செல்வதால் விவசாயம் பாதிக்கிறது என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

தமிழகத்தில் மின் கம்பிகளோ, கேஸ் குழாய்களோ முதன்முறையாக செல்லவில்லை. குறுக்கும் நெடுக்குமாக பல இடங்களில் எரிவாயு, பெட்ரோலியம் செல்லும் குழாய்களும், உயர் மின் அழுத்த கம்பிகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் எங்குமே மகசூல் குறைந்துவிட்டதாகப் புகார் இல்லை.

உயர் மின் அழுத்தக் கம்பிகளுக்கு அடியிலோ, கேஸ் குழாய் மீதோ தென்னை, பாக்கு போன்ற மர வகைப் பயிர்களை சாகுபடி செய்யக்கூடாது என்பது உண்மை. ஆனால் மற்ற எந்த பயிர்களும் சாகுபடி செய்ய முடியாது என்று எந்த தடையும் இல்லை. மின்சார வாரியமோ, கேஸ் நிறுவனங்களோ அப்படி அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

தென்னை, பாக்கு சாகுபடி செய்பவர்கள் விவசாயிகளா என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி. சும்மா கிடந்த தோட்டத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தென்னையை நட்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு, நகர்ப்புறத்தில் வேறு தொழில்களில் இருக்கும் பகுதிநேர விவசாயிகள் நிலத்தடி நீர்மட்டத்துக்கு பெரும் கேடு. அந்தந்த ஊரில் யாரிடமாவது குத்தகைக்கு விட்டால் கோடை காலங்களில் சில மாதங்கள் தோட்டம் சும்மா கிடக்கும். நிலத்தடி நீர்மட்டம் மீதான அழுத்தமும் குறையும்.

முன்பெல்லாம் தங்களால் சாகுபடி செய்ய முடியாவிட்டால் பங்காளிகளிடமோ, பிறத்தியாரிடமோ குத்தகைக்கு விட்டுச் செல்வார்கள். இன்று கம்பிவேலி அமைத்து தென்னை மரம் வைப்பது அல்லது சும்மா எறிந்துவிட்டுச் செல்வது என்பதே அதிகம் என்பதால் இரண்டுமே உள்ளூர் பொருளாதாரத்துக்குக் கேடாக இருக்கிறது.

மின்கம்பிகளின் கோபுரங்கள் அமையவுள்ள இடங்களுக்கு அரசாங்கம் ஓரளவுக்கு நியாயமான இழப்பீடு தருகிறது. நூறு மீட்டருக்கு ஒரு கோபுரம் அமைவதால் நடுவில் வெள்ளாமை வைக்க முடியாது என்று சொல்பவர்கள் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் வந்து பார்க்க வேண்டும். எத்தனை காற்றாலைகள், எத்தனை சிறிய பெரிய மின்கம்பிகள். தண்ணீர் இல்லாமல் சும்மா கிடக்குமே தவிர மின் கம்பி செல்வதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று ஒரு விவசாயிகூட சொன்னதில்லை.

கம்பி அறுந்து விழுந்தா, கேஸ் குழாய் வெடிச்சுதுன்னா என்ன பண்றது என்ற அபாயங்களைப் பேசி பயமுறுத்துவதும் நடக்கிறது. சாலை விபத்துகளைவிட பெரிய அபாயம் தினசரி நமக்கு என்ன இருக்கிறது? அதை எளிதாக எடுத்துக்கொண்டு உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து செத்துட்டா என்ன பண்றது கேட்பவர்கள் இதுவரை அப்படி எத்தனை பேர் இறந்தனர், அதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு சதவீதம் என்பதைப் பேசுவதில்லை. நிலையாமை குறித்து இரண்டு நாட்களுக்குப் பேசலாம். சோம்பேறிகளின் முதலீடு அது என்பதால் இங்கு தேவையில்லை.

கேஸ் குழாய்கள் செல்லும் வயல்களில் அதன் பாதுகாப்புக்கு அந்தந்த விவசாயிகளே பொறுப்பு என்ற ஷரத்து ஒன்றும் மிகவும் அச்சமூட்டும் ஒன்றாக முன்வைத்துப் பேசப்படுகிறது. நம் வீட்டு முன்னால் இருக்கும் சாலையின் பாதுகாப்புக்குக் கூட நாம்தான் பொறுப்பு. ஆம், விபத்தை உண்டாக்ககூடிய வகையில் பொருட்களை போட்டு வைப்பதோ, வாகனங்களை நிறுத்துவதோ சட்டப்படி தவறு. சாலையை சேதப்படுத்த முற்படுவதும், அதற்கு துணைபோவதும் தவறு. அதேதான் கேஸ் குழாய், உயர் மின் அழுத்த கம்பி என அனைத்துக்கும். நம் வயலில் இருக்கிறது என்பதற்காக அதன்மீது போர்வெல் லாரியை நிறுத்தி ஓட்டை போடுவது, குறைந்த மின் அழுத்த கம்பிகளில் கொக்கி போடுவது என்பதெல்லாம் சட்டப்படி தவறு. மற்றபடி அவற்றின் பராமரிப்பு செலவை விவசாயி கொடுக்கும்படி எந்த சட்டமும் கட்டாயப்படுத்தவில்லை.

அரசாங்க மதிப்புப்படி இழப்பீடு வழங்கினால், மார்க்கெட் ரேட்டின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எப்போதும் ஒலிக்கிறது. மார்க்கெட் ரேட் என்றால் என்ன? அஃது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? டீக்கடை பெஞ்சுகளிலும், சலூன் கடை நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சொல்வதுதான் மார்க்கெட் ரேட். இருப்பு-கேட்பு-வழங்கல் (Stock – demand – supply) என்ற கோட்பாடு ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில் வாங்க வருபவர் எவ்வளவு தர முடியும் என்பதையும், விற்பவருக்கு எவ்வளவு அவசரம் என்பதையும் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது.

நம்ம ஏரியாவுல ஏக்கர் இருபத்தஞ்சு இலட்சத்துக்கு கீழ இல்லீங்க என்று எதை வைத்து சொல்கிறார்கள்? ஏக்கர் 25 இலட்சத்துக்கு வாங்கி அதில் என்ன பயிர் செய்து வட்டியுடன் அந்த முதலீட்டை ஈட்ட இயலும்? கம்பி, கேஸ் குழாய் செல்வதால் மார்க்கெட் மதிப்பு குறைந்துவிடும் என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மை எவ்வளவு விவசாயிகளிடம் இருக்கிறது? மார்க்கெட் மதிப்பு குறித்து பேச ஆரம்பித்துவிட்டாலே விவசாயம் செய்து வருமானம் ஈட்டுவது என்பது பேசத் தேவையில்லாத பொருளாகிவிடுகிறது.

கம்பிக்கு அடியிலோ, கேஸ் குழாய் மீதோ வீடு கட்ட முடியுமா என்ற கேள்வியும் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. விவசாய பூமியில் எதற்காக வீடு கட்ட வேண்டும்? எவனாவது அவனவன் நிலத்தை வீட்டுமனைக்கு விற்றால் தவறு. ஆனால் விவசாய நிலத்தில் நடுவில் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்வதில் தவறில்லை. என்ன சார் நியாயம் இது? அதாவது நிலம் வைத்திருப்பவன் என்ன செய்தாலும் நியாயம் என்று நேரடியாகச் சொல்லாமல் விவசாயம் என்ற போர்வைக்குள் எதற்காக ஒளிந்துகொள்ள வேண்டும்?

சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் எடுப்பு செய்யப்படும்போதும் ‘ஐயகோ, விவசாயி பாதிக்கப்படுகிறான்’ என்ற பிரச்சாரமே ஆரம்பிக்கப்படுகிறது. புதிதாக அமைக்கபடும் சாலைகள் என்பது வேறு. ஏற்கனவே இருக்கும் சாலைகளுக்கு நிலம் எடுத்தாலும் இதே பிரச்சினைதான்.

சாதி அமைப்பில் மேலிருந்து கீழே செல்லச்செல்ல, மேலே இருப்பவர்களுக்கு சாதி எப்படி மறைமுகமாக அனுகூலமாக இருக்கிறது என்பதையும், அதை எப்படி அவர்கள் காசாக்குகிறார்கள் என்பதையும் அறிவோம். அதே லாஜிக் இங்கும் உண்டு. மெயின் ரோட்டில் ஒரு ஏக்கர் வைத்திருப்பவர் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஐந்து ஏக்கர் வைத்திருப்பவரைவிட அதிக பலன்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அடைகிறார்.

அந்த நிலத்தைக் காட்டி கடன் வாங்கி ஒரு தொழில் ஆரம்பிப்பதோ, சொத்து மதிப்பாகக் காட்டி வாரிசுகளுக்கு வரன் தேடுவதோ, வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டு – விவசாயி என்ற வழக்கமான போர்வையில் – உபரி வருமானம் பார்ப்பது, பெட்ரோல் பங்க் அமைப்பது என எல்லாமே மெயின் ரோட்டில் உள்ள நிலக்கிழாருக்கு சாதகமாகவே இருக்கும்போது, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் – சாதி அமைப்பில் கீழே உள்ளவர்களைப் போலவே – தம்மைத் தடுப்பது எது என்று புரியாமல், கடுமையாக உழைத்தும் முன்னுக்கு வர ஏன் முடியவில்லை என்ற அயற்சியில்தான் வாழ்கிறார்.

அத்தகைய locational advantage உள்ள நிலக்கிழார்கள் அதற்கான risk-களையும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்? சாலை அகலப்படுத்த அரசாங்கம் நிலம் கேட்டால் இவ்வளவு நாளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அதன் பலனை அனுபவித்தோமே என்ற உணர்வே இல்லாமல் ‘ஐயகோ, ஏ பாசிச அரசாங்கமே’ என்று ஆரம்பிப்பதால்தான் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நிலக்கிழார்கள்கூட உதவிக்கு வராமல் ‘இவ்வளவு நாள் அனுபவிச்சப்ப நல்லா இருந்துச்சா?’ என்று கறுவுகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தேவைக்கு அதிகமான விவசாயிகள் இருக்கிறார்கள். அதனால்தான் விவசாயத்தின் எந்த பிரச்சினைகளையும் அதன் பக்கத்தில்கூட செல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டிருக்கிறோம். எதற்கெடுத்தாலும் கார்ப்பரேட் கம்பெனி என்பது, மின்கம்பி அமைத்தால், கேஸ் குழாய் பதித்தால் விவசாயம் அழிந்துவிடும் என்று சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்புவது போன்ற செயல்கள் எல்லாம் நம் நாட்டில் விவசாயி என்ற பெயரில் ஏகப்பட்ட பேர் சும்மாவே திரிகிறார்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

Professionally Managed Companies – நமது நிலைமை என்ன?

நிறுவனம் ஒன்றை உண்டாக்கி ஆரம்பகட்டத்தில் சிறப்பாக நடத்திச்செல்லும் புரமோட்டர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை Professionalism என்ற ஒன்றை கடைசி வரைக்கும் பின்பற்றாமல் வீட்டுக்குப் பின்னால் ஆடு மாடு கட்டும் தொண்டுப்பட்டி மாதிரியே கம்பெனி நடத்தி கடைசியில் அதைக் கொண்டுபோய் குப்புற கவிழ்த்து, தான் பாடையில் போகும்போது “சேர்மன், அ.ஆ.இ.ஈ. குரூப் ஆஃப் கம்பெனீஸ்” என்று மாலையாகப் போட்டுக்கொண்டு போய்விடுகின்றனர். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் படிப்படியாக கம்பெனி மூடப்பட்டு விடுவதோ அல்லது விற்கப்பட்டுவிடுவதோதான் பெரும்பாலும் நடக்கிறது.

ஆரம்பத்தில் பங்குதாரர்கள் சிலர் இணைந்து பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆரம்பிப்பது, மேற்கொண்டு முதலீடு போட்டு விரிவுபடுத்துவது இலாபத்தைக் கூட்டி புதிய அலகுகளை நிர்மானம் பண்ணுவது வரைக்கும் பங்குதாரர்களின் தனிப்பட்ட நடத்தை, சுய ஒழுக்கம், வெளியுலக பழக்கவழக்கங்களே நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறது.

வங்கிகளில் கடன் வாங்கி விரிவுபடுத்தும்போதும், யாரேனும் ஒரு பங்குதாரர் ஒத்துழைப்பு தராமல் சொதப்பும்போதும் அவருடைய பங்குகளை மற்றவர்கள் வாங்கிக்கொண்டு வெளியேற்றும் கட்டம் வரைக்கும் கம்பெனி மீது பங்குதாரர்களுக்கு ஒரு intimate பற்று இருப்பதில் தவறேதுமில்லை.

என்னிடம் நல்ல வியாபார யோசனையும், சந்தை வாய்ப்பும் இருக்கிறது ஆனால் போதுமான மூலதனம் இல்லை என்று சொல்லி, பங்குகளை விற்று மற்றவர்களுடைய மூலதனத்தை உள்ளே கொண்டுவரும்போது கம்பெனி மீதான புரோமோட்டருடைய பற்று குறைந்து Professional Management-க்கு மாறும் பழக்கம் இந்தியாவைப் பொறுத்தவரை கிடையவே கிடையாது.

பணம் போட்டு பங்குகளை வாங்கியவன் தனது முதலீட்டுக்கு ஈவுத்தொகை எவ்வளவு வரும், பங்கு மதிப்பு எப்படி இருக்கும் என்று கணக்குப்போடுவது இயல்பு. அதிலும் 25%-க்கு கீழான பங்குகளை வைத்திருக்கும் புரமோட்டர் அன்றாட நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டு ஆலோசனை வழங்குவதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது. என்றைக்கு முகம் தெரியாத நபர்களுக்கோ, முதலீட்டு நிறுவனங்களுக்கோ பங்குகளை விற்கிறோமோ அன்றே நம்முடைய தார்மீக உரிமை போய்விடுகிறது. பணம் போட்டவன் கேள்வி கேட்கத்தானே செய்வான்?

ஊரான் வீட்டுப் பணத்தை வாங்கி முதலீடு செய்துவிட்டு பின்புறமாக இலாபத்தை உருவி வாரிசுகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் காரியங்களில் இறங்கிய பெரிய மனிதர்கள் பலர் மேற்கு மாவட்டங்களில் உளர். ஆலை அங்கத்தினர்களுக்குப் போகவேண்டிய பணத்தில் பத்து பத்து ரூபாயாக பிடித்தம் செய்து கோவிலுக்கு ஜீரனோத்ர மஹா கும்பாபிஷேகம் செய்துவிட்டு பரிவட்டத்தையும் வாங்கிக்கொண்டதோடு ஒரு “சிறப்பு பட்டம்” ஒன்றையும் பெற்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்ட தொழிலதிபரின் கதை கோயமுத்தூர்ப் பக்கம் பிரபலம்.

கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) என்ற பெயரில் எட்டணாவுக்கு சமூக சேவையும் அதற்கு இரண்டு ரூபாய்க்கு விளம்பரமும் பண்ணிக்கொண்டு இருப்பதோடு, கம்பெனி ஆரம்பித்த காலத்தில் இருந்த தனது எடுப்பு தொடுப்புகளின் வாரிசுகள் வைத்திருக்கும் Foundation-களுக்கு நிதி உதவி அளித்து கம்பெனி பேலன்ஸ் ஷீட்டிலேயே சின்ன வீட்டைப் பராமரித்துவந்த பெரிய முதலாளி வைகுண்ட பிராப்தி அடைந்த பிறகு நிர்வாகத்துக்கு வரும் வாரிசுகளுக்கு இந்த நுணுக்கங்களெல்லாம் புரியாது. மிக அதிக விலைக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து கச்சாப்பொருட்கள் தொடர்ந்து வாங்கப்பட்டுக்கொண்டிருக்கும். அல்லது ஏதாவது ஒரு வெண்டர் என்ற பெயரில் மாதாமாதம் பில் பட்டுவாடா செய்யப்பட்டு வந்திருக்கும்.

பெரிய முதலாளியின் இரதசாரதிக்குத் தெரிந்த இந்த இரகசியங்களெல்லாம் சின்ன முதலாளிக்குத் தெரியாது அல்லது புரியாது. Restructuring என்ற பெயரில் பல செலவினங்களில் கிடுக்குப்படி போடும்போது கம்பெனியின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரச்சினைகள் கிளம்பும். எதற்கு பிரச்சினை வருகிறது என்றே தெரியாமல் குடும்பத்திலும் குழப்பம் உண்டாகும். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் கம்பெனி மூடப்படும் அல்லது விற்கப்படும். இந்தியா முழுவதும் நடந்துவரும் வழமையான வழக்கம் இது.

SME வகையறா நிறுவனங்களில் பங்குதாரர்களுடைய குடும்பத்தினரின் தலையீடே பெரும்பாலும் கம்பெனியை முட்டுசந்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது. முப்பது வயதில் ஆரம்பித்து நாற்பது வயதுவரை சிறப்பாகநடத்திவந்த கம்பெனியில் பங்குதாரர்களுடையை அப்பா, அம்மா அல்லது மனைவி வந்து நிர்வாகத்தில் தலையிடும்போது அதன் சரிவு தொடங்கிவிடுகிறது. வளர்ச்சிக்காக ஆலோசனை சொல்வதற்கும் அன்றாட நிர்வாக முடிவுகளில் தலையிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தியர்கள் பிரித்துப் பார்ப்பதே இல்லை. நாற்பது வயது மகனுக்கு ‘உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா இர்றா’ என்று உட்கார வைத்து ஆலோசனை வழங்குவது இந்திய அப்பாக்களுடம் உள்ள சிறப்பு.

இந்த நூற்றாண்டில் இருக்கும் அரசியல், தகவல் தொழில்நுட்ப சூழ்நிலைகளில் ஒரு நிறுவன நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சிறப்பான ஆலோசனைகளை வழங்கும் நூல்களுள் ஆகச்சிறந்த ஒன்று, Tom Peters எழுதிய Re imagine. ஒரு பெரிய நிறுவனத்தை உண்டாக்க வேண்டும், மிகப்பெரிய அளவுக்கு அதை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற வேட்கையுடையவர்கள் அவசியம் அலுவலக நூலகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒன்று. புத்தகம் என்றால் முதல் அலகிலிருந்துதான் படிக்க வேண்டும் என்ற கட்டமைப்பையே உடைத்து எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று எழுதப்பட்டது.

இன்றைய millenials நிறுவனங்களை உண்டாக்கி வளரும் வேகத்துக்கும் அவர்களுடைய அணுகுமுறையைப் புரிந்துகொள்ளவும் Re-imagine வாசிக்க வேண்டிய ஒன்று.

படத்திலிருக்கும் கட்டுரை Business Standard நாளேட்டில் அண்மையில் வந்தது.

இடைத்தரகர்களால் வாழும் விவசாயம்

அந்திமழை – மார்ச் 2019 – இதழுக்காக எழுதிய கட்டுரையின் திருத்தப்படாத வடிவம்:

விவசாயக் குடும்பங்களிலிருந்து கல்வியால் வெளியேறி வேறு தொழில்களுக்குச் சென்ற இளைய தலைமுறையினரால் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்று தங்களது பெற்றோர்களுக்கும் முதுமை வந்து சேரும், தமக்கும் வயதாகும் அதனால் உடல்வலு குறையும் என்பதைத்தான். வயதாகின்ற காரணத்தால் முழுநேர வெள்ளாமையைக் குறைத்துக்கொண்டு தென்னை, மா, மரவகைகளை நட்டுவிட்டு கால்நடைகளையும் குறைத்துக்கொள்வதை இன்டர்நேஷனல் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டு அவ்வப்போது கிராமத்துக்கு காரில் வரும் அடுத்த தலைமுறை, விவசாயம் அழிந்துவிட்டதைப்போல உணர ஆரம்பித்து சமூக ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் புலம்ப ஆரம்பிப்பதே விவசாயம் அழிந்து வருவதாக நாம் நினைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

தொன்னூறுகளில் வந்த ஐ.டி. வளரச்சியை ஒட்டி வேலைவாய்ப்பைப் பெற்று நாற்பதுகளில் நகரங்களில், வெளிநாடுகளில் வாழும் புதிய தலைமுறையினர் பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு அடிக்கடி அழைத்துச்செல்லும் நிலை வரும்போது தமது பெற்றோர்களுக்கும் வயதாகும் என்கிற யதார்த்தத்தை மறந்து உணவு சரியில்லை, பால் சரியில்லை, நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தவில்லை, ஆர்கானிக் உணவு சாப்பிட்ட என் பாட்டி நூறாண்டுகள் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார் என்று பலவாறாக குழப்பங்களில் ஆழ்ந்துவிடுவதும் இன்றைய விவசாயம் குறித்து பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயி என்பதற்கான வரையறையே இன்னும் ஐயத்துக்கு உரியதாக நம் நாட்டில் இருக்கிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் விவசாயி என்று சொல்லிக்கொள்கின்றனர். இன்று கணிசமான நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நகரத்தில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நில உரிமையாளர்கள் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக விவசாய தங்க நகைக்கடன், சிட்டா அடங்கலைக் காட்டி பயிர்க்கடன் பெற்றுக்கொள்கின்றனர். வங்கிகளுக்கு இஃது எல்லாம் நன்றாகத் தெரியும் என்றாலும் தங்களது கடன் வழங்கல் இலக்கு எட்டப்படுவதோடு, கடனுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதால் கண்டுகொள்வதில்லை.

பருவமழை சரியாக பொழியாததற்கு தீர்வு யாரிடமும் இல்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வரவேண்டிய ஆற்றுநீர் வரவில்லை என்பது மேல்மட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகிவிட்டது.

விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உற்பத்தியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு எந்த உரிமையையும் வழங்காத விவசாயிகள், விலையையும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சரக்கையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று நாம் பேசுவதற்கு தயாரில்லை. உதாரணமாக அதிக தண்ணீர் தேவைப்படக்கூடிய தென்னை, வாழை போன்ற பயிர்களைப் பயிரிடுவதைக் கட்டுப்படுத்தினால் பல ஆயிரம் ஏக்கர்களில் மற்ற விவசாயிகள் மேட்டாங்காட்டுப் பயிர்களைச் சாகுபடி செய்ய இயலும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு இத்தனை ஏக்கர் தென்னை, வாழை மட்டுமே பயிரிட அனுமதி என்று அரசு சொன்னால் கேட்டுக்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாக இருந்தால்தானே வரக்கூடிய விளைபொருளுக்கான சந்தையையும், தேவையையும் கணித்து விலை நிர்ணயம் செய்ய ஒரு மாடலை ஏற்படுத்த முடியும்.

தொழில்நுட்பங்களும், சாலை வசதிகளும் பெருகுவதால் நுகர்வோருக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன என்பதை மறுக்க இயலாது. ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கினால் எப்படி இரண்டு நாட்களில் மும்பையில் இருந்து திருச்சிக்கு டெலிவரி செய்யப்படுகிறது என்பதை மக்கள் அறிவர். அதேபோல் தக்காளி இங்கே கிலோ நாற்பது ரூபாயைத் தொடும்போது, சட்டீஸ்கரில் பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தால் இங்குள்ள வியாபாரிகள் பெரும்பணத்தை – எந்த காப்பீடும் இல்லாமல் தனிநபர்களுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையில் – இறக்கி பத்து, பத்து டன்னாக அதிகரிக்கின்றனர். கிலோ பதினைந்து ரூபாய்க்கு சட்டீஸ்கரில் வண்டியேறும் தக்காளிக்கு போக்குவரத்து செலவையும் சேர்த்து இருபத்தைந்து ரூபாய்க்கு இங்கு வந்து சேர்கிறது. பத்து ரூபாய் இலாபத்துடன் முப்பத்தைந்து ரூபாய்க்கு சந்தையை வந்தடையும்போது நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்த நுகர்வோருக்கு ஐந்து ரூபாய் குறைவாகக் கிடைத்துவிடுகிறது.

உள்ளூர் விவசாயிக்கு இதில் இலாபம் குறைவதையோ, நட்டப்படுவதையோ நுகர்வோர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. விவசாயிகளைக் பாகாப்போம் என்று சொல்பவர்கள் ஆண்டு முழுவதும் தக்காளி ஐம்பது ரூபாய்க்குத்தான் கிடைக்கும் என்றால் அறச்சீற்றம் கொண்டு அரசாங்கத்தைத் திட்டித் தீர்ப்பார்கள். Free market trade-இல் உள்ள பலன்களை அனுபவிக்கையில் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்.

பலராலும் மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனை சொல்லப்பட்டு வருகிறது. இதில் நகரத்தில் வாழ்ந்துகொண்டு அல்லது கிராமத்தில் இருந்தவாறே கூடுதலாக சில தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள், முழுநேர விவசாயம் செய்பவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள் என இரண்டுவகை உண்டு.

தென்னை, மா, மாதுளை, கொய்யா, வாழை, முருங்கை, சவுக்கு, யூகலிப்டஸ், மலைவேம்பு போன்றவற்றை பெரும்பாலும் absentee landlords எனப்படும் நகரவாழ் விவசாயிகள் விரும்புகின்றனர். அரசாங்கத்தின் கணிசமான மானியங்களை உறிஞ்சிக்கொள்ளும் செல்வாக்குப் பெற்றவர்களும் இப்பிரிவினரே.

மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்), செங்காந்தள் மலர் (கண்ணுவலிக் கிழங்கு), பூனைமீசைச் செடி, கீரைகள் போன்றவற்றை ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முழுநேர விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சந்தை ஏறி இறங்கும் என்பதைத் தெரிந்தே இதில் ஈடுபடுவதால் பெரும் இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமானாலும் சரி, அடக்கி வாசிக்கின்றனர்.

உலக வர்த்தக மையத்துடன் இந்தியாவும் இணைந்திருப்பதால் பல விளைபொருட்கள் சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை விலையைவிட சாலமன் தீவுகளில் இருந்து வரும் கொப்பரை நம்மைவிட நான்கில் ஒருபங்கு விலைக்கே கிடைக்கிறது. எங்கு மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விளைபொருட்களை இறக்குமதி வரி விதித்து தடுக்க முடியாது என்பதால் உள்ளூர் கொப்பரையின் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. உள்நாட்டு விவசாயிகளைக் காப்பதாக நினைத்து நாம் இறக்குமதியைத் தடுத்து நிறுத்தினால் ஏலக்காய், மஞ்சள் போன்ற வாசனைத் திரவியப் பயிர்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தக மையத்தின் வாயிலாக விதிக்கப்படும்.

இது புலி வாலைப் பிடித்த கதை மாதிரி தெரிந்தாலும் macro level-இல் புரிந்தகொள்ள வேண்டியது என்னவென்றால் மிக்குறைந்த செலவில் உற்பத்தி செய்ய வேண்டும், விவசாயி என்ற போர்வையில் உட்கார்ந்திருக்கும் நில உரிமையாளர்களைக் கட்டடங்களை வாடகைக்கு விட்டுள்ள ஓனர் போலவே கருதி அவர்களது வருமானத்துக்கு வரி விதிப்பதும், மானியங்களை நேரடியாக விவசாயம் செய்பவர்களுக்கு வழங்குவதுமே நம் முன்னர் இருக்கும் பெரிய சவால் என்பதே. இப்படியெல்லாம் சொன்னாலே ‘அப்ப, நிலம் வச்சிருக்கற நான் விவசாயி கிடையாது, எனக்கு எந்த சலுகையும் அரசாங்கத்துல இருந்து கிடைக்காது, அப்படித்தானே?’ என்று பலர் சீறுவதைப் பார்க்க முடியும்.

வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் உலக வர்த்தக மையத் தலையீடுகள் (இடுபொருட்களுக்கான மானியம் வழங்குவதில் உள்ள சிக்கலான கணக்கீடுகள் காரணமாக) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு குறைவு. உதாரணமாகத் தேங்காய் ஏற்றுமதி, இறக்குமதியைக் காட்டிலும் தேங்காய் எண்ணெயில் கட்டுப்பாடுகள் குறைவு. இந்தியாவிலிருந்த பல ஆயிரம் கோடிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் சீனாவைக் காட்டிலும் நாம் வெகுதூரம் பின்னே இருக்கிறோம்.

மூலிகைப் பயிர்களுக்கான சர்வதேச டிமாண்ட் வருடந்தோறும் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக ஏற்றுமதியாவது இசப்கோல் என்ற மூலிகை குஜராத், இராஜஸ்தானிலிருந்து என்றால் அதற்கடுத்த இடத்தில் இருந்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது தமிழகத்தில் இருந்து செல்லும் சென்னா இலைகள்தான்.

மருந்துக்கூர்க்கன், முருங்கை இலைப் பொடி, பூனைமீசைச் செடி, ஃபேசிஃபுளோரா செடி, வல்லாரை, அமுக்கராங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு என பலவும் விவசாயிகளால் பயிரிடப்பட்டு ஏற்றுமதியாகிறது. நம்மிடம் ஒவ்வொரு பயிர்களிலும் உள்ள முக்கிய செயல்படு மூலப்பொருளை (active principle) பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பம் இல்லாததால் பல அரிய வேளாண் விளைபொருட்கள் அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சிறு விவசாயிகள் இடைத் தரகர்களைத் தவிர்த்து நுகர்வோருக்கு நேரடியாக சந்தைப்படுத்துதலில் இந்தியாவில் உள்ள the best மாடல் நமது உழவர் சந்தைதான். இதன் எண்ணிக்கையை அதிகரித்து அதிலுள்ள சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்து விற்பனை நேரத்தை மதியத்துக்கு மேல் ஆரம்பித்து இரவு எட்டு மணி வரைக்குமாக செய்தால் நுகர்வோருக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும் மிகச்சிறந்த பயன் தரும். சிறு விவசாயிகளும் பல புதிய வெள்ளாமையை ஆரம்பித்து அந்தந்த ஊரில் உள்ள வரவேற்புக்குத் தக்கபடி சாகுபடியைத் தகவமைத்துக்கொள்வார்கள்.

அரசாங்க விழாக்கள், பள்ளி கல்லூரி விடுதிகள் உழவர் சந்தைகளிலிருந்தே காய்கறிகளை வாங்க வேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டால் சிறு குறு விவசாயிகள் – அதாவது நேரடியாக உழவில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்கள் – வேறு தொழில்களுக்குச் செல்லும் எண்ணிக்கை குறையும். இத்தகைய முன்னெடுப்புகள் win win சூழலையே உண்டாக்கும். இராணுவத்தின் தேவைகளில் குறிப்பிடத்தக்க அளவு உழவர் சந்தைகளில் இருந்து செல்கிறது என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். அதிக எண்ணிக்கையில் உழவர் சந்தையில் கடை போட விவசாயிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தைப் பின்பற்றும்போது அனைத்து சமூகத்தினரும் ஏற்றமடைய முடியும்.

உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற மாடலை நபார்டு வங்கி மூலம் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு உ.உ.க-வுக்கும் நபார்டு வங்கி பின்வாசல் மானியமாக பத்து இலட்ச ரூபாயை வழங்கும். அது தவிர சில இலட்சம் செலவினங்களை நபார்டு ஏற்கிறது. ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து தங்களது விளைபொருட்களை நேரடியாகவோ மதிப்பு கூட்டியோ, தங்களது கம்பெனி பெயரில் சந்தைப்படுத்தும் மாடல் என்பதால் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது தோல்வியுறும் மாடல் ஆகும். சாதி இல்லாமல் இந்திய கிராமமும், விவசாயமும் இல்லை என்பதால் இந்த உஉக மாடலில் சாதி நுண்ணிய அளவில் நுழைந்து பெரும் பிளவு சக்தியாக நிற்கிறது. பல உஉக-கள் மூடுவிழா காணும் நிலையில் உள்ளன.

உஉக-களை ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து நடத்துவதற்கும் மூலதனமும், overhead செலவினங்களும் அதிகம். அடுத்தடுத்த விரிவாக்கத்தின்போது அரசாங்க மானியத்தை எதிர்பார்த்து நிற்கும் சவலைப்பிள்ளையாகவே ஒவ்வொரு ஊரிலும் வளர்ந்து வருகிறது. உஉக என்பது கம்பெனி அமைப்புக்குள் செல்வதால் அதிகாரம் மேல்மட்டத்தில் குவிவதுடன், தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

இதை ஒப்பிடுகையில் உழவர் சந்தை என்பது decentralized, lean management மாடல். உற்பத்தி, விற்பனை குறித்த முடிவு எடுத்தல் அத்தனையும் அந்தந்த விவசாயி கையிலேயே இருப்பதால் நேரமும், அலைச்சலும், தேவையில்லாத சர்ச்சைகளும் தவிர்க்கப்படுகிறது.

நூறு விவசாயிகளிடம் தேங்காய் வாங்கி எண்ணெய் ஆட்டி விற்று இலாபத்தைப் பிரித்து அளிக்கும்போது அதில் இயக்குநர் மட்டத்தில் உள்ளவர்கள் இதை நாமே தனியாகச் செய்தால் என்ன என்று நினைப்பது இயல்புதானே. அப்படி யாராவது ஒரு இயக்குநர் எண்ணெய் ஆலை அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அங்குள்ள உஉக மூடுவிழா கண்டுவிடும். பல ஊர்களில் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளது.

இன்று venture capital உதவியுடன் B2B, B2C மாடலில் அலைபேசி செயலி வழியாக வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த பல நிறுவனங்கள் கார்ப்பரேட் கம்பெனி மாடலில் சந்தையில் நுழைந்துள்ளன. ஜெனரல் மேனேஜர், வேலை செய்யும் வைஸ் பிரசிடென்ட், ஜெனரல் மேனேஜருக்கு கொளுந்தியா புருசன் என்பதால் வைஸ் பிரசிடென்ட், வைஸ் பிரசிடென்ட்டின் தோழி என்பதால் சும்மா சம்பளம் வாங்கும் HR கன்சல்டன்ட் என பலருக்குமான சம்பளமும், இதர செலவினங்களும் அவர்கள் வாங்கி விற்கும் மாங்காய், தேங்காயிலிருந்தே வரவேண்டும் என்பதோடு பணம் போட்ட முதலீட்டாளருக்கும் இலாபத்தையும் காட்ட வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு இலாபம் எங்கிருந்து வரும் என்பதை யோசித்தால் இந்த கம்பெனிகள் கையிருப்பு கரையும்வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சூப்பர் மார்க்கெட்டுகளின் F&V (Fruits & Vegetables) பிரிவுகளும் கிட்டத்தட்ட இதே நிலையில்தான் உள்ளன. இவை அதிலுள்ள மற்ற பிரிவுகளுடன் செலவினங்களைப் பகிர்ந்துகொள்வதால் பார்ப்பதற்கு கொஞ்சம் வெற்றிகரமாகத் தோன்றலாம்.

பொதுவாக வறட்டு கம்யூனிசம் பேசிப்பேசியே நாம் யதார்த்தத்தை மறந்து வீணாகப் போகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தரகு முதலாளிகள், புரோக்கர்கள், கமிஷன் மாமாக்கள் என்று விற்பனைச் சங்கிலியில் உள்ள தவிர்க்க முடியாத ஒரு பிரிவினரைத் தொடர்ந்து அசிங்கப்படுத்தும் செயலையே மக்கள் செய்கின்றனர். இடைத்தரகர்கள் என்பவர்கள் தங்களது முதலை இறக்கி விற்பனைச் சங்கிலியில் ஒரு சிறிய அளவிலான ரிஸ்க்கை ஏற்றுக்கொள்கின்றனர். தினசரி ஐம்பது கிலோ பப்பாளி உற்பத்தி செய்யும் விவசாயி உழவர் சந்தை வாயிலாக விற்கலாம். ஆனால் தினசரி ஒரு டன் உற்பத்தி செய்பவர் அதை எப்படி அழிப்பார்?

அரசாங்கம் perishable commodity விற்பனையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட என்றைக்குமே முடியாது. இலாபம், நட்டத்தை யார் ஏற்றுக்கொள்வது என்பதைப் பதினைந்து நிமிடங்களில் முடிவுசெய்து அதை அமுல்படுத்தியாக வேண்டும். நான்கு மட்டங்களில் ஒப்புதல் பெற்று நடத்தப்படும் காரியமல்ல என்பதால் இடைத்தரகர்கள் தவிர்க்க முடியாத சக்திகள் ஆகிவிடுகின்றனர். கேரளாவிற்கு பத்து டன் பப்பாளி வாங்கி அனுப்பும் தரகர், பப்பாளியை அனுப்பும் லாரி விபத்தில் சிக்கினாலும் சரி, அங்குள்ள வியாபாரி பணம் தராமல் ஏமாற்றினாலும் சரி, இழுத்தடித்தாலும் சரி, பேசியபடி இங்குள்ள விவசாயிக்கு செட்டில் செய்தாக வேண்டும். இந்த ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் புரோக்கர் ஆகலாம். பல விவசாயிகள் புரோக்கர்களாக பகுதிநேர வேலை செய்துவருவது எல்லா கிராமங்களிலும் உண்டு.

ஒரு ஊரில் ஒரு ஹார்டுவேர் கடை மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கூடுதலாக இரண்டு கடைகள் திறக்கப்படும்போது போட்டி காரணமாக நுகர்வோருக்கு விலையைக் குறைத்து விற்றாக வேண்டும். சப்ளையர்களுக்கு உடனடியாக செட்டில் செய்தால் விலை குறையும் என்பதால் அவர்களும் அதிக மூலதனத்தைப் போட்டு தொழிலில் தீவிரமாக ஈடுபடுவர். கம்பெனிக்கு விரைவாகப் பணம் கிடைக்கிறது, நுகர்வோருக்கும் கடைகள் அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் பொருள் கிடைக்கிறது. உடனே, இந்த வியாபாரிகள் இரகசியமாக சங்கம் அமைத்து cartel செய்து அதிக விலைக்கு விற்பார்கள் என்ற ஸ்டேண்டர்டு வசனம் வரும்.

அங்குதான் நமது சாதி அமைப்பு நுண்ணியமாக செயல்படுகிறது. கடைக்காரர்கள் வெவ்வேறு சாதியாக இருந்தால் நிச்சயம் இரகசியக்குழு அமைக்க மாட்டார்கள். என்னதான் சொந்த சாதிக்காரனாகவே இருந்தாலும் மூட்டைக்குப் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து சிமென்ட் வாங்கி வீடு கட்ட யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

இதையே வேளாண் விளைபொருட்கள் விற்பனையில் பொறுத்திப் பாருங்கள். சொந்த சாதிக்காரன் வியாபாரி என்பதற்காக உங்களிடம் ஓர் ஏக்கர் பரப்பளவில் இருபது டன் தர்பூசணி விளைந்து நிற்கையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கொடுப்பீர்களா அல்லது ஸ்பாட் பேமன்ட் கொடுத்து எடுக்கத் தயாராக இருக்கும் வேறு சாதிக்கார வியாபாரிக்குக் கொடுப்பீர்களா?

இடைத்தரகர்களுக்கு கொழுத்த பணம் இலாபமாகச் செல்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியெனில் நாம் அதிகமான இடைத்தரகர்களை உண்டாக்கும்போது மட்டுமே அவர்களுக்கிடையிலான survival போட்டியில் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் கணிசமான இலாபம் கிட்டும். அதை விடுத்து இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும். புதுப்புது format-இல் இடைத்தரகர்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.

இன்று venture capital பணத்துடன் களமிறங்கியிருக்கும் அத்தனை கம்பெனிகளும் இடைத்தரகர்களே. Perishable commodity தரகு தொழிலில் கம்பெனியைக் காட்டிலும் தனிநபர்களின் செயல்திறனே அதிகமாக இருக்கும். கம்பெனிகள் விலை குறைவாக கிடைக்கும் காலத்தில் அதிகளவில் வாங்கி, கிட்டங்கிகளில் வைத்து விலை ஏறும்போது விற்று காசு பார்த்தால் மட்டுமே உண்டு. அதுவும் ஒருவகையில் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் ஒரு buffer-தான். விலை சரிந்த காலங்களில் அந்த கம்பெனிகள் அடிமாட்டு விலைக்காவது வாங்காவிடில், விளைபொருட்களை வயலிலேயே வீசி எறிய வேண்டிய நிலைமைதான் விவசாயிகளுக்கு. விலை ஏறும்போது சந்தை விலையைக் காட்டிலும் ஐந்து, பத்து குறைவாக விலை வைத்து கிட்டங்கிகளில் உள்ள சரக்கைக் கம்பெனிகள் தள்ளிவிடுவதால் நுகர்வோருக்கும் சிறிது இலாபமே.

சந்தைப்படுத்துதலில் நிறைய இளைஞர்கள் இடைத்தரகர்களாக நுழைய வேண்டும். இந்தக் கருத்து அதிர்ச்சிகரமாகவும், அசிங்கமாகவும் தோன்றினால் யதார்த்தத்தைப் பக்கத்திலிருந்து பார்க்கவும், பிரச்சினைக்குத் தீர்வு எதுவுமே கைவசம் இல்லாமல் மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று நம்பி வந்திருக்கிறீர்கள் என்றுதான் பொருள். வெறும் செல்போனை வைத்துக்கொண்டு தினசரி ஐம்பதாயிரம் இலாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் எனில் எத்தனை இளைஞர்கள் இதில் நுழைந்து இலாபத்தைப் பிரித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

சந்தைப்படுத்துதல் என்றதும் வீடுகளுக்கு காய்கறி, மளிகைச் சாமான்களை டெலிவரி செய்வதையே பெரிதாக ஊடகங்களில் பேசுகின்றனர். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. வீட்டில் அடைந்து கிடக்கும் இந்திய குடும்பத்தலைவிகளுக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கோ, சந்தைக்கோ, அருகிலுள்ள கடைக்கோ சென்று வருவது ஒரு stress relief factor. அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கினாலே போதும் என்று சொல்லி, செய்துகாட்டிய பிக் பஜார் கிஷோர் பியானி போன்றவர்களும் இதே சந்தையில்தான் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

வாஸ்து கொடுமைகள்

வாழறதுக்குத்தான் வாஸ்து என்று சொல்லிக்கொண்டே பேழறதுக்கும் வாஸ்து பார்த்து உட்கார வேண்டிய நிலைமை. அந்த காலத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கப் போகும்போது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி உட்கார்ந்தால் அந்தரங்க இடங்களில் வெயில் படும், அதனால் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாது என்பதால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து உட்கார்ந்தனர். சூரிய பகவான் பார்க்கும்படியாக உட்கார்ந்து மலம் கழிப்பது பாவம் என்றும் சொல்லப்பட்டது.

இன்றும் அதையே பிடித்துக்கொண்டு பேஸ்மெண்ட்டில் கழிவறை கட்டினாலும் சரி, அடுக்ககத்தில் பதினைந்தாவது மாடியில் கட்டினாலும் சரி தென்வடலாக பீங்கானைப் பதிப்பது, தொன்மம் என்றபெயரில் மூட நம்பிக்கைகளைப் நம் மக்கள் எவ்வளவு தூரம் பாதுகாத்து வைத்திருக்கின்றனர் என்பதற்கு சான்று.

உயர்மட்ட தண்ணீர் தொட்டி தென்மேற்கு திசையில் அமையவேண்டும் என்பதும் ஐதீகம், வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி 99.99% சதவீத வீடு, தொழிற்சாலைகளில் இன்றும் அப்படியே அமைத்து வருகின்றனர்.

படுக்கை அறை கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் அமையவேண்டும் என்பதும் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி அத்தனை வீடுகளிலும் மேற்குப் புறமாகவே படுக்கையறை அமைக்கப்பட்டு மக்கள் இரவு உறங்கச் செல்கின்றனர்.

அதே நேரத்தில் பிராமணர்களின் வீடுகளில் படுக்கையறை கிழக்கிலும், சூத்திரர்களுக்கு மேற்கிலும் இருக்கவேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் சொல்வதாக சொல்லப்படுகிறது.

கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் தண்ணீர் தொட்டி, படுக்கையறை அமையும்போது இயல்பாகவே தண்ணீரும் சூடாக இருக்கும், படுக்கையறையும் சூடாகவே இருக்கும். இதை மட்டுப்படுத்த ஏ.சி., ஃப்ரிட்ஜ் போன்றவற்றை பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டடாயத்துக்கு சூத்திரர்கள் தள்ளப்படுகின்றனர் என்பதும் உண்மை.

மேலைநாடுகளில் மிகப்பெரிய ஸ்கைஸ்கேரப்பர் வகைக் கட்டிடங்களை வடிவமைக்கும்போது கரையான் புற்று, தேன்கூடு போன்றவற்றில் உள்ள ventilation mechanism-த்தின் சூட்சுமங்களைப் பயன்படுத்தி குறைந்த ஆற்றலில் தட்பவெப்பநிலையை பராமரிக்கும் விதமாக அமைக்கின்றனர். ஆனால் நம்மைப் போன்ற வெப்ப மண்டல நாட்டில் வாஸ்து என்றபெயரில் மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர்.

தேவையில்லாமல் கதவை, ஜன்னலை உடைத்து வேறு இடத்தில் பொருத்துவது, சம்பந்தமே இல்லாமல் வாசற்படியின் எண்ணிக்கை மாற்றினால் நம்முடைய தரித்திரம் நீங்கிவிடும் என்று அதை உடைப்பது, மூலைக்குத்து இருக்கக்கூடாது என்று பொருந்தாத இடத்தில் கேட் போட்டு காரை சுவரில் உரசிக் கோடு போட்டுக்கொண்டு டிங்கரிங் பட்டறையில் உட்கார்ந்திருப்பது, மதில் சுவரில் ஒரு காடி எடுத்து பிள்ளையார் சிலையை வைத்து கண் திருஷ்டியை டைவர்ட் செய்யும் தொழில்நுட்பம் என்று இருந்த வாஸ்து இன்று அலங்கார வண்ண மீன்களின் மீதும் வந்துவிட்டிருக்கிறது.

தொழிற்சாலைகளில் இயந்திரங்களை நிறுவும்போது நமது செளகரியத்தையும், பாதுகாப்பையும் பார்க்காமல் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதால் ஏற்படும் இழப்புகள் நம் நாட்டில் ஏராளம். புதிய விமானம், கப்பல் போன்றவற்றை வெள்ளோட்டம் விடும்போது எலுமிச்சம்பழம் கட்டிவிடும் நாடு நம்முடையது என்பதை மறந்துவிடக்கூடாது.

விஞ்ஞான வாஸ்து என்று சொல்லி ஒப்பேற்றி வயிறு வளர்ப்பவர்கள் அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞான கோட்பாடுதான் என்னவென்று ஒருபோதும் சொல்வதில்லை. காஸ்மிக் அலை, மின்காந்த அலை, எண்ண ஓட்டங்களின் அலை என்று எதையாவது கலந்துகட்டி அடித்துவிடுவதில் மட்டுமே அவர்கள் நிபுணர்கள்.

ஆந்திரா வாஸ்தும், தமிழ்நாட்டு வாஸ்தும் கணிசமாக வேறானது என்பதால் கோயமுத்தூரில் உள்ள நாயக்கர்மார்களின் கம்பெனியில் வாஸ்து compliance பார்த்து முடிப்பதற்குள் இடைநிலை மேலாளர்கள் இரண்டு கிலோ இளைத்துவிடுகின்றனர் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

புதிய ஊர்களுக்கு செல்லும்போது தமிழகத்தைப் பொறுத்தவரை யாரிடமும் வழி கேட்காமல், கூகுள் மேப் போடாமல் எந்த திசையில் சொல்ல வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஆங்காங்கே வீடுகளின் மேல் உள்ள தண்ணீர் தொட்டிகளைப் பார்த்துக்கொண்டு சென்றாலே போதுமானது. அத்தனை உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளும் தென்மேற்கு திசையிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.

ஏதாவது வீட்டுக்குள் ஒரு நபரைக் கடத்தி வந்து கண்ணைக் கட்டி அடைத்து வைத்திருந்தாலும் கழிவறையின் பீங்கான் தென்வடலாகவும், படுக்கையறை வீட்டின் மேற்குப்பகுதியிலும், சமையலறை தென்கிழக்கு மூலையிலும் இருக்கும் என்ற வாஸ்து சாஸ்திர விதியின்படி பிரதான கதவு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை ஊகித்து மிகச் சாதாரணமாக வெளியேறலாம் எனும்போது தமிழ் சீரியல்களில் மட்டும் ஏன் ஒவ்வொரு அறையாக, கதவு கதவாகச் சென்று திறந்து பார்த்து வில்லன் வரும்வரை நேரத்தை வீண்டிக்கிறார்கள் என்பது மட்டும் புரியவே மாட்டேங்கிறது!

வானூர்தி வாழ்விகள் குறித்து சிறு குறிப்பு வரைக

இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாக காணப்படும் வானூர்தி நிலைய வாழ்விகள் குறித்து ஐநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைக.

பார்ப்பதற்கு பயங்கரமான விலங்காகக் காட்டிக்கொள்ளும் வானூர்தி நிலைய வாழ்விகள் பெரும்பாலும் மிதவெப்ப மண்டல உயிரினங்களாகும். ஆண் விலங்கானது கனத்த தொப்பையுடனும், தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசியவாறும், முகத்தில் கொஞ்சூண்டு பிரெஞ்சு தாடியும், கையில் ஐஃபோனையும், முதுகில் ஒரு லேப்டாப் பையையும் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கும். கண்ணைக் கட்டிவிட்டாலும் Bar இருக்குமிடத்தை வாசனையை வைத்துக் கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை.

பெண் விலங்கானது அடிக்கடி அழகு நிலையத்தில் ஃபேசியல் பிளீச்சிங் செய்யப்பட்ட சருமத்துடனும், straightening செய்யப்பட்டு கருப்பு சாயம் ஏற்றப்பட்ட தலைமுடியுடனும், கழுத்தில் ஒரு முத்து மாலையும், கையில் ஒரு ஐஃபோனுமாக, ஒன்றரை வரி ஆங்கிலத்திலும் அரை வரியைத் தாய் மொழியிலும் பேசியவாறு காணப்படும். Contemporary Ethnic ஆடைகளுடன் இருந்தாலும் Modern outfit அணிந்த சக விலங்குகளை ஓரக்கண்ணால் பார்த்து லேசாக புகைந்தவாறே இருக்கும்.

பெரும்பாலும் நட்சத்திர ஓட்டல்களிலும் விமான நிலையங்களிலும், எப்போதாவது அலுவலகத்திலும் காணப்படும் வானூர்தி நிலைய வாழ்விகளின் குறிப்பிடத்தக்க பண்புக்கூறுகள் பின்வருமாறு:

1) கார்ப்பரேட் கம்பெனி ஊழியமாக இருந்தால் தான் இல்லாவிட்டால் கம்பெனியில் எதுவுமே இயங்காது என்று பில்டப் கொடுத்தவண்ணம் காணப்படும். அரசாங்கப் பணியில் இருக்கும் உயிரினமாக இருந்தால் எப்போதும் சிடு சிடுவென்று உர்ர் என்ற முகத்துடன் காணப்படும்.

2) இந்தி மட்டும் தெரிந்திருந்தால் பொளந்து கட்டியிருப்பேன் என்று அடிக்கடி ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருக்கும்.

3) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு SOPs, protocols, manners & etiquettes குறித்து வகுப்பு எடுத்தவண்ணம் இருக்கும். ஆனால் தான் எதையும் பின்பற்றாது.

4) வானூர்தியின் சக்கரம் ஓடுதளத்தை தொட்ட அடுத்த நொடியே சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு எழுந்து, லக்கேஜை எடுத்துக் கொண்டு, வயிற்றை இந்தப்பக்க சீட்டில் இருப்பவன் மீதும், பிட்டத்தை அந்தப் பக்க சீட்டில் இருப்பவன் மீதும் இடித்துக்கொண்டு நிற்கும்.

5) தனியார் கம்பெனி ஊழியம் பார்க்கும் உயிரினமாக இருந்தால் தான் தங்கப்போகும் ஓட்டலின் மகிழுந்து ஓட்டுனர் கையில் பெயர் பலகையுடன் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். அரசாங்க ஊழியம் பார்க்கும் உயிரினமாக இருந்தால் தமக்குக் கீழே உள்ள அதிகாரிகள், வரவேற்பதற்கு சந்தன மாலையுடன் நிற்க வேண்டும் என்று மனதுக்குள் எதிர்பார்த்த வண்ணம் காணப்படும். ஆனால் வெறும் வாயளவில் “இதெல்லாம் எதுக்கு மேன், I’m a very simple person you know” என்று சொல்லிக்கொள்ளும்.

6) சொந்தப் பணத்தில் வானூர்திப் பயணம் செய்வதாக இருந்தால் இங்கிருந்து பஸ் ஸ்டாப் எவ்வளவு தூரம் இருக்கும் என்று விசாரித்துக்கொண்டிருப்பதை காணலாம்.

7) யாராவது தெரிந்த நபர்களை வானூர்தி நிலையத்தில் சந்தித்தால் voila! என்றெல்லாம் வேறு கண்டங்களில் பேசப்படும் மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி சப்தமிடும். அதற்கு அந்த உயிரிகளும் விக்சனரியில் அர்த்தம் என்னவென்று பார்த்து “என்னமோ இவனோட அப்பத்தா பிரான்ஸ்ல ரெண்டு கப்பல் வாங்கி ஓட்டிகிட்டு இருந்தமாதிரிதான் பில்டப் தர்றான்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் ‘Your command in English is superb Sir’ என்று சொல்லிவிட்டுச் செல்வதைக் காணலாம்.

8)பேன்ட்ரியில் ட்யூப் லைட் எரியவில்லை என்று யாராவது கூறினால் கூட Drop me an email, I’ll approve right away என்றுதான் சொல்லும். ஆனால் ஒரு வாரம் கழித்து கேட்டாலும் when did you sent the mail, man? என்றே கேட்கும்.

9) வருடத்திற்கு 150 வேலை நாட்களுக்கு OoO போட்டு வைத்திருக்கும். தான் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு High Importance, Read receipt இல்லாமல் அனுப்பாது. தேவை இல்லாவிட்டாலும் அத்தனை பேருக்கும் cc இருக்கும்.

10) தவிர்க்க முடியாத காரணங்களால் வானூர்தி தாமதமானால் அங்கிருக்கும் ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் அனாவசியமாக சலம்பல் ஒலி ஏற்படுத்தும். ”அந்தக் கடைசியில் இருக்கும் உணவகத்தில் போர்டிங் பாஸைக் காட்டினால் டோஸா காம்ப்ளிமெண்டரியாகக் கிடைக்கும்” என்றால் உடனே அமைதியாகி உணவகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடும்.

11) வீட்டில் இட்லி, வடை, மசால் தோசை என்று அள்ளி உள்ளே தள்ளி ஏப்பம் விட்டுவிட்டு, அலுவலகத்தில் கிளெய்ம் செய்து கொள்ளலாம் என்பதால் வானூர்தி நிலையங்களில் இட்டாலியன் சாலட் என்ற பெயரில் 500 ரூபாய் கொடுத்து இலைதழைகளை வாங்கித் தின்று கொண்டிருக்கும்.

12) தனியார் நிறுவனம் ஆனாலும் சரி அரசாங்க அலுவலகமானாலும் சரி, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்த வானூர்தி நிலைய வாழ்விகள் நட்சத்திர ஓட்டல்களிலும், வானூர்திகளிலுமாக பெருமளவு பட்ஜெட்டை காலி செய்துவிட்டு கீழே இருப்பவர்களிடம் Cost control என்ற பெயரில் உயிரை வாங்கும். இந்த உயிரினங்களது ஆண்டு விமானக் கட்டணத்தை விடக் குறைவான சம்பளம் வாங்கும் பொடியன்களுக்கு மூவாயிரம் ரூபாய் இன்கிரிமென்ட் போடுவதற்கு பட்ஜெட் இல்லை என்று இராகம் பாடுவது மிகவும் முக்கியமான பண்புக்கூறாக அறியப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தப்படுவது ஏன்?

கார்ப்பரேட் கம்பெனிகள் நிலங்களை வாங்கி, விவசாயிகளை அப்புறப்படுத்தி விடுவார்கள் என்ற ஊகம் வெகு காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் அப்படி நடக்குமா நடக்காதா என்று சொல்வதற்கே இன்னும் இருபது ஆண்டுகளாவது ஆகும்.

சிறு விவசாயிகளுக்கு இன்று உருவாகி வரும் பெரிய அச்சுறுத்தல் என்பது நகரிலிருந்து வந்து நிலங்களை வாங்கும் புதுப் பணக்காரர்கள்தான். நிலம் வாங்கிய கையோடு கம்பி வேலி அமைத்து, புதிதாக அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைத்து/கிணறு வெட்டி ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்வது அல்லது தென்னை மரங்களை நடுவது என தீவிரம் காட்டும்போது முதலில் அடி வாங்குவது அங்குள்ள நிலத்தடி நீர்மட்டம்.

தண்ணீர் கீழே செல்லும் வேகத்துக்கு அந்தப் பகுதியில் இரண்டு ஏக்கர், நான்கு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்திவரும் விவசாயிகளால் தொடர்ந்து போர்வெல் போட/கிணறு வெட்ட முதலீடு செய்ய முடியாது.

மின்சார வாரியம் தட்கல் மின் இணைப்பு மூலம் ஒருமுறை செலுத்தும் கட்டணமாக இரண்டரை இலட்சம், இரண்டேமுக்கால் இலட்சம், மூன்று இலட்சம் கட்டினால் முறையே ஐந்து, ஏழரை, பத்து குதிரைத்திறனுள்ள மின் இணைப்பை ஒரு மாதத்தில் வழங்குகிறது. பணம் கட்டினால் உடனடியாக இலவச மின்சாரம். அஃதே இலவச இணைப்புக்கு பதினைந்து வருடங்களுக்கு மேலாக காத்திருப்பவர்கள் காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதில் மிக அதிகமாக நசுங்கி வேறு வழியே இல்லாமல் முதலில் வெளியேறுவது கூட்டுப் பண்ணைய விவசாயிகள். எழுபதுகளில் அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பங்காளி வகையறா என கூட்டாக நிலம் வாங்கி, கிணறு வெட்டி விவசாயம் செய்தவர்களின் வாரிசுகள், பேரப்பிள்ளைகள் தங்களது மூதாதையர்களைப் போல சகிப்புத்தன்மை இல்லாததாலும், கல்வியாலும், புதிய தொழில்களுக்குச் சென்றதாலும் கூட்டுக் கிணறுகளில் தங்களது முறைக்காகக் காத்திருக்கத் தயாரில்லை. இத்தகைய கிணறுகளை ஆழப்படுத்துவதோ, புதிய போர்வெல் போடுவதோ இன்று நடக்கக்கூடியதாகத் தெரியவில்லை.

கூட்டுப் பண்ணைகளின் அடுத்த பெரிய சிக்கல் வாகனங்கள் சென்றுவரத் தேவையான பெரிய பாதை (வண்டித் தடம்). அந்தக்காலத்தில் தலைச்சுமையாக எடுத்துச் சென்றதாலும், டிராக்டர்கள் இல்லாததாலும் யாரும் பெரிய பாதைகளைக் கண்டுகொள்ளவில்லை. பங்காளிகளுக்குப் பெரிய வில்லங்கத்தை விட்டுச் செல்வதற்காக வலியச்சென்று வெளியாட்களுக்கு விற்கும் கூட்டாளிகள் உண்டு. அதனால் மற்றவர்களும் தடப் பிரச்சினை காரணமாக வேறு வழியில்லாமல் விற்கின்றனர். இத்தகைய தோட்டங்கள் விரைவாக நகரிலிருந்து முதலீடு செய்பவர்களிடம் கைமாறிக் கொண்டிருக்கின்றன.

விவசாயம் அழிந்து வருகின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. பத்து குடும்பங்கள் செய்த விவசாயத்தை ஒரு குடும்பம் செய்ய ஆரம்பிக்கின்றது. சிறு குறு விவசாயிகள் கிடைக்கப்போகும் மிகச்சிறிய இலாபத்துக்காக தொடர்ந்து முதலீடு செய்வதைக் காட்டிலும் வேறு தொழில்களுக்குச் செல்வதே உகந்தது என்பதை உணரும்போது அவர்களாகவே வெளியேறி விடுகின்றனர். ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் உள்ளவர்களின் வாரிசுகள் இன்று நேரடியாக விவசாயத்தில் இல்லாததே இதற்கு சான்று. பெருமைக்கு எருமை மேய்க்கும் வறட்டுக்கிராக்கி ஆசாமிகளை இந்த இடத்தில் விவாதப் பொருளாக்க வேண்டாம்.

இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில் விவசாயம் என்பதால் அதில் இருக்கும் மக்களுக்கு வேறு நல்ல மாற்று வேலை கிடைக்கும்வரை அதில் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அரசாங்கம் மானியத்தை அள்ளி வீசி மிகப்பெரிய மக்கள்தொகையை under productive ஆக வைத்துக்கொண்டிருக்கிறது.

வாழ்வியல் முறை, வாழ்வாங்கு முறை, டிராக்டர் சாணி போடுமா என எகத்தாளம் பேசி, ஊரான் வீட்டுப் பண்ணைகளுக்கு அட்வைஸ் மட்டுமே வழங்கிவிட்டு, தான் ஒரு ஏக்கர் கூட பண்ணையம் பண்ணி பார்த்திராதவர் நம்மாழ்வார் ஐயா. அவரது வழியொற்றி வரும் பக்தாக்களுக்கு ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்துக்கு பைப்லைன் அமைக்க, ஒரு புதிய மின்கம்பம் போட ஒரு சிறு விவசாயிக்கு மற்ற சக சிறு விவசாயிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தோ, மற்ற பிரச்சினைகள் குறித்தோ எந்த புரிதலும் இருக்காது. இயற்கை விவசாயம் பண்ணுனா உலகத்துல இருக்கற எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும் என்பார்கள்.

நகரத்தில் பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டு சம்பாதிப்பவர்கள் கணிசமான பணத்தை கிராமப்புறங்களில் உள்ள நிலங்களில் முதலீடு செய்து அதன்மூலம் வருமானம் வராவிட்டாலும், வந்த மாதிரி கணக்கு காட்டி கணிசமான பணத்தை வெள்ளையாக்கவோ, வரி ஏய்க்கவோ பயன்படுத்துகின்றனர். அதாவது இலாபத்துடன் இலாபமாக சேரும் அந்த தொகையுடன் சிறு குறு விவசாயிகள் போட்டியிட்டு முதலீடு செய்ய முடியாது.

அதிகரித்துவரும் செலவினங்களுக்கு இணையாக முதலீடு செய்து குறைந்த இலாபத்தையோ, நட்டத்தையோ சந்திப்பதைக் காட்டிலும் வெளியேறுவது என்பது இயல்பாக நடக்கவே செய்யும். மற்ற தொழில்களுக்கும் அதுதானே. பெருமைக்காக எவ்வளவு காலம் பல குடும்பங்களை under productive ஆக வைத்திருப்பது? வாழ்வியல் முறை, தகிட ததமி தகிட என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்லும் வேலை. நாலு காசு சம்பாதிக்க துப்பில்லாத பயல் என்று ஒருநாள் சொந்தக் குடும்பமே தூற்றும் அல்லவா?

அமெரிக்க ஐரோப்பிய வர்த்தக யுத்தம் – தேவையில்லாமல் உடைக்கப்படும் ஃபர்னிச்சர்கள்!

மான்செஸ்டரிலுள்ள ஆலைகளுக்கு தரமான பஞ்சு கிடைப்பதற்காக 1880-களில் ஆங்கிலேயர்களால் ஐதராபாத்தில் கரன்ஜியா பருத்திச் சந்தை உண்டாக்கப்பட்டது. அதன்பின் பல சட்டங்கள் பருத்தி வியாபாரத்தை ஒழுங்குபடுத்த ஐதராபாத்திலும், பம்பாய் மாகாணத்திலும் இயற்றப்பட்டு வர்த்தகம் கண்காணிக்கப்பட்டு வந்தது. உலகளவில் பருத்தி, சர்க்கரை, புகையிலை, சணல், ஓப்பியம் மட்டுமே பல தொழிற்சாலைகளும், வணிகமும், பல போர்களும் உருவாகக் காரணமாக இருந்த தொழிற்புரட்சிக்கான முதலாளித்துவ சரக்குகள்.

அதன் வியாபார பின்னணியில் உற்பத்தியை உயர்த்த பல வீரிய இரகங்கள், பூச்சிகொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தையில் இறக்கிவிடப்பட்டன. அண்மையில் மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பம் பூச்சி, களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் என பல்வேறு முகங்களோடு வளர்ந்து வருகிறது.

உலகளாவிய ஆடை இழைச் சந்தையில் பருத்தி, செல்லுலோஸ், லினன், பட்டு என இயற்கையாக கிடைக்கும் எல்லா apparel fibre-உம் மொத்தமாகச் சேர்த்து சுமார் 35% மட்டுமே பங்களிப்பு செய்கின்றன. மீதம் 65% சந்தை பாலியெஸ்டர், பாலிஅமைட் போன்ற செயற்கை இழைகளால் (synthetic fibre) ஆளப்பட்டு வருகிறது. அவற்றிற்கான மூலப்பொருள் பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஆலைகளின் பின்னணியில் இருந்து வருகிறது. சுமார் பத்து சதவீதம் இயற்கை இழைகளின் பங்கு உயர்ந்தால் சின்தெடிக் ஃபைபர் சந்தை எப்படி எதிர்விளைவு ஆற்றும் என்பதை உலக சந்தையின் போக்கை கவனிப்பவர்கள் அறிவார்கள்.

இயற்கை இழைகளை உற்பத்தி செய்ய, தரம் பிரிக்க, நூற்க என பலகட்ட வேலைகள் இருப்பதால் இலாபமும் பலகட்டமாக பிரித்துக்கொள்ளப்படுவது இயல்பு. ஆனால் சின்தெடிக் ஃபைபர் இரண்டு மூன்று ஆலைகளுக்குள்ளேயே முடிந்துவிடுவதால் அதன் இலாப விழுக்காடுகளையும், அதைக் கட்டுப்படுத்தும் சக்திகளையும் அரசாங்கங்களால் அவ்வளவு எளிதாக அடக்கி ஆள முடியாது.

மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு எதிராக இயங்கும் காரணிகளில் முதலில் வருவது கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட சின்தெடிக் ஃபைபர் சந்தையைக் கையில் வைத்திருக்கும் சக்திகள். இதுகுறித்து உலக இலுமினாட்டிகள், ஈயம் பித்தளைச் சட்டிகள், யானையணிகளை ஆராயும் குழுக்கள் உட்பட இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் இயற்கை இழை ஆர்வலர்கள் உட்பட யாரும் பேசுவதே இல்லை. அவர்களது நன்கொடைகளின் ஆதரவுடன் பி.டி. பருத்திக்கு எதிராக செயல்படும் NGO-க்கள் மறந்தும் செயற்கை இழைகளைக் குறித்து பேசா.

அடுத்து வருவது பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையைக் கையில் வைத்திருக்கும் இரசாயன நிறுவனங்கள். பூச்சிகொல்லி விற்பனைக்கு பருத்தி மிக முக்கியமான பயிர். அதை இழப்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது. அவர்களது offshore companies மூலமாக வரும் நன்கொடைகளையும் எந்த ஒரு சமூக சேவை அமைப்பும் வெளியிடாது.

எவ்வளவு பெற்றோம் என்றுகூட சொல்ல வேண்டாம். யார் யாரிடம் நன்கொடை பெற்றோம் என்ற தகவலைக் கூட வெளியிடாத பல NGO-க்கள், லெட்டர்பேட் அமைப்புகள் பொதுவெளியில் கொக்கரிப்பதைப் பார்க்கும்போது எதில் சிரிப்பது என்று தெரியவில்லை.

பாரம்பரிய விதைத் திருவிழாக்கள் நடத்துவதன் மூலம் பல அரிய germplasm வணிக நோக்கங்களுக்காக எளிதாக கைமாறுகிறது. இதை ஒருவகையில் திருட்டு என்றுகூட சொல்லலாம். பதிவு செய்யப்படாத – விவசாய சேவை செய்யும் – லெட்டர்பேட் அமைப்புகளில் திருடர்கள் உண்டு என்று சொல்பவர்களைக்கூட கார்ப்பரேட் கைக்கூலி என்று சொல்லும் கோமாளித்தனம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்!

களைக்கொல்லி எதிரப்புத்திறன் கொண்ட பருத்தி இரகங்களை வெளியிடாமல் இராயல்ட்டி விவகாரங்களில் அரசாங்கம் உள்நோக்கத்துடன் தலையிட்டு மான்சாண்டோவைப் பின்வாங்க வைத்ததுடன் மொத்தமாக இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்ல வைத்தது. ஆனால் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் மரபணு கொண்ட பல இட்சம் பாக்கெட்டுகள் திருட்டுத்தனமாக சந்தையில் இந்த ஆண்டு விற்றது. அந்த திருட்டு வியாபாரத்தில் மிகப்பெரிய இந்திய கம்பெனிகள் கூட ஈடுபட்டன. தமிழகத்திலும் விற்பனையானது. இந்த ஆண்டும் விற்பனையாவதாகத் தெரியவருகிறது.

பாக்கெட்டுக்கு மூன்று நான்கு டாலர் இராயல்ட்டி கிடைக்கவேண்டிய ஒன்றை எந்த நிறுவனமும் சும்மா சந்தையில் விட்டுவிடாது. ஆனானப்பட்ட மான்சன்டோ போன்ற கம்பெனிகளிடமே இரகங்களைத் திருடி, மறு உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடிய திறன் உடைய சந்தை சக்திகளுக்கு பாரம்பரிய விதைத் திருவிழாவில் திருடுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி! இன்னும் எப்படி விளக்கமாக சொல்ல முடியும் என்று தெரியவில்லை.

புதிய ஜீன்களை ஆராய்ச்சி செய்யும்போது பலதரப்பட்ட காரணிகளை பெரும் பொருட்செலவில் ஆராய்ச்சி செய்வார்கள். தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சி முடிவுகள் 99% வெளியிடப்படாது. அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொதுவெளியில் மக்கள் நினைப்பது இயல்பு. உதாரணமாக பருத்தி காய்ப்புழுக்கள் பருத்திச் செடியை உண்டனவா அல்லது வேறு ஏதாவது செடியை உண்டு வளர்ந்தனவா என்பதை வயல்களில் பறக்கும் தாய் அந்துப்பூச்சிகளைப் பிடித்து அதன் இறக்கைகளில் உள்ள பொடியை எடுத்து அதன் gossypol அளவுகளை மிக அதிக திறன்வாய்ந்த துல்லியமான கருவிகள் மூலம் அளவிட்டு முடிவு செய்வார்கள். இந்தியாவில் உள்ள பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எதிலும் இல்லாத இயந்திரங்கள் மான்சாண்டோ போன்ற நிறுவனங்களில் உண்டு. ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏதும் வருவதில்லை என்பதற்காக பல நேரங்களில் பொதுமக்கள் குறைத்து மதிப்பிடுவது இயல்பு.

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் பிரச்சினை எழுந்த பின்னணியும் சுவாரசியமானது. நூடுல்சில் காரீயம் இருக்கிறது, கண்ணாடித்தூள்கள் இருக்கிறது, அஜினோமோட்டோ இருக்கிறது என்று பரபரப்பாக எழுதினார்கள். அந்நேரத்தில் பதஞ்சலி நூடுல்ஸ் வளர்ந்தது வேறு கதை. அந்த கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆய்வகத்துக்கு NABL அங்கீகாரம் கூட கிடையாது, அதே முடிவுகளை அவர்களால் திரும்பத் தர இயலவில்லை.

காரீயம் இருக்கிறது என்பதை இந்தியில் சொன்னவர்கள் சீசா என்று சொல்ல அதைக் கண்ணாடி என்று எழுதிவிட்டனர். இரண்டுக்கும் இந்தியில் சீசாதான்! மேட்டர் ஓவர். யாருக்கும் பொறுமையில்லை. ஒரு பிராண்டு அடித்து நொறுக்கப்பட்டது. நீதித்துறையில் innocent until proven guilty என்பார்கள். ஆனால் பணமதிப்பிழப்பு மூலமாக மோடி அதை guilty until proven innocent மாற்றி ரொக்கம் வைத்திருக்கும் அத்தனைபேரையும் அயோக்கியன் என்று முத்திரை குத்தியது மாதிரிதான் நடந்தது.

தற்போது மான்சாண்டோவின் கிளைஃபோசேட் களைக்கொல்லி புற்றுநோயை உண்டாக்கிவிட்டது என்று ஒருவர் தொடர்ந்த வழக்குக்காக பல மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கின் பின்னணி சுவாரசியமானது. ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் மான்சாண்டோவைக் கையகப்படுத்திய பின்னரே இந்த பெரிய தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. என்னமோ இதுதான் கிளைஃபோசேட்டுக்கு எதிரான முதல் வழக்கு என்பது மாதிரி நீதிபதிகள் அபராதம் விதித்தனர். இது காலங்காலமாக அமெரிக்காவும் ஐரோப்பாவுக்கும் நடந்துவரும் மறைமுக வர்த்தகப் போர். இதேநேரம் பேயர் மான்சாண்டோவால் கையகப்படுத்தப்பட்டிருந்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.

நள்ளிரவில் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து திருமுருகன்காந்தியைக் கைது செய்ததற்கு சொல்லப்பட்ட காரணம் மாதிரிதான் இதுவும்.

பல வருடங்களாக கோவிலில் மணி ஆட்டிய அர்ச்சகர் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிடுகிறது. அதற்கு காரணம் கற்பூர வாசனைதான் என்று ஒரு நிறுவனம் ஆராய்ச்சி செய்து கற்பூரம் ஒரு கார்சினோஜன் என்று ஆராய்ச்சி முடிவு எழுதினால் நீதிபதிகள் கற்பூரம் தயாரிக்கும் கம்பெனிக்கு அபராதம் விதிப்பாரா? டீ மாஸ்டர் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால் சர்க்கரைதான் காரணம் என்று ஆலைகளின் மீது நீதிபதிகள் அபராதம் விதிப்பாரா?

மிகச் சிக்கலான ஆராய்ச்சி முடிவுகளுக்கு வழக்கு தள்ளுபடி, இழப்பீடு அபராதம், தடை என நீதிபதிகள் முடிவு செய்வதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் முக்கியமானது.

ஆடை உற்பத்தியில் இயற்கை இழைகள், செயற்கை இழைகள் இடையிலான போட்டி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் வர்த்தக யுத்தம் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதில் நமது மோடி அரசாங்கம் தேவையில்லாமல் சில பர்னிச்சர்களை உடைத்து வைத்திருக்கிறது. வணிக பின்னணிகளைத் தொடர்ந்து உற்றுநோக்குவோம்; சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு role எதுவும் இதில் இல்லை.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து பலரும் கவலை தெரிவித்தாலும் சில அருவருப்பான கருத்துக்களையும் பார்க்கமுடிகிறது. சம்பளம் பத்தலன்னா வேற வேலைக்கு போலாம்ல, இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவனுக்கெல்லாம் போராட தகுதி உண்டா, கடைசியில் வழக்கமான பல்லவியான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மாதிரி சில.

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாமே என்று போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனரைப் பார்த்து கருத்து முத்தை உதிர்ப்பவர்கள் நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்களைவிட கீழான தற்குறிகள். அவர்களுக்கு கீழ்மட்டத்திலிருக்கும் தொழிலாளர் சமூக இயக்கத்தைப் பற்றிய புரிதல் துளியும் கிடையாது என்றே சொல்லலாம்.

ஓட்டுனர், நடத்துனர் அத்தனைபேரும் தங்களது குலத்தொழிலைவிட்டு வெளியேறி ஏற்றுக்கொண்ட ஒரு நாகரிகமான ஆரம்பகட்ட தொழில். ஏதாவது ஒரு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் படிப்பை முடித்தோ முடிக்காமலோ தட்டுத்தடுமாறி அடைந்த தொழில். யாருக்கும் டிரைவர் ஆகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் இருக்காது; ஒரு வேலைக்கு அலைமோதுபவர்களை தானாகவே இழுத்துக்கொள்ளும் தொழில்.

இன்றைய தேதியில் போர்வெல் லாரிகளில் பணிபுரியும் டிரில்லருக்கு மாதம் முப்பதாயிரம் சம்பளம். குறைந்தது ஒரு இலட்சம் அட்வான்ஸ்; கார்ப்பரேட் வார்த்தையில் சொன்னால் அது இம்ப்ரெஸ்ட் கேஷ். வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் (இதன் டெக்னிகல் டெர்ம் லைன் வண்டி) கேஸ்/பெட்ரோல் டேங்கர், டிரைலர், காற்றாலை விசிறி லாரி ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் இருபதாயிரம். BE படித்தவனுக்கு 10000 சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது டிரைவர்களுக்கு ஆரம்ப சம்பளமே 20000 என்பது போதாதா என்ற கேள்வி எழக்கூடும்.

வேறு தொழிலில் புகாமல் குலத்தொழில் செய்யும்போது எப்படி ஒரு இழிவான பார்வை சொந்த சாதிக்காரர்களாலேயே வைக்கப்படுகிறதோ அதே பார்வைதான் லைன் வண்டி ஓட்டுனர்களுக்கும். விவசாயந்தான் பண்றான், சலூன்கடைதான் வச்சிருக்கான், ஸ்வீப்பராத்தான் இருக்கான் என்ற அளவில்தான் டிரைவராத்தான் போறான் என்ற அங்கீகாரமும். கல்யாண சந்தையில் ஒரு VAO சம்பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஓட்டுனர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். அந்த ஒரே காரணத்துக்காக கல்யாணம் ஆகும்வரை CL Driver-ஆக லாரி கிளீனர் சம்பாதிப்பதைவிட குறைவான சம்பளத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்றனர். சிலர் மினி ஆட்டோ ஓட்டுவது, ஜேசிபி, பால்வண்டி, டேக்ஸி என நாட்களைக் கடத்துகின்றனர்.

நல்ல வேலையும் அமையாமல், திருமணமும் செய்யமுடியாமல், சொற்ப சம்பளத்தில் படிக்கவும், வேலைக்கும் செல்லும் பெண்களை எந்நேரமும் பார்த்துக்கொண்டே பணிபுரிவது முப்பதைத் தொடும் இளைஞர்களுக்கு நரகம். PhD முடித்துவிட்ட ஒரே காரணத்துக்காக பல்கலைக்கழகமே வேலைபோட்டுத் தரவேண்டும், வெளியில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் போகமாட்டேன் என்று தடித்தனத்துடன் பொழுதைக்கழிப்பவர்களுடன் ஓட்டுனர், நடத்தனர்களை ஒப்பிடுவது சாடிஸ்ட் மனநிலை.

பி. எஃப், கிரிஜுட்டி, படி என்பதெல்லாம் தொழிலாளர்களின் உரிமை. ஒரு நல்ல முதலாளிக்கு தெரியும் திறமையான ஊழியர்கள் இருக்கும்வரைதான் தனக்கு ஃபைவ் ஸ்டார் வாழ்க்கை என்று. இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாத ஒரு தட்டையான மனநிலை கொண்ட ஒருசாரார் நம்மிடையே இருப்பது குறித்து அதிர்ச்சியடைய தேவையில்லை. கடைநிலை மக்களின் உபரியைச் சுரண்டி வளர்ந்த ஆண்டபரம்பரை சிந்தனை அவ்வாறுதானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதி, இட ஒதுக்கீடு குறித்து பேசும்போதெல்லாம் எல்லா உயர்சாதியினரும் பணக்காரர்கள் அல்லர்; பல பிராமணர்கள் வறுமையில் உழல்கின்றனர் என்ற வாதத்தை அடிக்கடி கேட்டிருக்கலாம். வறுமையில் உழன்றாலும் லாரி டிரைவராக, கிளீனராக இருக்கும் பிராமணரைக் கண்டதுண்டா? அப்படியெனில் அந்த தொழில் யாருக்கானது, ஏன் அதன்மீது இவ்வளவு வன்மம் என்பது எளிதாக விளங்கும்.

பவர் ஸ்டியரிங் இல்லாத டிராக்டரை ஓட்டிய அனுபவமிருந்தால் சாதாரண ஸ்டிரியங் உள்ள பேருந்தை ஓட்டுபவர்களின் உழைப்புகுறித்து யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். லைன் வண்டி ஓட்டுனர்களுக்காவது தூக்கம் வந்தாலோ, வயிற்று உபாதைகள் ஏற்பட்டாலோ தங்கள் விருப்பப்படி வண்டியை நிறுத்தமுடியும். ஆனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் அந்த பஸ் ஸ்டாண்டு ஓட்டல், கக்கூஸ் தாண்டி எதையும் கற்பனைகூட பண்ணமுடியாது. சம்பளம் கொடுக்கவே வழி இல்லாததால் அளவுக்கதிகமாக ஓவர்டைம் பார்க்கும் ஓட்டுனர் நடத்துனர்கள் படும் பாடு ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருமண அழைப்பிதழ்களில் TNSTC நடத்துனர், TNSTC ஓட்டுனர் என்று பெருமையாக போட்டுக்கொண்டாலும் அவர்களுக்கு கிடைக்காத கல்வியும், நல்ல வேலையும் அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்திருப்பதை அந்த அழைப்பிதழே சொல்லும். அதைத் தாண்டி கான்ட்ராக்டுகளில், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் ஓட்டுனர், நடத்துனர், டிக்கெட் செக்கர் போன்றவர்களுக்கும் கட்டிங் உண்டு என்பதெல்லாம் அளவுக்கதிமான இன்டெலெக்சுவல் ஹேவிளம்பியின் பின்விளைவுகள்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கேட்பது அவர்களுக்கு முறைப்படி வந்து சேரவேண்டிய பணத்தை. இன்று அதிமுக தொழிற்சங்க அணி சார்பாக பேருந்துகளை இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் உரிமைக்கும் சேர்த்துதான் இந்த பணிநிறுத்தம். ஏதோ ஒரு விமான நிலையத்தை இராஜ்கோட் பஸ் ஸ்டேன்ட் என்று போட்டோஷாப் செய்து போட்டு ஹேவிளம்பி செய்யும் கூட்டத்துக்கு இதெல்லாம் புரியாது.